https://gumlet.vikatan.com/vikatan/2022-07/b0ff0565-862e-4fbe-806c-91908f0e1c36/IMG_20220727_004240.jpgவிருதுநகர்: ரியல் எஸ்டேட் அதிபரிடம் செயின் பறித்த தீயணைப்பு வீரர் உள்பட 3 பேர் கைது!

விருதுநகர் லட்சுமிநகரை சேர்ந்தவர் கந்தசாமி(72), ரியல் எஸ்டேட் அதிபர். இவர் நேற்று முந்தினம் பிற்பகலில் பஜாருக்கு சென்றுவிட்டு மாலையில் தனது டூவீலரில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வெள்ளைநிறக் காரில் மர்மகும்பல் ஒன்று அவரை பின்தொடர்ந்து வந்துள்ளது. கந்தசாமி, வீட்டு வாசலில் தனது டூவீலரை நிறுத்தியவுடன் அவருக்கு பின்னால் காரில் வந்த மர்மகும்பலை சேர்ந்த மூன்றுபேர் கண்ணிமைக்கும் நேரத்தில் காரின் பின்பக்க கதவு வழியே தாவிக்குதித்து, அவரின் கழுத்தில் கிடந்த 16 பவுன் தங்கச்செயினை பறித்துச்சென்றனர்.

கைது

இதுகுறித்து ஊரக காவல் நிலையத்தில் கந்தசாமி அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக, வழிப்பறி சம்பவம் நடைபெற்ற லட்சுமிநகர் பகுதியில் வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில், காரிலிருந்து மங்கிக்குல்லா அணிந்தபடி 3 பேர் இறங்கி வருவதும், அதில் இரண்டுபேர் கந்தசாமியை பிடிக்க மற்றொருவர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 22 பவுன் செயினை பறித்துள்ளார். அப்போது கந்தசாமிக்கும் - கொள்ளையர்களுக்கும் இடையே நடைபெற்ற போராட்டத்தில் தங்கச்செயினிலிருந்து 6 பவுன் மதிப்புள்ள கொக்கியும், டாலரும் தனியே அறுந்து விழவும், கையில் சிக்கிக்கொண்ட செயினை மட்டும் பறித்துக்கொண்டு கொள்ளையர்கள் மூவரும் காரில் தப்பிச்சென்றது கேமரா காட்சிகளில் பதிவாகியிருந்தது.

மேலும், போலீஸிடம் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக காரின் நம்பர் பிளேட்டை கொள்ளையர்கள் தனியார் கம்பெனி விளம்பர ஸ்டிக்கர் கொண்டு மறைத்திருப்பது தெரியவந்தது. முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்ற செயின் 16 பவுன் எடை கொண்டது இதன்மதிப்பு 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் இருக்கும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை

தொடர்ந்து, வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க 4 தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படையினர் நடத்திய விசாரணையில், வழிப்பறிக்கு பயன்படுத்தப்பட்ட கார், விருதுநகரை சேர்ந்த தனியார் டிராவல்ஸ் கம்பெனிக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதையடுத்து டிராவல்ஸ் உரிமையாளரான ராஜ்குமார் என்பவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் கொடுத்த தகவலின் படி, விருதுநகர் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு படை வீரராக பணியாற்றி வரும் திருப்பதி தான் வழிப்பறிக்கு பயன்படுத்திய காரை அன்றையதினம் வாடகைக்குப் பெற்றுச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து திருப்பதியை பிடித்து விசாரித்ததில், அவர் மற்றும் அவரின் கூட்டாளிகள் கிருஷ்ணமூர்த்தி, அழகர் ஆகியோர் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டதும், மேலும் இதில் விருதுநகரை சேர்ந்த கருப்பு, சதீஷ், மகாலட்சுமி, ஈஸ்வரன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து வழிப்பறியில் சம்பந்தப்பட்ட 7 பேரையும் பிடித்து வந்த போலீஸார், அதில் திருப்பதி, கிருஷ்ணமூர்த்தி, அழகர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து வழிப்பறிக்கு பயன்படுத்திய கார் மற்றும் கந்தசாமியிடமிருந்து பறித்துச்சென்ற 16 பவுன் தங்கச் செயின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தோடு தொடர்புடைய மற்றவர்களிடம் போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி

கைதுசெய்யப்பட்டவர்களில் தீயணைப்பு வீரர் திருப்பதி, இதுபோன்ற பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறை அதிகாரியிடம் பேசினோம், "தீயணைப்பு வீரர் திருப்பதி, சொந்தமாக தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் வைத்து கடைகள் மற்றும் வீடுகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யும் தொழில் நடத்திவருகிறார். இவர்மீது துறைரீதியாக ஏற்கனவே மோசடி புகார்கள் உள்ளது. சமீபத்தில், தீயணைப்பு நிலையத்தில் மருத்துவ விடுப்பில் சென்றிருந்த உயரதிகாரியின் கையெழுத்து சீலை அவரின் ஒப்புதல் இல்லாமல் அவரின் அறையிலிருந்து திருடி மோசடிக்கு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனடிப்படையில், துறைரீதியான விசாரணையும் அவர்மீது நடத்தப்பட்டது. இந்தநிலையில் திருப்பதி தனது கூட்டாளிகளுடன், ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டது சி.சி.டி.வி.கேமரா காட்சிகள் மூலம் தெரியவந்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்" என்றார்.



from Latest News https://ift.tt/M5ob6SQ

Post a Comment

0 Comments