சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே காட்டுப்பகுதியில் முயல் வேட்டைக்குச் சென்ற தந்தை-மகன் உட்பட 3 பேர் மின்சார வேலியில் சிக்கி பலியாகினர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள முகவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் என்ற அய்ங்காளை(52), விவசாயி. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அஜித்(25) இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். இரண்டாவது மகன் சுகந்திரபாண்டி(23).

இவர்கள் முன்று பேரும் சிவகங்கை மாவட்ட எல்லை அருகே உள்ள மாரநாடு வயல்வெளி பகுதியில் நேற்று இரவு முயல் வேட்டைக்கு சென்றதாகத் தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக காட்டுப்பன்றிக்கு வைத்திருந்த மின்கம்பியை மிதித்ததில் முவரும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. காட்டுப்பகுதியில் மூவர் இறந்துகிடப்பதை பார்த்தவர்கள், இன்று பிற்பகலில் திருப்பாசேத்தி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்திருக்கின்றனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், இறந்தவர்களின் சடலங்களை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, திருப்பாச்சேத்தி காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்தவர்களில் ராணுவ வீரரான அஜித் திருமணமானவர் எனத்தெரிய வருகிறது. கடந்த 15 நாள்களுக்கு முன்னர்தான் அஜித்துக்கு குழந்தை பிறந்திருக்கிறது. அச்சமயம் அஜித், ராணுவத்தில் பயிற்சியில் இருந்ததால் குழந்தையைப் பார்க்கவேண்டும் என்பதற்காக லீவு எடுத்துக்கொண்டு சொந்த ஊர் வந்துள்ளார். லீவு முடிந்து பஞ்சாப் ராணுவ முகாமில் பணியில் இணையவேண்டும் என்ற நிபந்தனையுடன் ஊர்திரும்பிய, அவர் தந்தையுடன் முயல் வேட்டைக்குச் சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் விலங்குகளுக்கு வைத்த மின்சார வேலியில் சிக்கி 6 பேர் உயிரிழந்திருக்கின்றனர். காட்டுப்பகுதியில் விவசாயிகள் மின்வேலிகள் அமைக்கக்கூடாது என அரசு அறிவுறுத்திய நிலையிலும் வன விலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க மின்வேலிகள் அமைத்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
from Latest News https://ift.tt/8BPIjXr
0 Comments