சசிகுமார் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிப்பில் விரைவில் டேக் ஆஃப் ஆகவிருக்கிறது `குற்றப்பரம்பரை' வெப்சீரீஸ் எனப் பல மாதங்களுக்கு முன்னரே எழுதியிருந்தோம். எப்போது ஆரம்பிக்கும் இந்த புராஜெக்ட், தாமதம் ஏன் என்பது குறித்து கோடம்பாக்கத்தில் விசாரித்தோம்.
எழுத்தாளர் வேலராமமூர்த்தியின் 'குற்றப்பரம்பரை' நாவலைப் படமாக்க முன்னரே இயக்குநர்கள் பாரதிராஜாவும், பாலாவும் போட்டிப்போட்டனர். 2019-ல் இதற்கான படப்பூஜையையும் போட்டு, அமர்க்களமாக ஆரம்பிக்க எண்ணினார் பாரதிராஜா. அந்த நிகழ்வில் அவர் 'என் மக்கள் என் இனம்' என்று பேசியதும் அப்போது சர்ச்சையானது. இயக்குநர் பாலா கூட, "குற்றப்பரம்பரை ஒரு வரலாற்றுப் பதிவு. அதனை யார் வேண்டுமானாலும் படமாக்கலாம்" எனச் சொன்னார். இந்தக் கதையை இயக்குநர் பாண்டிராஜ் கூட இயக்குவதாகச் சமீபத்தில் பேச்சு எழுந்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் 'குற்றப்பரம்பரை' வரவிருக்கிறது. ஆனால், படமாக அல்ல, வெப்சீரிஸாக வெளிவர இருக்கிறது. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தயாரிப்பில் சசிகுமார் இயக்கத்தில் விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியன் நடிக்கப் போகிறார் என்றும் சில மாதங்களுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தோம். அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானதாகத் தகவல் வெளியானது.
ஆனால், அதன்பிறகும் பார்த்தால் சசிகுமார் வரிசையாகப் படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து விசாரித்தால், "'குற்றப்பரம்பரை' வெப்சீரிஸ் ஆகப் போவது உண்மைதான். சண்முக பாண்டியன் இதற்காக அடர்ந்த தாடி, மீசை வளர்த்து வருகிறார். அவரது கெட்டப் இன்னும் ரெடியாகவில்லை. இந்த வெப்சீரிஸை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் தயாரிக்கிறது. அதை முதல் பிரதி அடிப்படையில் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தயாரிக்கிறார். சண்முக பாண்டியன் போலவே நன்கு உயரம் உள்ள கேரக்டர்கள் படத்தில் நிறையவே உள்ளதால் சத்யராஜ், ராணா ஆகியோரிடமும் பேசி வருகிறார்கள்.
இப்படிச் சில காரணங்களால் இந்த வெப்சீரிஸ் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. ஹீரோ இதற்காகத் தாடி, மீசை எல்லாம் வளர்த்து உள்ளதால், இடையே அவரால் வேறு படம் எதிலும் கமிட்டாக முடியாமலும் இருப்பதாகச் சொல்கிறார்கள். இன்னும் ஒரு சில மாதத்திற்குள் தென்மாவட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நடத்துவார்கள்" என்கிறார்கள்.
from Latest News https://ift.tt/Uo1u7hK
0 Comments