கேரளா மாநிலம் இடுக்கி, கோட்டை, பத்தனம்திட்டா மாவட்டத்தில் பருவமழையைத் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் மண் ஈரப்பதம் அதிகரித்து ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2 நாள்களாக தொடுபுழா பகுதியில் தொடர்மழை பெய்து வந்ததைத் தொடர்ந்து கூடையத்தூர் சங்கமம் பிரிவில் மாளியேக்கல் காலனி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
நள்ளிரவு ஏற்பட்ட கனமழையின் காரணமாக மோர்காடு மலையில் இருந்தே நிலச்சரிவால் கீழே உள்ள குடியிருப்புகள் வரை மண், பாறைகள், மரங்கள் அடித்து வரப்பட்டன. இதில் சோமன் என்பவரின் வீட்டை அடித்துச் சென்றது அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சோமன்(58), அவரின் மனைவி ஷிஜி(54), மகள் சீமா(28), பேரன் தேவானந்த்(6), சோமனின் தாயார் தங்கம்மா(80) ஆகியோர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.
இப்பகுதியில் ரப்பர் மரங்கள் அதிகமாக உள்ளன. இதற்கு கீழே 35 குடும்பங்கள் வசிக்கின்றன. மலையிலிருந்து அடித்துவரப்பட்ட பாறைகள், மண்ணை பெருமளவில் அடித்துச் செல்லாத அளவுக்கு ரப்பர் மரங்கள் தடுத்தது. இதனால் 34 குடும்பங்கள் தப்பின. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காகவே பயிற்சியளிக்கப்பட்ட டோனா, ஏஞ்சல் என்ற இரண்டு மோப்ப நாய்கள் மூலம் சோமன் குடும்பத்தினர் கண்டுபிடிக்கப்பட்டனர்.
இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் மாநில அரசு முறையான முன்னறிவிப்பு மற்றும் முன்னேற்பாடுகளை செய்யாததன் காரணமாகவே உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது என குற்றம்சாட்டுகிறார்கள் அப்பகுதி மக்கள். நிலச்சரிவு அல்லது உயிரிழப்பு ஏற்பட்ட பிறகே மலப்புரம், கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட பகுதிகளில் எல்லோ அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.
from Latest News https://ift.tt/ITpwihJ
0 Comments