``குந்தித்தின்றால் குன்றும் மாளும்’’ இதனுடைய பொருள் யாருக்குத் தெரிகிறதோ, இல்லையோ நமக்கு நன்றாகத் தெரிய வேண்டும். கடந்த ஒருவார காலமாக இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் விஷயம், பிரபல கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியின் பொருளாதார நிலை.
கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இலங்கையுடனான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி நடந்தது. இந்தியா தோல்வியின் விளிம்பில் இருந்தபோது, ரசிகர்கள் செய்த கலாட்டாவில் போட்டி நிறுத்தப்பட்டு, இலங்கை வென்றதாக அறிவிக்கப்பட்டது. அப்போது அவுட் ஆகாமல் களத்தி்ல் நின்ற ஒரே பேட்ஸ்மேன், கதறி அழுது கும்ப்ளேயுடன் காலரிக்கு சென்றது யாராலும் மறக்கமுடியாது.
சில ஆண்டுகள் சச்சினுடன் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களம் கண்டவர், தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்கும் மாத முப்பதாயிரம் ரூபாயில் வாழ்ந்து வருவதாகவும், வேறு வருமானமில்லாது வாடுவதால், எதாவது வருமானம் ஈட்டுவதுபோல வேலைக் கிடைத்தால், தனது வறுமையைப் போக்க உதவியாக இருக்குமென்று பேட்டியளித்திருக்கிறார்.
இப்படி ஒரு பெரிய பிரபலம், செல்வ செழிப்போடு இருந்து பின்னர் வறுமையில் வாடுவதற்கான காரணம் என்ன என்பதை குறித்து, ஆதித்யா பிர்லா கேப்பிடல் சி. கேசவன் விளக்கி சொன்னார்.
அவர் கூறுகையில்,.. ``நாம் இதன் காரணத்தை தேடிப்போனால், சாதாரணமாக அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய சில விஷயங்கள் இதில் உள்ளன.
1. மிக முக்கியமாக, நல்ல வருமானம் ஈட்டும் யார் ஒருவரும் அந்த வருமானமானது, தனக்கு நிரந்தரமாக இருக்கும் என்ற மனநிலைக்கு வருவது.
2. அந்த எண்ணத்தில் கையிலிருக்கும் கடைசி பணம் வரை யோசிக்காமல் தாராளமாக செலவு செய்வது.
3. வருமானம் ஈட்டும் காலத்தில் எதிர்காலத் தேவைக்கென அதை பாதுகாக்காமலும், சேமிக்காமலும் இருப்பது.
4. தான்வந்த வழியை மறந்துவிடுவது அல்லது அதுசார்ந்த பிறரது யோசனைகளை அலட்சியப்படுத்துவது.
இவையனைத்தும் சேர்ந்து இன்று இவரை பொதுவெளியில் புலம்ப வைத்திருக்கிறது. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பது போல வருமானமிருக்கும் போது எதிர்கால தேவைக்கான திட்டமிடல் என்பது மிகவும் அவசியம்.
பல ஆயிரம்கோடி சம்பாதித்த மைக்கேல் ஜாக்சன் ஆ(போ)ண்டியானார். பல நூறுகோடி சம்பாதித்த போரிஸ் பெக்கர் தனது கடன்களை சமாளிக்கமுடியாமல் 2017ல் திவால் நோட்டீஸ் கொடுத்தார். தனது மெடல்களையும் கோப்பைகளையும் ஏலத்துக்கு விட்டார். பிறர் செய்யும் தவறுகளிலிருந்து நாம் பாடம் கற்க முயல வேண்டும்.
ஓய்வுக் கால திட்டங்களை நல்ல வருமானம் ஈட்டும்போதே செயல்படுத்த வேண்டும். அதைவிடுத்து தற்போதைய நிலையே நிரந்தரம் என நினைத்து அலட்சியமாக இருந்தால், குந்தித் தின்றால் குன்றும் மாளும்தானே.. எனவே, இதில் நாம் வருத்தப்பட ஒன்றுமில்லை. செத்தால்தான் தெரியும் சுடுகாடு'' என்று தெரிவித்தார்.
from Latest News https://ift.tt/rpJDzVE
0 Comments