https://gumlet.vikatan.com/vikatan/2022-03/4be728fc-44f5-4235-89af-5bb399a47649/623ca26e0e084.jpgகோவை விவகாரம்: ``பாஜக மலிவான அரசியல் செய்கிறது!" - சொல்கிறார் துரை வைகோ

புதுக்கோட்டையில் கட்சியினர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட பின்பு, மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசினார்,  "தமிழகத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நடந்து வந்தாலும், குற்றம் நடைபெற்ற 48 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள், இந்த ஆட்சியில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். 

கடந்த ஆட்சியில் பொள்ளாச்சி சம்பவம் உட்பட பல்வேறு சம்பவங்களில், அழுத்தங்கள் காரணமாக தான் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தது. இந்த ஆட்சியிலும் பிரச்னைகள் நடந்து வருகிறது. ஆனால், நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

கோவை சம்பவத்தில் சம்பவம் நடைபெற்று 12 மணி நேரத்திற்குள்ளேயே ஐந்து நபர்கள் கைது செய்யப்படுகின்றனர். நேற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

துரை வைகோ

காவல்துறை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாஜக சொல்லும் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தச் சம்பவம் தொடர்பாக வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் கூட தொடர்பு இருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையிலேயே தான் தமிழக முதல்வர் விசாரணையை என்.ஐ.ஏவுக்கு மாற்றி இருக்கிறார்.

இது தொடர்பாக, தமிழக அரசு, முதல்வர் சரியான நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் பா.ஜ.க சார்பில் வரும் 31ம் தேதி பந்த் நடைபெறுவதாக அறிவித்திருப்பது தேவையற்றது. இதை வைத்து பா.ஜ.க மலிவான அரசியலை செய்து வருகிறது.

இந்தியை இரண்டாவது மொழியாக ஆக்கிவிட்டு, ஆங்கிலத்தை பின்னடைவு செய்ய வேண்டும் என்று நினைத்து தான், அமித் ஷா ஒரு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 

உலகம் முழுவதும், ஆங்கிலம் என்பது பொது மொழியாக இருக்கின்ற சூழலில் ஆங்கிலத்தை பின்னுக்கு தள்ளி இந்தியை வளர்ப்பது என்பது கண்டிக்கத்தக்கது.

இந்தியை வளர்ப்பது என்பது  70 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. இதை நாங்கள் அப்போதும் எதிர்த்தோம். இப்போது எதிர்க்கிறோம். எப்போதும் எதிர்ப்போம் எதிர்ப்போம். இந்திய அரசியலமைப்பு சட்டப்படி இந்தியாவில் பேசப்படும் 22 மொழிகளும் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்தி தெரியாது என்று கூறிய மீனவர்கள், இந்திய கடற்படையால் சித்திரவதை செய்யப்பட்டு, துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவங்கள் நடந்தேறியுள்ளது

இந்தி படிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. இந்தி படித்தால் தான் அரசு வேலை கிடைக்கும் என்று இந்தியை திணிப்பதை தான் நாங்கள் எதிர்க்கிறோம். 

ஒவ்வொரு கட்சிக்கும் என்று வெவ்வேறு கொள்கை கோட்பாடுகள் இருக்கும். மதம் மற்றும் மொழியை வைத்து அரசியல் செய்யும் பாஜகவை எதிர்த்து அனைத்து கட்சியும் ஒன்றிணைந்து தற்போது தேர்தல் கூட்டணி அமைத்து உள்ளது. தேர்தல் அரசியல் என்பதை விட தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தான் பாஜகவை எதிர்த்து தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் இணைந்து மதசார்பற்ற ஜனநாயக கூட்டணியை உருவாக்கியுள்ளோம். ஆறுமுகசாமிஆணையத்தின் அறிக்கையை பொறுத்தவரை ஆணையம் 4 நபர்களை சுட்டிக்காட்டி அவர்களை விசாரணை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. அந்த விசாரணை முடிவடைந்து ஆணையம் கூறியுள்ள நான்கு பேரையும் குற்றவாளிகள் என்று முடிவு செய்தால் மட்டுமே இது குறித்து கருத்து கூற முடியும்" என்றார்.



from Latest News https://ift.tt/3zbhxQS

Post a Comment

0 Comments