கடந்த 23-ம் தேதி அதிகாலை நேரத்தில் கோவை உக்கடம் பகுதியில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. மறுநாள் தீபாவளி என்பதால் யாராவது பட்டாசு வெடித்திருப்பார்கள் என்றே அந்தப் பகுதி மக்கள் கருதினர். ஆனால் காரிலிருந்து தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்ததால் தீயணைப்பு நிலையத்துக்கும் உக்கடம் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தபிறகுதான் கரிக்கட்டையாக ஒருவர் இறந்துகிடந்தது தெரியவந்தது. அதோடு வெடித்த நிலையில் சிலிண்டர் ஒன்றும் வெடிக்காமல் மற்றொரு சிலிண்டரும் இருந்தன. இந்தச் சம்பவத்தில் சிக்கிய கார் இரண்டு துண்டுகளாகியிருந்தது. இதையடுத்து சிலிண்டர் வெடித்ததே இந்த கார் விபத்துக்கு காரணம் என முதற்கட்ட தகவல் வெளியானது.
ஆனால் சம்பவம் நடந்த பகுதியில் ஆணிகள், கோலி குண்டுகள் கைப்பற்றப்பட்டன. மேலும் காரில் உயிரிழந்தது கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஜமேசா முபின் எனத் தெரியவந்தது. இவரிடம் கடந்த 2019-ம் ஆண்டு இலங்கை வெடிகுண்டு வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்திய தகவல் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து முபின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதில் வெடிகுண்டுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகள், பொருள்கள் 75 கிலோ வரை சிக்கின. அதோடு சம்பவம் நடப்பதற்கு முன்பு காரில் ஒரு மூட்டை ஏற்றும் சி.சி.டி.வி காட்சி பதிவையும் கோவை போலீஸார் கைப்பற்றினர்.
இதையடுத்து முபினுடன் தொடர்பிலிருந்த உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் ( 23), ஜி.எம். நகர் பகுதியைச் சேர்ந்த முகமது ரியாஸ் (27), ஃபைரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகிய 5 பேரை போலீஸார் கைதுசெய்தனர். அவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. வெடிமருந்து பொருள் சிக்கியதும் என்.ஐ.ஏ அதிகாரிகள் தங்களின் விசாரணையை தொடங்கிவிட்டனர். இந்தச் சூழலில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு உள்ளிட்ட உயரதிகாரிகள் கோவை சம்பவம் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். அதில் இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்க பரிந்துரை செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதோடு கோவை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், கூடுதலாக காவல் நிலையங்கள் அமைப்பது என சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில், என்.ஐ.ஏ-வின் டி.ஜ.ஜி வந்திதா, எஸ்.பி ஸ்ரீஜித் மற்றும் அந்தப் பிரிவின் போலீஸார் சம்பவம் நடந்த இடம், இதுவரை கோவை போலீஸார் நடத்திய விசாரணை குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர், கார் வெடிப்பு சம்பவத்துக்கு சிலிண்டர் வெடித்தது காரணமா அல்லது வெடி மருந்துகள் வெடித்தது காரணமா என்ற கோணத்திலும் விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள். அதோடு முபின் மற்றும் கைதுசெய்யப்பட்டிருப்பவர்களின் பின்னணியை என்.ஐ.ஏ விசாரித்து வருகிறது.
இது குறித்து என்.ஐ.ஏ போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ``முபின் ஓட்டிவந்த காரில் வெடி மருந்துகள் இருந்ததா என்று ஆய்வு நடத்திவருகிறோம். இதுவரை கோவை போலீஸார் நடத்திய விசாரணை அறிக்கையோடு எங்கள் ஸ்டைலில் விசாரணையை தொடங்கியிருக்கிறோம். உயிரிழந்த முபின் மீது ஏற்கெனவே எங்களின் சந்தேக பார்வை இருந்தது. இலங்கை வெடிகுண்டு சம்பவத்தின்போது முபின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எங்களிடம் ஆதாரங்கள் இல்லை. ஆனால் தற்போது நடந்திருக்கும் சம்பவத்தில் ஆதாரங்கள் சிக்கியிருக்கின்றன. அதனால் முபினுடன் தொடர்புடையவர்கள் யார் என்ற விவரங்களை சேகரித்து வருகிறோம்.
முபினின் உறவினர் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் கோவையில் போலீஸ் கமிஷனர் அலுவலகம், விக்டோரியா மஹால், ரயில் நிலையம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டுகள் வைக்க சதிதிட்டம் போட்டதற்கான ரகசிய தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதை உறுதிப்படுத்தும் வகையில் முபின் வீட்டிலிருந்து மர்மபொருள் (வெடிமருந்தாக இருக்கலாம்) காரில் ஏற்றப்பட்டதற்கான சி.சி.டி.வி பதிவுகள் கிடைத்திருக்கின்றன. காரில் ஏற்றப்பட்ட மர்ம பொருள் எங்கு கொண்டு செல்லப்பட்டன என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம். முபின் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களின் வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை ஆய்வு செய்து வருகிறோம். முபின் பயன்படுத்திய செல்போனிலிருந்து அனுப்பட்ட மெசேஜ்கள் அடிக்கடி அழிக்கப்பட்டிருக்கின்றன. அதை மீட்டெடுக்கும் பணியில் சைபர் க்ரைம் டீம் களமிறங்கியிருக்கிறது. அது என்ன மெசேஜ்கள் எனத் தெரியவந்தால் இந்தச் சம்பவத்தின் முழு பின்னணியும் தெரிந்துவிடும். மேலும் உயிரிழந்த முபின், தடைசெய்யப்பட்ட ஒரு தீவிரவாத அமைப்பால் மூளைச்சலவை செய்யப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அந்த அமைப்போடு முபினுக்கு நேரடியாக தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரணை நடத்தி வருகிறோம். ஏற்கெனவே கோவையில் நடந்த தொடர் வெடிகுண்டு சம்பவத்தைப் போல தற்போதும் இன்னொரு சம்பவத்தை இந்தக் கும்பல் நடத்த திட்டமிட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது. ஆனால் கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கார் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. அது விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்றும் விசாரித்து வருகிறோம். விசாரணை நடந்துக் கொண்டிருப்பதால் வெளிப்படையாக எந்தத் தகவலையும் சொல்ல முடியாது. ஆனால் இந்தச் சம்பவத்தில் எங்களின் சந்தேகம் சிலர் மீது விழுந்திருக்கிறது" என்றனர்.
from Latest News https://ift.tt/6rPvip7
0 Comments