https://gumlet.vikatan.com/vikatan/2022-10/f1f500fc-22dc-42bf-9950-75abcfcc179b/20221027140006_IMG_0555.JPGபுதர் மண்டிக் கிடக்கும் கண்மாய் மதகுகள்... சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே, பிளவக்கல் பகுதியில் பெரியாறு, கோவிலாறு அணைகள் உள்ளன. பருவ மழைகாலங்களில் இந்த அணைகளிலிருந்து வெளியேறும் மழைவெள்ளம் நீர்வரத்து கால்வாய் வழியே வத்திராயிருப்பு பெரியகுளம் மற்றும் விராகசமுத்திரம் ஆகிய கண்மாய்களை நிரப்புகிறது. பின், மதகுகள் வழியே வெளியேற்றப்படும் நீரானது சுற்று வட்டாரக்கிராமங்களில் ஏரி, குளங்களுக்கு செல்கிறது.

மதகு

வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ள சூழலில் தமிழகத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தந்துள்ளது. இதன்படி, தமிழகத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்திலும் அவ்வபோது மழைபெய்வதால் வடகிழக்கு பருவமழையால் விவசாய நிலங்கள் பயன்பெறும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு அச்சாரமிடுவது போல விருதுநகர் மாவட்டத்தின்‌ முக்கிய அணையான பிளவக்கல் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. விரைவில், அணை நிரம்பி மறுகால் பாயும் சூழல் ஏற்பட்டிருப்பதால் பாசன கால்வாயில் புதர் மண்டிக்கிடக்கும் இடங்களை உடனடியாக தூர்வாரிட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஷட்டர்

இதுகுறித்து வத்திராயிருப்பை சேர்ந்த விவசாயி சங்கரன் பேசுகையில், "கடந்த 1984, 1992 ஆகிய ஆண்டுகளில் பெரியகுளம் மற்றும் விராகசமுத்திரம் என இரண்டு கண்மாய்களிலும் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு, வத்திராயிருப்பு நகருக்குள் வெள்ளம் புகுந்தது. கால்நடைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

முன்னெச்சரிக்கையாக கண்மாய்களில் பராமரிப்பு பணிகள் செய்யப்படாததே அப்போதைய இழப்புக்கு காரணமென சொல்லப்பட்டது. அதன்பிறகு கண்மாய் கரைகள் பலப்படுத்தப்பட்டு சீரமைக்கப்பட்டன. விராகசமுத்திரம் கண்மாய் மூலம் வத்திராயிருப்பை சுற்றியுள்ள 174.08 ஹெக்டேர் நிலங்கள் பாசனவசதி பெறுகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கண்மாய் ஷட்டர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிக்கப்படாமல் உள்ளது.

கண்மாய்

கண்மாயின் பல பகுதிகளிலும் வேண்டாத செடிகள் காடுபோல் வளர்ந்து கிடக்கிறது. நீர்வழிப்பாதைகள் செடிகளின் ஆக்கிரமிப்பால் மூடிகிடக்கின்றன. கண்மாய் மதகுகள் திறக்கும் இடத்திலும் தரைப்பகுதி சேதமடைந்துள்ளது. எனவே, பருவமழையால் அணை நிரம்பி மறுகால் பாய்வதற்குள் கண்மாய் ஆக்கிரமிப்புகளை தூர்வாரி மதகுகளை சீர்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்மாயின் வடக்குப் பக்கம் நான்கு மதகுகள் உள்ளன. அவைகள் சரியாக இயங்குகின்றதா என ஆய்வு செய்ய வேண்டும். முக்கியமாக, கண்மாய் கரைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விராகசமுத்திரம் கண்மாயிலிருந்து வில்வராயன் குளம் வரை உள்ள வரத்துக்கால்வாயை அளவீடு செய்து, செடிகள் மற்றும் கழிவுநீர் குப்பைகளை துார்வாரி அப்புறப்படுத்த வேண்டும்" என்றார்.

கண்மாயின் நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டியிடம் பேசுகையில், "விராகசமுத்திரம் கண்மாய் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டு, நிச்சயம் சீரமைப்பு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.



from Latest News https://ift.tt/n5NtguO

Post a Comment

0 Comments