நாட்டில் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் அடிக்கடி எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி அல்லது எம்.எல்.ஏ-க்களை விசாரணை ஏஜென்சிகளை கொண்டு மிரட்டி ஆட்சி மாற்றத்துக்கு பா.ஜ.க முயல்வதாக குற்றம்சாட்டப்படுகிறது. தெலங்கானாவில் அது போன்ற ஒரு புகார் எழுந்திருக்கிறது. பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் நான்கு பேரை விலைக்கு வாங்க முயற்சிகள் நடந்திருக்கின்றன. பைலட் ரோஹித் ரெட்டி, காந்தாராவ், பாலாராஜு, பீராம் ஹர்ஸ்வர்தன் ஆகிய 4 எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க மூன்று பேர் பேச்சுவார்த்தை நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை ஹைதராபாத்திலுள்ள ஒரு பண்ணை வீட்டில் வைத்து இறுதி செய்வதாக இருந்தது.
எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்குபவர்கள் பண்ணை வீட்டுக்கு பணம் மற்றும் காசோலையுடன் வந்தவுடன் ரோஹித் ரெட்டி இது குறித்து போலீஸாரை தொடர்பு கொண்டு தங்களுக்கு லஞ்சம் கொடுத்து தங்களை விலைக்கு வாங்க முயற்சி நடப்பதாக தெரிவித்தார். உடனே போலீஸார் விரைந்து வந்து எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க வந்த மூன்று பேரைக் கைதுசெய்திருக்கின்றனர். அவர்கள் 4 எம்.எல்.ஏ-க்களில் முக்கியமானவராக இருப்பவருக்கு ரூபாய் 100 கோடியும், மற்ற எம்.எல்.ஏ-க்களுக்கு தலா 50 கோடி ரூபாயும் தருவதாக பேரம் பேசினர். இது குறித்து ஊடகங்களிடம் பேசிய ஐதாராபாத் போலீஸ் கமிஷனர் ஸ்டீபன் ரவீந்திரா, ``எம்.எல்.ஏ ரோஹித் ரெட்டி தங்களை விலைக்கு வாங்க முயற்சி நடப்பதாக எங்களுக்கு தகவல் கொடுத்தவுடன் ஆசிஸ் நகரில் உள்ள பண்ணை வீட்டில் ரெய்டு நடத்தினோம். பேரம் பேசியவர்கள் எம்.எல்.ஏ-க்களுக்கு தலா 50 கோடி ரூபாய் பணம், கான்ட்ராக்ட் , கட்சியில் முக்கிய பதவி கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறியிருக்கின்றனர்.
நான்கு பேரில் முக்கியமானவருக்கு 100 கோடி ரூபாய் கொடுப்பதாக தெரிவித்திருக்கின்றனர். 3 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். அவர்கள் போலி அடையாளத்துடன் ஹைதராபாத்க்கு வந்திருக்கின்றனர். ஹரியானாவைச் சேர்ந்த பூசாரி சதீஷ் சர்மா, திருப்தியைச் சேர்ந்த சாமியார் சிம்மயாஜி, தொழிலதிபர் நந்தகுமார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்" என்று தெரிவித்தார். பேரம் பேசப்பட்ட நான்கு எம்.எல்.ஏ-க்களும் முதல்வர் சந்திரசேகர் ராவ் இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் சந்திரசேகர் ராவிடம் நடந்த சம்பவத்தை விளக்கினர்.
இது குறித்து தெலங்கானா பா.ஜ.க தலைவர்கள் அருணா, அர்விந்த் ஆகியோர், ``முதல்வர் சந்திரசேகர் ராவும், அவர் கட்சியினரும் சேர்ந்து குதிரை பேர நாடகத்தை நடத்தியிருக்கின்றனர். இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் இந்த நாடகத்தை நடத்தியிருக்கின்றனர்" என்று தெரிவித்தனர். 2019-ம் ஆண்டிலிருந்து தெலங்கானாவில் பா.ஜ.க சந்திரசேகர் ராவ் அரசை கவிழ்க்க முயற்சி செய்து வருகிறது. ஆனால் முடியாமல் இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் பா.ஜ.க தலைவர் ஒருவர் அளித்திருந்த பேட்டியில், ``விரைவில் பாரத் ராஷ்டிரிய சமிதி எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் பா.ஜ.க-வில் சேருவார்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில்தான் மகாராஷ்டிராவில் சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே உதவியுடன் சிவசேனாவை இரண்டாக உடைத்து, பா.ஜ.க அங்கு ஆட்சியைப் பிடித்தது. அதோடு அண்டை மாநிலமான கோவாவில் காங்கிரஸ் கட்சியிலிருந்த பெரும்பாலான எம்.எல்.ஏ-க்களை சமீபத்தில் பா.ஜ.க தன்வசம் இழுத்துக்கொண்டது. இந்த மாதத் தொடக்கத்தில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு விசாரணை ஏஜென்சி மூலம் நெருக்கடி கொடுத்து அவர்களை தங்களது பக்கம் இழுக்க பா.ஜ.க முயல்வதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார்.
from Latest News https://ift.tt/vMP4GJW
0 Comments