Doctor Vikatan: என் வயது 35. தலையில் நரைமுடிகள் இருக்கின்றன. ஆனால் எனக்கு அது பிரச்னையில்லை. புருவங்களில் உள்ள ரோமங்களும் ஒன்றிரண்டு நரைக்கத் தொடங்கியிருப்பது கவலையை அளிக்கிறது. இதற்கு என்ன காரணம்? இதை குணப்படுத்த என்ன வழி?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சருமம் மற்றும் கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்...
புருவங்களில் உள்ள ரோமங்கள், கண் இமைகள், உடல் ரோமங்கள் ஆகியவை நரைப்பதை 'போலியாசிஸ்' (Poliosis) என்கிறோம். இந்தப் பகுதிகளில் உள்ள முடிகளில் மெலனின் எனப்படும் நிறமியே இல்லாமலோ அல்லது குறைவாகவோ இருக்கும்.
கூந்தல் நுண்ணறைகள் பலவீனமாக இருப்பபது, நிறமி செல்களில் ஏற்படுகிற ஆட்டோஇம்யூன் குறைபாடு, மெலனின் உற்பத்தியில் ஏற்படுகிற பிறவிக் கோளாறு போன்றவை இதற்கு காரணங்களாக இருக்கலாம். குடும்பப் பினனணி, வைட்டமின் பி 12 குறைபாடு, வைட்டமின் டி குறைபாடு, இதர ஊட்டச்சத்துகளின் குறைபாடு போன்றவையும் காரணமாகலாம்.
தீவிரமான பூஞ்சைத் தொற்றின் காரணமாக, சருமத்தின் ஒரு பகுதியில் உள்ள ரோமங்கள் நிரந்தரமாக வெள்ளையாக மாறலாம். மிகப்பெரிய காயம் ஏற்பட்ட பிறகும், அக்கி பாதிப்புக்குப் பிறகும், ரேடியோதெரபிக்கு பிறகும்கூட சருமத்தின் முடிகள் இப்படி வெள்ளையாக மாறலாம். சிலருக்கு அதீத மன அழுத்தம், கவலை மற்றும் மனநலம் பாதிக்கப்படுவதன் விளைவாகவும் இப்படி ஆகலாம்.
யூமெலனின் மற்றும் பியோமெலனின் ஆகிய நிறமிகள்தான் முடிக்கு கறுமை நிறத்தைக் கொடுப்பவை. இவற்றில் பியோமெலனின் என்பவை ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்தைக் கொடுப்பவை. யூமெலனின் என்பது பிரவுன் அல்லது கறுப்பு நிறத்தைக் கொடுப்பவை. இவை எல்லாம் இணைந்துதான் கூந்தலுக்கு அதன் இயல்பான நிறம் வருகிறது. மெலனோசைட்ஸ் என்பவைதான் மெலனின் உற்பத்தி செல்கள். இவைதான் மெலனின் நிறமித் தொகுப்புக்குக் காரணம்.
இளவயதிலேயே இப்படி புருவங்கள், இமைகளில் நரை ஏற்பட்டால், மருத்துவரை அணுகி, ஒட்டுமொத்த உடல் பரிசோதனை, ஹார்மோன் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, தேவைப்பட்டால் சருமம் மற்றும் நரம்புகளுக்கான பரிசோதனைகள் போன்றவற்றைச் செய்து பார்க்க வேண்டும். மருத்துவர் உங்களுக்கு போலியாசிஸ் இருப்பதை உறுதிசெய்தால் அதற்கான சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார்.
மன அழுத்தம் தவிர்ப்பது, தினமும் உடற்பயிற்சிகளை முறைப்படுத்துவது, ஆரோக்கியமான, புரதம் நிறைந்த உணவுப்பழக்கம் போன்ற வாழ்வியல் மாற்றங்களும் பின்பற்றப்பட வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Latest News https://ift.tt/QIZbiG6
0 Comments