சேலம், மேட்டூர் அருகேயுள்ள பி.என்.பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 18-வது வார்டு தாழையூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி தங்கவேல் (85). இவர் நங்கவள்ளி தி.மு.க முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளராக இருந்தவர். இவருக்கு ஜானகி என்ற மனைவியும் மணி, ரத்னவேல் என்ற இரண்டு மகன்களும் இருக்கின்றனர். இவர் தி.மு.க-மீது கொண்ட பற்றின் காரணமாக கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலே பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைக்குச் சென்றிருக்கிறார். மேலும் தி.மு.க ஆட்சியின்போது பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கையால் பல்வேறு பரிசுகளைப் பெற்றிருக்கிறார்.
மத்திய பா.ஜ.க அரசின் இந்தித் திணிப்பைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்ட தங்கவேல், இன்று காலை பி.என்.பட்டி பேரூராட்சிக்குட்பட்ட நான்காவது வார்டு தாழையூர் தி.மு.க கட்சி அலுவலகத்துக்குக் கையில் பெட்ரோல் கேனுடன் சென்றிருக்கிறார்.
மனஉளைச்சலிலிருந்த அவர் 11 மணியளவில், ஒரு வெள்ளைத் தாளில், ``மோடி அரசே... மத்திய அரசே! அவசர இந்தி வேண்டாம். தாய்மொழித் தமிழ் இருக்க கோமாளி இந்தி மொழி எதற்கு... மாணவ, மாணவிகள் வாழ்க்கையை பாதிக்கும் இந்தி ஒழிக... இந்தி ஒழிக" என எழுதியிருக்கிறார்.
பின்னர்தான் வாங்கி வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீப்பற்ற வைத்துக்கொண்டு, அதே இடத்தில் சுருண்டு விழுந்து உயிழந்தார். இந்தச் சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து தங்கவேலன் சடலத்தை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாகத் தகவலறிந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில், தங்கவேல் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்ததுடன், `இதுபோன்ற செயல்களில் கழகத் தோழமைகள் ஈடுபட வேண்டாம்' என்று அறிவுறுத்தியிருந்தார். அதைத் தொடர்ந்து, சேலத்திலிருந்த தொழிலாளர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியளித்தார்.
இந்த நிலையில், உயிரிழந்த தங்கவேலின் உடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தபோது, தன்னை பத்திரிகையாளர் எனக் கூறிக்கொண்டு அங்கு வந்த நபர் ஒருவர், ``தங்கவேலு எப்படி இறந்தார்... உங்களுக்குச் சந்தேகம் இருக்கிறதா, இறக்கும்போது யார் யாரெல்லாம் உடன் இருந்தனர், இறந்தவரின் மனைவி மற்றும் மகன்கள் ஏன் அழவில்லை" என்று அனைவரிடமும் கேள்விகேட்டு விசாரித்துக்கொண்டிருந்தார்.
இதனைக் கவனித்துவந்த தி.மு.க-வினர், உடனே அந்த நபரைத் தனியாக அழைத்துச்சென்று விசாரித்திருக்கின்றனர். அப்போது, தன் பெயர் சரவணன் என்று கூறிய அந்த நபர், முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்திருக்கிறார்.
அதையடுத்து திமுக-வினர் அந்த நபரின் செல்போனை வாங்கி ஆய்வு செய்திருக்கின்றனர். அதில், சரவணன் எனச் சொல்லக்கூடிய அந்த நபர் தங்கவேல் வீட்டில் பல வீடியோக்களைப் பதிவுசெய்து அவற்றை பாஜக வாட்ஸ்அப் குரூப்களில் பகிர்ந்தது தெரியவந்தது. பின்னர், அந்த நபரை திமுக-வினர் அங்கிருந்த போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்திருக்கின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் தரப்பில் விசாரித்தோம். நம்மிடம் பேசியவர்கள், ``அந்த நபர் பத்திரிகையாளரெல்லாம் கிடையாது. பொய் கூறிவிட்டு அந்த வீட்டுக்குச் சென்று வீடியோ எடுத்துக் கொண்டு, தேவையில்லாமல் கேள்வி எழுப்பி தொந்தரவு செய்திருக்கிறார். அங்கிருந்தவர்களிடம் கேள்விகளை எழுப்பி அதை பாஜக குழுக்களில் பகிர்ந்திருக்கிறார். அந்த நபர் போதையிலிருந்ததால், அவரின் செல்போனை வாங்கிக் கொண்டு அனுப்பிவிட்டோம். தேவைப்பட்டால் மீண்டும் அழைத்து விசாரிப்போம்" என்றனர்.
from Latest News https://ift.tt/iZAQNVb
0 Comments