நெல்லை-குமரி மாவட்ட எல்லைப் பகுதியில் இருக்கும் பழவூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருப்பவர் பார்த்திபன். அவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை தன்னுடன் கார்த்திகேயன் என்ற காவலரை அழைத்துக் கொண்டு வழக்கமான ரோந்துப் பணியைத் தொடங்கியவரை மணல் கடத்தல்காரர்கள் வெட்டியுள்ளனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “அம்பலவாண்புரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், சங்கர் ஆகியோர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்தார்கள். இது தொடர்பாக பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது மணல் கடத்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. மீண்டும் இருவரும் மணல் திருட்டி ஈடுபட்டு வருவதாக உதவி ஆய்வாளர் பார்த்திபனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனால் அவர் அம்பலவாணபுரம் பகுதிக்குச் சென்றுள்ளார்
மணல் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய சங்கர் வீடு கட்டி வருகிறார். அதற்காக அனுமதியின்றி மணல் அள்ளிவந்து வீட்டின் முன்பாகக் கொட்டி வைத்திருக்கிறார். அதைப் பார்த்த உதவி ஆய்வாளர், பார்த்திபன் அவரை அழைத்து விசாரித்துள்ளார். அப்போது மணிகண்டனும் அங்கு வந்துள்ளார். இருவரும் பார்த்திபன் மற்றும் காவலர் கார்த்திகேயனை மிரட்டும் வகையில் பேசியதாக சொல்லப்படுகிறது.
காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சங்கர், வீட்டுக்குள் சென்று இரு அரிவாளை எடுத்து வந்திருக்கிறார். பின்னர் இருவரும் சேர்ந்து அரிவாளால் வெட்டியுள்ளனர். அதை பார்த்திபன் தடுத்திருக்கிறார். இருப்பினும் அவருக்கு முகத்தில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. அதற்குள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திரண்டதால் மணிகண்டனும் சங்கரும் அங்கிருந்து தப்பியுள்ளனர்.
காயமடைந்த உதவி ஆய்வாளர் பார்த்திபன் கூடங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது தொடர்பாக கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகள் வழக்குத் தொடர்ந்த போலீஸார் மணிகண்டன், சங்கர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்த அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் கூடங்குளம் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
from Latest News https://ift.tt/oUajyXf
0 Comments