ஷாஜகானால் டெல்லியில் கட்டப்பட்ட `ஜும்மா மசூதி’ முகலாயர்கள் காலத்து நினைவுச் சின்னமாக உள்ளது. இம்மசூதியில், ஒரே நேரத்தில் சுமார் 25,000 பேர் வரை தொழக்கூடிய வசதி உண்டு.
இந்த நிலையில், திடீரென இம்மசூதியில் பெண்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ உள்ளே செல்ல அனுமதி இல்லை என அதன் வாயில்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது.

இந்த அறிவிப்பினை பல தரப்பினரும் எதிர்த்த நிலையில், `தொழுகை செய்ய வரும் பெண்கள் கணவரோடு அல்லது குடும்பத்தினரோடு வரும் நிலையில் அவர்களுக்கு அனுமதி உண்டு. ஆனால் தனியாக அனுமதி கிடையாது’ என மசூதி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மசூதியின் மக்கள் தொடர்பு அதிகாரி சபியுல்லா கான் கூறுகையில், ``மசூதி வளாகத்தில் தவறான செயல்கள் நடந்தததாக சில சம்பவங்கள் பதிவானதைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பெண்களும் சிறுமிகளும், ஒரு பூங்காவிற்கு வருவது போல வந்து, மசூதி வளாகத்தில் நடனமாடி, சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதற்காக வீடியோக்களை படம்பிடிப்பதோடு, டேட்டிங் செய்வதற்கான இடமாக மசூதியை மாற்றுகின்றனர்’’ எனத் தெரிவித்துள்ளார்.
இதே தொனியில் ``ஜும்மா மசூதி ஒரு வழிபாட்டுத் தலம். அதற்காக மக்கள் வரவேற்கப்படுகிறார்கள்; ஆனால் பெண்கள் தனியாக வந்து டேட்டிங் செய்வதற்காகக் காத்திருக்கிறார்கள். அதற்காக இந்த இடம் இல்லை. இங்கு கட்டுப்பாடு உள்ளது’’ என இமாம் சையத் அகமது புகாரி தெரிவித்துள்ளார்.

இந்தக் கட்டுப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மலிவால், ஜும்மா மசூதி நிர்வாகத்திற்கு எதிராக வியாழன் அன்று நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அதில், ``இந்தக் கட்டுப்பாடு பெண் வெறுப்பு மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது. பெண்கள் மசூதிக்குள் நுழைந்து, தங்களின் மதத்தைப் பின்பற்றுவதைத் தடுப்பது முற்றிலும் பாரபட்சமானது; ஒரு வழிபாட்டுத் தலம் பாலினத்தைப் பொருட்படுத்தாமல் அனைவருக்காகவும் திறந்திருக்க வேண்டும். ஆனால் இது தீவிர பிற்போக்குத்தனமான நடைமுறையைப் பின்பற்ற நினைக்கிறது.
நவம்பர் 28-ம் தேதிக்குள் இந்த விவகாரம் குறித்து விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். இது அரசியல் சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கை’’ எனக் குற்றம் சாட்டியுள்ளது.
from Latest News https://ift.tt/HWnqBVT
0 Comments