யோகா குரு பாபா ராம்தேவ் மும்பை அருகில் உள்ள தானேயில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடந்த யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் பேசிய ராம்தேவ், `பெண்கள் சேலையில் அழகாக இருப்பார்கள். சல்வார் கமீஸில் மிகவும் அழகாக இருப்பார்கள். என்னைப்போன்றவர்களுக்கு பெண்கள் ஆடை இல்லாமலும் அழகாக இருப்பார்கள்’ என்று தெரிவித்திருந்தார். ராம்தேவின் இக்கருத்துக்கு பெண்கள் அமைப்புகள் கடுமையான கண்டனம் தெரிவித்தது. இந்த நிகழ்ச்சியில், மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்நனாவிஸ் மனைவி அம்ருதா மற்றும் முதல்வர் ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக ராம்தேவுக்கு மாநில பெண்கள் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. பிரச்னை பெரிய அளவில் மாறியதால் தனது கருத்துக்கு ராம்தேவ் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக ராம்தேவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``பெண்களை நான் இழிவுபடுத்தவில்லை. எனது ஆடையுடன் பெண்கள் ஆடையை ஒப்பிட்டுக்கூறினேன். ஆனால் எனது கருத்து திரித்துக்கூறப்பட்டுவிட்டது. அது வைரலாகிவிட்டது. எனது கருத்து யாரையாவது காயப்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா பெண்கள் கமிஷன் தலைவர் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ``பொதுக்கூட்டத்தில் ராம் தேவ் பெண்கள் குறித்து மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்துள்ளார். அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சம்பவத்திற்காக அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ``பாபா ராம் தேவ் சர்ச்சைக்குரிய வகையில் பேசும் போது அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை முதல்வர் மனைவி அம்ருதா ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். பாபா ராம்தேவ் ஆரம்பத்தில் யோகா முகாம்களை மட்டும் நடத்தி வந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பதஞ்சலி என்ற பிராண்டில் சோப்பு, பற்பசை, உப்பு போன்ற அனைத்து அத்தியாவசியப்பொருளையும் விற்பனை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
from Latest News https://ift.tt/DpB831c
0 Comments