https://gumlet.vikatan.com/vikatan/2022-11/41721b45-345e-4a68-bd56-d6977e0ecf52/IMG_20221125_WA0123.jpg``தமிழக முதல்வரையே அழைக்காமல், தமிழ்ச் சங்கமம் நடத்துகிறார்கள்!" - கொதிக்கும் பீட்டர் அல்போன்ஸ்

ஈரோடு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் தமிழ்நாடு  சிறுபான்மையினர் ஆணைய தலைவரும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி-யுமான பீட்டர் அல்போன்ஸ் நேற்று ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கிய பிறகு மக்கள் மத்தியில் ஒரு புதிய நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் சுயநலத்தை மறந்து அனைத்து காங்கிரஸாரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு கூட்டணி குறித்தும், ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளரா என்பது குறித்தும் முடிவு எடுக்கப்படும். காசியில் தமிழ்ச் சங்கமம் என்ற பெயரில் மத்திய அரசு விழா நடத்துகிறது. இந்த விழாவில் கலந்துகொள்ள தமிழக முதல்வருக்கு அழைப்பு விடுக்கவில்லை.

சிறுபான்மையினரும் அந்த விழாவில் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றனர். தமிழர்களை சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேட பா.ஜ.க முயல்கிறது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தமிழர்களின் பல்வேறு இலக்கியங்களை உருவாக்கியிருக்கிறார்கள். ஜி.யு.போப்  போன்றவர்கள் பல இலக்கியங்களை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். எனவே அவர்களை புறக்கணித்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

உரையாற்றும் பீட்டர் அல்போன்ஸ்.

கொங்கு மண்டலத்திலும் மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேட பா.ஜ.க முயல்கிறது. கொங்கு மண்டலத்தில் பதற்றத்தை உருவாக்கி வளர்ச்சியை மட்டுப்படுத்தினால் தமிழகத்தின் வளர்ச்சி மட்டுப்படும் என்று பா.ஜ.க கருதுகிறது. அதைவைத்து தமிழகத்தில் கட்சியை வளர்க்க நினைக்கிறது பா.ஜ.க. துரதிஷ்டவசமாக தனது கொள்கைகளை மறந்து அ.தி.மு.க, பா.ஜ.க-வை ஆதரிக்கிறது. பிரதமர் மோடி ஆண்டொன்றுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்குவதாகக் கூறினார். ஆனால் ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், இப்போதுதான் 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கியிருக்கிறார். மத்திய அரசில் மட்டும் 30 லட்சம் பணியிடங்கள் காலியாக இருகின்றன. உலகிலேயே படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி இருக்கும் தேசம் இந்தியா மட்டும்தான். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி போஸ்டர் குறித்த குற்றச்சாட்டை கூறினார். அதற்கு தகுந்த விளக்கத்தை அந்தத் துறை அளித்து குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது.  எதிர்க்கட்சித் தலைவர் பதவி அரசியலமைப்பு அங்கீகாரம் பெற்றது.

விழா ஒன்றில் பங்கேற்ற பீட்டர் அல்போன்ஸ்.

அ.தி.மு.க ஆட்சியில்தான் கொரோனா காலத்தில் பணியாளர்கள் அணியும் அங்கிகூட அதிகபட்ச விலைக்கு வாங்கப்பட்டது. கொரோனா பரிசோதனை கட்டணம் பல மடங்கு நிர்ணயிக்கப்பட்டு, அதனால் பல ஆய்வகங்களை நடத்தியவர்கள் குறைந்த காலத்தில் கோடீஸ்வரர் ஆனார்கள். ஊழலுக்கு வித்திட்டவர்கள் அவர்கள். எப்படி ஒரு ஆட்சி நடக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் எடப்பாடி ஆட்சி. எப்படி ஒரு ஆட்சி நடக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் ஸ்டாலின் ஆட்சி. ராஜீவ் கொலை வழக்கில் ஏழு பேர் விடுதலை நீதிமன்ற உத்தரவு. அதை எதிர்க்கவில்லை. அதே சமயத்தில் தீவிரவாதிகளை ஹீரோ போல வரவேற்பதை  நாங்கள் ஏற்கவில்லை. பால் விலை, மின்கட்டண உயர்வு தமிழகத்தைவிட கர்நாடகாவில் மிக அதிகம். பல ஆண்டுகளாக கட்டணம் உயர்த்தப்படாததால் குறிப்பிட்ட அந்த நிறுவனங்கள் பாதிக்கப்படுவதால் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது" என்றார்.



from Latest News https://ift.tt/jA5dkqH

Post a Comment

0 Comments