Doctor Vikatan: முடி வளர்ச்சிக்கும் நாம் உபயோகிக்கும் எண்ணெய்க்கும் தொடர்புண்டா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்...

கூந்தல் வளர்ச்சியைத் தீர்மானிப்பதில் இரண்டு விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. உங்கள் ரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்ஸிஜனும், உங்கள் ரத்தத்தில் உள்ள ஊட்டச்சத்துகளும்தான் அதைத் தீர்மானிப்பவை.
நாம் அன்றாடம் சாப்பிடும் அனைத்து உணவுகளிலும் ஊட்டச்சத்துகள் உள்ளன. அது நீங்கள் சாப்பிடும் காய்கறி, கீரை, தயிர்சாதம் என எதுவாகவும் இருக்கலாம். முடி வளர்ச்சிக்கு காஸ்ட்லியான உணவுகள்தான் உதவும் என்றும் நினைக்க வேண்டாம். பழைய சோற்றில்கூட வைட்டமின் பி 12 சத்து அபரிமிதமாக உள்ளது. அது முடி வளர்ச்சிக்குப் பெரிதும் உதவக்கூடியது.
நீங்கள் தலைக்குத் தடவும் எண்ணெயானது மண்டைப் பகுதியை வறண்டு போகாமல் வைக்கக்கூடியது. முடியை இழுத்துப் பார்த்தால் அதன் நுனியில் வெள்ளைநிறத்தில் பல்ப் போன்ற ஒரு பகுதியைப் பார்க்கலாம். அதை `ஹேர் ஃபாலிக்கிள்' என்று சொல்கிறோம். அதாவது கூந்தலின் வேர்ப்பகுதியையும் மண்டைக்கு வெளியே தெரிகிற முடியையும் இணைக்கிற இடம் இது. இந்தப் பகுதி சில நேரம் வறண்டு போகலாம். அதன் காரணமாக பாக்கெட் போன்ற ஃபாலிக்கிள் பகுதி திறந்துகொண்டு, முடி உதிரத் தொடங்கும். எனவே இதற்கும் ஊட்டச்சத்துள்ள உணவுகள் மிக முக்கியம்.

ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொண்ட போதும் சிலருக்கு முடி உதிர்வு அதிகமாக இருக்கும். அவர்களுக்குத் தலையில் பொடுகு, அழுக்கு அதிகமிருக்கலாம். இன்ஃபெக்ஷன் இருக்கலாம். அதன் காரணமாகவும் ரத்த ஓட்டம் தடைப்பட்டு முடி உதிர்வு இருக்கும். எனவே கூந்தலை அடிக்கடி அலசி தலையில் பொடுகு, அழுக்கு சேராமல் சுத்தமாக வைத்திருப்பதுதான் கூந்தல் ஆரோக்கியத்துக்கு அடிப்படை. அதற்கடுத்து ஊட்டச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவது. மற்றபடி எண்ணெய்க்கும் முடி வளர்ச்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Latest News https://ift.tt/foF1Uhk
0 Comments