https://gumlet.vikatan.com/vikatan/2022-12/f4dc20ff-5e70-4a31-8f4f-c790fdeb3b16/corp_1.jpg`விஜிலென்ஸ் விசாரணை கேட்ட திமுக பெண் கவுன்சிலர்!’ - அதிர்ந்த நெல்லை மாநகராட்சி மேயர்

நெல்லை மாநகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமையில் நடந்த மாமன்றக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி, உதவி ஆணையர்கள் மற்றும் அனைத்துக் கட்சிகளின் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் குடிநீர் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அனைத்து கவுன்சிலர்களும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் அந்த தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது.

கம்யூனிஸ்ட் கட்சியினர் தர்ணா

இதனிடையே, மாநகராட்சியில் குடிநீர் கட்டணத்தை உயர்த்த இருப்பதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மேயர் சரவணன், காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

மாநகராட்சிக் கூட்டத்தில் குடிநீர் கட்டண உயர்வு தொடர்பான தீர்மானத்தைத் தவிர அனைத்துத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்களின் வார்டுகளில் உள்ள பிரச்னைகள் குறித்துப் பேசினார்கள். தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் தங்களின் வார்டுகளில் உள்ள கோரிக்கைகளை முன்வைத்தனர்.

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் ஆவேசமாகப் பேசும் கவுன்சிலர்கள்

அதைத் தொடர்ந்து பேசிய தி.மு.க-வின் பெண் கவுன்சிலரான சுதா, ``எனது வார்டுக்கு உள்பட்ட பகுதியில் கடந்த ஒன்பது மாதங்களாக எந்தத் திட்டமும் செயல்படுத்தப்பட வில்லை. எங்களின் கோரிக்கைகள் குறித்து மாமன்றத்தில் பேசக்கூட பெண் உறுப்பினர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதில்லை. எங்களுக்கே மரியாதை இல்லாதபோது மக்களின் பிரச்னைகளை எப்படித் தீர்த்து வைப்பார்கள்?” என பகிரங்கமாக குற்றம் சாட்டினார். ஆனால் மேயர் சரவணன் அதை மறுத்ததுடன், யாரோ சொல்லிக் கொடுத்ததைக் கேட்டு இது போல கவுன்சிலர் பேசுவதாகத் தெரிவித்ததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

மற்றொரு கவுன்சிலரான அஜய் பேசுகையில், ”மாநகராட்சியில் அதிகார துஷ்பிரயோகம் நடக்கிறது. மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் தனியார் பொருட்காட்சி உள்ளிட்ட கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டதில் பெருமளவுக்கு முறைகேடு நடந்திருக்கிறது. அனுமதி கொடுப்பது தொடர்பாக மாமன்றக் கூட்டத்தில் அனுமதி எதுவும் பெறப்படவில்லை. இதில் பெருமளவு பணம் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும்” என்று சூட்டைக் கிளப்பினார்.

12-வது வார்டு கவுன்சிலர் கோகுலவாணி

அந்த சலசலப்பு அடங்குவதற்கு முன்பாக 12-வது வார்டின் பெண் கவுன்சிலரான கோகுலவாணி எழுந்து, ”இந்த மாமன்றத்துக்கும் உறுப்பினர்களுக்கும் தெரியாமல் தனிப்பட்ட வகையில் சிலர் செயல்படுகிறார்கள். அதன் மூலம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக மக்களிடம் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. முதல்வரின் மீதுள்ள நம்பிக்கையால் நெல்லை மக்கள் தி.மு.க-வுக்கு வாக்களித்ததால் மாநகராட்சியில் எதிர்க்கட்சியே இல்லை என்கிற நிலை உருவாகியிருக்கிறது. முதல்வரின் மீது மக்கள் வைத்த நம்பிக்கையைப் பொய்யாக்கும் வகையில் சுயநலத்துடன் யாரும் செயல்பட அனுமதிக்க முடியாது” என்று படபடத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “நான் இந்த மாநகராட்சியின் பணி நியமனக்குழுவின் தலைவராக இருக்கிறேன். இதுவரை அந்தக் குழுவின் கூட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் கூட்டவே இல்லை. அத்துடன், பணி நியமனக்குழுவுக்குத் தெரியாமலே பணி நியமனங்களைச் செய்து கொள்கிறார்கள். அதில் பெருமளவுக்கு பணம் வசூலிக்கப்படுவதாக குற்றம்சாட்டு எழுந்திருக்கிறது. அதில் துளியும் சம்பந்தம் இல்லாத என்னையும் சிலர் அவதூறாகப் பேசுகிறார்கள். சமீபத்தில் ஓட்டுநர்கள் பணி நியமனத்தில் கூட பணம் வசூலிக்கப்பட்டதாகவும் அதில் எனக்கும் சம்பந்தம் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுவதால் நான் மிகுந்தம் மனவேதனையில் இருக்கிறேன்.

மேயர் துணைமேயர் மற்றும் ஆணையாளர்

நான் அந்தக் குழுவில் இருக்கும் ஒரே காரணத்துக்காக என் மீது இத்தகைய அபாண்டமான புகார் வருகிறது. அதனால் பணி நியமங்களில் நடந்திருக்கும் முறைகேடு தொடர்பாக விஜிலென்ஸ் என்கொயரி நடத்த ஆணையாளர் உத்தரவிட வேண்டும். அப்போது தான் பணி நியமனத்தில் மோசடி நடந்ததா என்பது குறித்து முழுவிவரமும் பொதுமக்களுக்குத் தெரியவரும்” என்று கொந்தளித்தார்.

அத்துடன், லஞ்ச ஒழிப்பு விசாரணை கோரும் மனுவையும் மாநகராட்சி ஆணையரிடம் அளித்தார். நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க கவுன்சிலர்களே ஊழல், முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



from Latest News https://ift.tt/ayhgO7N

Post a Comment

0 Comments