கோவிட் IHU புதிய வகை
பிரான்ஸ் நாட்டில் உள்ள அறிவியலாளர்கள் 'IHU' எனப்படும் புதிய கோவிட் வகையைக் கண்டறிந்தனர். இந்த புதிய வகை, ஓமைக்ரானை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது எனக் கூறப்பட்டது. B.1.640.2 அல்லது IHU எனப்படும் இந்த தொற்று, ஆப்பிரிக்க நாடான கேமரூனில் இருந்து பிரான்ஸுக்கு பரவியதாக கூறப்பட்டது.
பிலிப்பைன்ஸில் குழந்தை திருமணத்துக்கு தடை:
பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ டுடெர்தெ (Rodrigo Duterte) அந்த நாட்டில் குழந்தை திருமணத்தைத் தடை செய்யும் சட்டத்தில் கையெழுத்திட்டார்.18 வயதுக்குட்பட்டவரை திருமணம் செய்தாலோ அல்லது இணைந்து வாழ்ந்தாலோ 12 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ரஷ்யா - உக்ரைன்... முக்கிய பேச்சுவார்த்தை
அமெரிக்க, ரஷ்ய அதிகாரிகளின் முக்கியச் சந்திப்பு சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்றது. அதில், உக்ரைனில் நிலவிய பதற்ற நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் இதர மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
டோங்காவில் எரிமலை வெடிப்பு
தென் பசிபிக் தீவு நாடான டோங்காவில் நீருக்கடியில் அமைந்திருந்த ஹங்கா டோங்கா ஹங்கா ஹா'பை (Hanga donga hanga ha'apai) என்ற பெரிய எரிமலை ஒன்று வெடித்தது. இதனால் பசிபிக் பெருங்கடலிலும் ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிஜி, ரஷ்யா, சிலி மற்றும் அமெரிக்காவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சீனாவில் குறைந்த பிறப்பு விகிதம்
சீனாவில் 1000 பேருக்கு 752 குழந்தைகள் என்ற அளவில் பிறப்பு விகிதம் குறைந்திருக்கிறது. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா தான் விளங்கி வந்தது. இதனால், சீனா நாட்டில் மக்கள்தொகையை கட்டுப்படுத்த தம்பதியினர் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டது.
இதனால், சீனாவில் மக்கள் தொகையின் வீதம் குறைய ஆரம்பித்துவிட்டது. இதனையடுத்து, கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற சட்டம் கைவிடப்பட்டு, மக்கள் 3 குழந்தைகள் வரைக்கும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
புதிய HIV வகை
நெதர்லாந்தின் ஆராய்ச்சியாளர்கள் புதிய HIV வகையைக் கண்டறிந்துள்ளனர். இதற்கு VB வகை என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்தொற்று 3.5 மடங்கு முதல் 5.5 மடங்கு வரை அதிக தொற்றை ஏற்படுத்துகிறது. இந்தத் தொற்று 1980 -1990 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் நெதர்லாந்தில் தோன்றியதாக கூறப்படுகிறது.
ரஷ்ய - உக்ரைன் போர்
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை நடத்தியது. இந்தப் போரில் உக்ரைன், ரஷ்யா மட்டுமல்லாமல், உலக நாடுகள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யாமீது பொருளாதாரத் தடை விதித்திருக்கின்றன.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டாலும், இந்தியா, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கிவருகிறது. போரை நிறுத்த பலகட்ட முயற்சிகள் நடைபெற்றன. அதோடு பல்வேறு உலக நாடுகள் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்திவந்தன. ஆனால் போர் இன்னும் முடிந்தபாடில்லை.
சாம்பல் நிற பட்டியலில் பாகிஸ்தான்
சர்வதேச பண மோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக் கண்காணிப்பு அமைப்பான நிதியியல் நடவடிக்கைப் பணிக் குழுவின் சாம்பல் நிறப் பட்டியலில் (grey list) பாகிஸ்தானின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்ய வழிவகுத்த பணமோசடியைப் பாகிஸ்தான் சரி பார்க்கத் தவறியதற்காகச் சாம்பல் நிறப் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது.
தென்கொரிய அதிபர் தேர்தல்
தென் கொரியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடப்பது வழக்கம். அந்த வகையில், 20-வது அதிபருக்கான தேர்தல் இந்தாண்டு மார்ச் 9-ம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், 2022-ல் நடைபெற்ற தென்கொரிய அதிபர் தேர்தலில் யூன்-சுக் -யோல் (Yoon Suk Yeol) வெற்றி பெற்று புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
ஐ.நா உலக மகிழ்ச்சி அறிக்கை 2022
2022-ம் ஆண்டு உலக மகிழ்ச்சி அறிக்கையில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாகப் பின்லாந்து முதலிடம் பிடித்திருக்கிறது. இந்த ஆண்டு இந்தியா மூன்று இடங்கள் முன்னேறி 136-வது இடத்தை பிடித்தது. உலகின் மகிழ்ச்சியற்ற நாடாக ஆப்கானிஸ்தான் 146-வது இடத்தில் உள்ளது.
ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2022
12-வது ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை நியூசிலாந்தில் நடத்தப்பட்டது. இறுதிப்போட்டி, ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. நியூசிலாந்து ,ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய அணிகள் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றன. இந்த நிலையில், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கோப்பையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வென்று அசத்தியது.
அழகிப் போட்டி
2022-ம் ஆண்டு ப்யூரிட்டோ ரிக்கோ (Puerto Rico), சான் சூவான் பகுதியில் நடைபெற்ற 70-வது அழகிப் போட்டியில் ,போலந்து நாட்டை சேர்ந்த கரோலினா பைலாவ்ஸ்கா (Karolina Bielawska) 2021-ஆம் ஆண்டின் அழகிப் பட்டத்தை வென்றார்.
இப்போட்டியில் அமெரிக்காவின் ஸ்ரீ சாய்னி , கோட்டி டி ஐவரி நாட்டினைச் சேர்ந்த ஒலிவியா யாஷ் ஆகியோர் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர்.
இலங்கையில் அவசர நிலை
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால், இலங்கை அரசு நள்ளிரவில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியது. அதைத் தொடர்ந்து மக்கள் போராட்டம், அமைச்சர்கள் ராஜினாமா, அனைத்துக் கட்சிகளின் போராட்டம் என இலங்கை அரசியல் களம் அனல் பறந்தது. இந்த நிலையில், பொருளாதார நெருக்கடி, டீசல் தட்டுப்பாடு, உணவு விலை உயர்வு, பணவீக்கம் என்ற பல காரணங்களால் மக்கள் ராஜபக்சேவின் வீட்டை முற்றுகையிட்டனர். அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் தற்போது இலங்கையில் அதிபராக ரணில் விக்கிரம சிங்கே இருக்கிறார்.
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி
பாகிஸ்தானில் கடந்த ஒரு வருடமாகப் பொருளாதாரச் சிக்கல் நீடித்துவருகிறது. அதனால், பிரதமராக இருந்த இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவந்தன. இம்ரான் கான் பதவியை இழந்ததை அடுத்து, பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஆனாலும் இன்னும் பொருளாதார நெருக்கடி நீடித்துவருகிறது. மேலும் பணப்பற்றாக்குறையும் அதிகரித்திருக்கிறது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து ரஷ்யா இடைநீக்கம்
உக்ரைனில் மனித உரிமை மீறல்களையடுத்து, ஐநா மனித உரிமைகள் பேரவையிலிருந்து (UNHRC) ரஷ்யா இடைநீக்கம் செய்யப்பட்டது. இந்த வாக்கெடுப்பிற்கு ஆதரவாக 93 வாக்குகள், எதிராக 24 வாக்குகளும் வாக்களிததன. மொத்தம் 58 நாடுகள் வாக்களிக்கவில்லை. இந்தியா வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
பிரான்சின் முதல் பெண் பிரதமர்
பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற இமானுவேல் மேக்ரான் 2-வது முறையாக அந்நாட்டின் அதிபராக பொறுப்பேற்றார். இதையடுத்து, இமானுவேல் மேக்ரான் அமைச்சரவையில் நிறைய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதன் தொடர்ச்சியாக எலிசபெத் போர்ன் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக எலிசபெத் போர்ன் 2020 முதல் 2022 வரை பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸின் அரசாங்கத்தில் தொழிலாளர்துறை அமைச்சராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர்
ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராகத் தொழிலாளர் கட்சியின் தலைவர் அந்தோணி அல்பனீஸ் (Anthony Albanese) பதவியேற்றார். இவர் ஆஸ்திரேலியாவின் 31-வது பிரதமராவார். இவர் மிகவும் எளிய குடும்ப பின்னணியை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ், அந்நாட்டின் நிர்வாக அதிகாரம், கவர்னர் ஜெனரலிடமே இருக்கும். ஆனால் அரசாங்கத்தின் தலைவராகப் பிரதமர் செயல்படுவார்.
மத்திய ஆப்பிரிக்கா: பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவித்தது
பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாக அறி்வித்த இரண்டாம் பகுதியாக மத்திய ஆப்பிரிக்கா மாறியிருக்கிறது. எல் சடார் பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாக ஏற்றுக் கொண்ட முதல் நாடாகும். மத்திய அமெரிக்க கண்டத்தின் மிகச்சிறிய நாடு இது.
கருக்கலைப்பு உரிமைக்கு அமெரிக்காவில் தடை
அமெரிக்க அரசு கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்தது. அதன்படி, 1973 ஆம் வருடம் ரோ மற்றும் வேட் இடையிலான வழக்கில் கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட சுதந்திரம். அது அவர்களின் உரிமை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த உரிமைக்கு தற்போது தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது. கருக்கலைப்பை தடை செய்யும் நடவடிக்கையை ஒவ்வொரு மாகாணங்களாக நடைமுறைப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கானா நாட்டில் எபோலா பாதிப்பு கண்டுபிடிப்பு
கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த நிலையில், கானா நாட்டில் இரண்டு பேருக்கு எபோலா வைரஸ் பாதிப்பு இருப்பது முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா பாதிக்கப்பட்டது இதுவே முதல்முறை.
சோமாலியாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் பலி
சோமாலியாவில், அந்த நாட்டு அரசுக்கு எதிராக கடந்த 15 ஆண்டுகளாக தாக்குதல் நடத்திவரும் அல்-ஷாபாப் என்ற தீவிரவாத குழு, ஹோட்டல் ஒன்றில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 40 பேருக்கு மேல் பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு
ஆப்கானிஸ்தானின் காபூலிலுள்ள ஒரு மசூதியில் மாலை நேரத்தில் தொழுகை நடைபெற்றது. அப்போது திடீரென பயங்கரச் சத்தத்துடன் குண்டு வெடித்தது. குண்டு வெடித்ததில் மசூதி இடிந்து விழுந்ததோடு, அருகிலிருந்த கட்டடங்களும் சேதமடைந்துவிட்டது. இந்த பயங்கர குண்டுவெடிப்பில் 20-க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
சியோல் ஹாலோவீன் திருவிழா விபத்து
தென் கொரியாவில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஹாலோவீன் திருவிழாவில் பயங்கர கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் உடல் நசுங்கிப் பலியாகினர்.
ராணி எலிசபெத் மறைவு
இங்கிலாந்து வரலாற்றில் நீண்டகாலம் ராணியாக இருந்தவர் இரண்டாம் எலிசபெத். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்ட இவர் தன்னுடைய 96-வது வயதில் காலமானார். தனது பதவிக்கால வரலாற்றில் 15 பிரதமர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். இந்தியா உட்பட பல உலக நாடுகள் ராணியின் மறைவுக்குத் துக்கம் அனுசரித்தன.
ரஷ்யப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு
ரஷ்யாவில் ஒரு பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், மாணவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்திய அந்த நபரும் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்தார்.
தன் பாலின திருமணம்; ஜோ பைடன் ஒப்புதல்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தன்பாலின திருமண சட்டத்தில் கையெழுத்திட்டார். இந்த சட்டமானது தன்பாலின திருமணங்களுக்குக் கூட்டாட்சி பாதுகாப்பு வழங்கும் எனக் கூறப்படுகிறது.
ஜான் எஃப் கென்னடியின் இறப்பு ஆவணம் வெளியீடு
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடியின் படுகொலை தொடர்பான பல்லாயிரக்கணக்கான ஆவணங்களை வெளியிடுவதற்கு வெள்ளை மாளிகை முதல் தடவையாக ஒப்புதல் வழங்கியது.
ஜி20 மாநாடு
உலக நாடுகள் மிகவும் முக்கியமானதாகக் கருதும் ஜி20 உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்றது. இதில் இந்தியப் பிரதமர் மோடி உட்படப் பல உலகத் தலைவர்கள் கலந்துகொண்டனர். மாநாட்டில், உணவு, எரிசக்தி பாதுகாப்பு, சுகாதார பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான ஜி20 தலைமையை இந்தியா ஏற்றுக்கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பெரு நாட்டில் கலவரம்
பெரு நாட்டின் முன்னாள் பிரதமர் பெட்ரோ காஸ்டிலோ (Pedro Castillo) மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் நாடு முழுவதும் அவரின் ஆதரவாளர்கள் போராட்டங்களில் இறங்கினர். இந்தப் போராட்டங்களில் கலவரம் வெடித்தது. இதனால் அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டது.
ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராகத் தேர்வு
இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ் பொருளாதார நிலைமைகளைச் சமாளிக்க முடியாமல் பதவி விலகியதைத் தொடர்ந்து, இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலக, ரிஷி சுனக் - லிஸ் ட்ரஸ் இடையே பிரதமர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவியது குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியா நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 162 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
உலகக்கோப்பை கால்பந்து 2022
கால்பந்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த கால்பந்து உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு நாடான கத்தாரில் பிரம்மாண்டமாகத் நடைபெற்றது. கத்தாரில் முடிவடைந்த, உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா அணி கோப்பையை வென்றது.
ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க்
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், 44 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒப்பந்தம் மூலம் ட்விட்டரை தனதாக்கினார். அவர் ட்விட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ-ஆக பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்களையும், செயல்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறார்.
எரிமலை வெடிப்பு
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில், லுமாஜாங் நகரில் உள்ள அந்த நாட்டின் மிகப்பெரிய எரிமலையான செமேரு எரிமலை திடீரென வெடித்துச் சிதறிய சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சர்வதேச அளவில் உங்களை கவர்ந்த\பாதித்த சம்பவங்கள் என்னென்ன? கமெண்ட் பண்ணுங்க மக்களே...
from Latest News https://ift.tt/WLy0QTv
0 Comments