https://gumlet.vikatan.com/vikatan/2022-12/7f949d40-3031-4128-9285-c22e42d60308/1669806240054__1_.jpgதாராவி குடிசை மேம்பாட்டுத் திட்டம்: `இலவச வீடு பெற தகுதியில்லாதவர்களுக்கும் வீடு’ - பட்னாவிஸ் உறுதி

மும்பை தாராவியில் இருக்கும் குடிசைகளை அகற்றிவிட்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்கள் கட்டும் திட்டம் நீண்ட காலமாக கிடப்பில் இருந்து வருகிறது. தற்போது இந்த திட்டத்துக்கு டெண்டர் விடப்பட்டு பணிகளை நிறைவேற்றும் பொறுப்பு அதானி நிறுவனத்திடம் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மாற்று வீடு பெற தகுதியில்லாதவர்கள் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்தது. அதோடு முன்பை விட குறைந்த விலைக்கு டெண்டர் விடப்பட்டிருந்தது.

இந்தப் பிரச்னை குறித்து சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், `மாற்று வீடு பெற தகுதியான 46,191 குடிசைவாசிகள், 12,974 சிறு தொழிற்கூடங்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும். 300 சதுர அடிக்கும் குறைவான வீடு இருப்பவர்களுக்கு 405 சதுர அடியில் வீடு வழங்கப்படும். 750 சதுர அடிக்கும் அதிகமாக வீடு இருந்தால் அவர்களுக்கு ஆயிரம் சதுர அடியில் வீடு வழங்கப்படும். 2000-ம் ஆண்டு முன்பு வரை கட்டப்பட்ட குடிசைகளுக்கு இலவச வீடு வழங்கப்படும்.

2001-2011-ம் ஆண்டு வரை கட்டப்பட்ட குடிசைவாசிகளுக்கு மாற்று வீடு வழங்கப்படும். ஆனால் அவர்களிடம் கட்டுமானச்செலவு வாங்கப்படும். 2011-ம் ஆண்டுக்கு பிறகு கட்டப்பட்ட குடிசைகளுக்கும் மாற்று வீடு வழங்கப்படும். ஆனால் வாடகை திட்டத்தில் இந்த வீடுகள் வழங்கப்படும். சில ஆண்டுகள் கழித்து அந்த வீடுகள் அவற்றின் உரிமையாளர்கள் பெயருக்கு மாற்றிக்கொடுக்கப்படும். தாராவி குடிசை மேம்பாட்டுக்குப் பிறகு அமைக்கப்படும் தொழிற்சாலைகளுக்கு 5 ஆண்டுகள் வரிச்சலுகைகள் வழங்கப்படும்.

அதோடு குடியிருப்பு கட்டடங்களுக்கு கார்பஸ் நிதி வழங்குவது குறித்தும் பரிசீலித்து வருகிறோம். இந்த திட்டத்தில் எந்த வித முறைகேடும் நடக்காமல் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் டெண்டர் விடப்பட்டது. இந்த திட்டத்துக்காக ரயில்வேயிடமிருந்து 47 ஏக்கர் நிலம் பெறப்பட்டிருக்கிறது. தகுதியான மக்களுக்கு வீடு கட்டிக்கொடுக்க இந்த நிலம் மிகவும் உதவியாக இருக்கும்'' என்று தெரிவித்தார்.

தாராவியில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான குடிசைகள் இருக்கும் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வந்த நிலையில், துணை முதல்வர் பட்னாவிஸ் வெறும் 46 ஆயிரம் குடிசைகள்தான் மாற்று வீடு பெற தகுதியானது என்று குறிப்பிட்டிருப்பது அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தாராவி மும்பையின் மையப்பகுதியில் இருக்கிறது. உலகத்திலேயே அதிக குடிசைகளை கொண்ட பகுதியான தாராவி மும்பை விமான நிலையம் மற்றும் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் அருகில் இருக்கிறது. எனவே இந்த இடம் அதிக மதிப்பு மிக்கதாக இருக்கிறது. இந்த திட்டம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் இருந்து வருகிறது. இதற்கு முந்தைய அரசுகளும் பல முறை டெண்டர் விட்டு இருந்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் டெண்டர் விடப்படும் போது குடிசைவாசிகளுக்கு எத்தனை சதுர அடிவீடு கொடுக்கவேண்டும் என்பது உட்பட பல பிரச்னைகள் வந்தது.

தேவேந்திர பட்னாவிஸ்

இதனால் மாநில அரசுகள் அந்த டெண்டர்களை ரத்து செய்து வந்தன. உத்தவ் தாக்கரே கடைசியாக ஆட்சியில் இருந்த போது கூட இறுதியாக வெளியிட்ட டெண்டரை ரத்து செய்தார். தற்போதைய அரசு டெண்டர் விடும் முன்பாக தொழிலதிபர் கவுதம் அதானி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை சந்தித்து தாராவி குடிசை மேம்பாட்டுத்திட்டத்தில் தான் பங்கேற்கப்போவதாக கூறிவிட்டு வந்தார். அதனால் சிவசேனா இந்த திட்டத்துக்கு எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.



from Latest News https://ift.tt/jRrS24h

Post a Comment

0 Comments