Doctor Vikatan: தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கு வாய் துர்நாற்றம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதா? என் மனைவிக்கு தைராய்டு பிரச்னை உள்ளது. அவருக்கு வாய் துர்நாற்றம்இருக்கிறது என்று அடிக்கடி சொல்கிறார். ஆனால் எதிரே நின்று பேசுபவருக்கு அந்த மாதிரி துர்நாற்றம் அடிப்பதில்லை. என் மனைவி குறிப்பிடும் இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்? அவருக்கு வாய்ப்புண், சீழ், பல்வலி, ஈறுவலி என வேறு எந்தப் பிரச்னையும் இல்லை.
- Fariz, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்
தைராய்டு ஹார்மோன்கள் உற்பத்தி குறைவதை 'ஹைப்போ தைராய்டிசம்' என்கிறோம். குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படும்போது அதை 'க்ரெட்டினிசம்' (Cretinism ) என்று சொல்வார்கள்.
இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு உதடுகள் அடர்த்தியாகவும் துருத்தியபடியும், நாக்கு வழக்கத்தைவிட சற்று பெரியதாகவும் இருக்கும். பல் வளர்ச்சியிலும் தாமதம் இருக்கும். உமிழ்நீர் சுரப்பிலும் பிரச்னை இருக்கலாம். பொதுவாக வாய் சுகாதாரம் என்பது இந்தக் குழந்தைகளுக்கு சற்று மோசமாகவே இருக்கும்.
எங்கேயாவது அடிபட்டுக் கொண்டாலும் சீக்கிரம் சரியாகாது. இந்தப் பிரச்னை உள்ளவர்களில் பலரும் வாய் வழியே மூச்சு விடுவார்கள். இவர்களுக்கு சுவை உணரும் தன்மையிலும் மாற்றங்கள் இருக்கும். பற்களில் எனாமல் வளர்ச்சியும் சரியாக இருக்காது. ஈறுகளின் ஆரோக்கியமும் மோசமாக இருக்கும். சிலருக்கு பற்களின் வடிவம் மாறியிருக்கலாம்.
இன்னும் சிலருக்கு உமிழ்நீர் சுரப்பிகள் வீங்கியிருக்கும். ஹைப்போ தைராய்டிசம் பாதிப்புள்ளவர்கள், பற்களுக்கான சிகிச்சைகள் எடுக்கும்போது அந்தப் புண்கள் ஆறுவதற்கு கொஞ்சம் தாமதம் ஆகலாம். ஹைப்போ தைராய்டிசம் பாதிப்புள்ளவர்களுக்கு பல் சிகிச்சைகள் கொடுப்பது பல் மருத்துவர்களுக்கும் சற்று சவாலான விஷயம்தான். வாய் சுகாதாரத்தில் இத்தனை சவால்கள் இருக்கும் நிலையில் இவர்களுக்கு வாய் துர்நாற்றம் என்பதும் இருக்கும்.
தைராய்டுக்கு சிகிச்சை எடுக்கும் மருத்துவரிடம் இது குறித்துச் சொல்லவும். அவர் பரிந்துரைக்கும் மருந்துகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ளவும். இருமுறை பல் துலக்குவது, சாப்பிட்டதும் வாய்க் கொப்பளிப்பது என வாய் சுகாதாரத்தில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டியதும் அவசியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Latest News https://ift.tt/X8u3ROt
0 Comments