https://gumlet.vikatan.com/vikatan/2023-01/56d1ec05-def2-44e2-a547-bff715e981ac/IMG_20230131_061604.jpg``திருமகன் ஈவெரா முதலில் நாம் தமிழர் கட்சியில் சேருவதற்காக வந்தார்!" - சீமான் பேச்சு

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ஈரோடு மரப்பாலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனை பொதுமக்கள் மத்தியில் அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது அவர், ``ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாட்டையும் தான் இன்றைய ஆளுங்கட்சியினர் எடுக்கின்றனர். இந்த நிலையை மாற்றுவதற்கு ஒரு லட்சிய வேட்கை வேண்டும். ஜனநாயகத்தை நிலைநாட்ட கேடு கெட்ட பணநாயகத்தை ஒழிக்க வேண்டும்.
ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வந்து விட்டால் மக்களைச் சந்திப்பதில்லை. மாநிலத்திலும் சரி, மத்தியில் ஆளும் பிரதமர் மோடியும் சரி இதே நிலைப்பாடுடன்தான் உள்ளனர்.
ஒரு ஆலமரம் விதையில் இருந்து தான் தொடங்குகிறது. சமுத்திரம் கூட ஒரு துளியில் தான் தொடங்குகிறது. அதுபோல மக்களின் மனமாற்றம் ஈரோடு கிழக்கில் இருந்து தொடங்கட்டும்.

சீமான்

உங்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை இந்தக் கூட்டத்தின் மூலமாக கூறுகிறேன்.  இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் முதலில் நம்ம கட்சியில் சேருவதற்காகத்தான் வந்தார். அப்புறம் அவருடைய ஐயா (ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்) என்ன சொன்னாரோ தெரியவில்லை. சரி நீ அங்கேயே இருப்பா என்று கூறி விட்டேன். அவர் இறந்ததில் எனக்கு மிகுந்த மனத்துயரம் தான். அவருடைய தந்தையிடம் அவர் காலமானதற்காக துக்கம் விசாரித்தேன்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இத்தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக திருமகன் ஈவெரா பணியாற்றி இருக்கிறார். இந்த காலகட்டத்தில் அவர் சட்டப்பேரவையில் ஏதாவது மக்கள் பிரச்னை பற்றி பேசியதாக கேள்விபட்டீர்களா?. இப்போது அவரது ஐயா (இளங்கோவன்) வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு போனால் அவரும் பேசப் போவதில்லை. அப்படியானால் நீங்கள் செய்ய வேண்டியது சட்டப்பேரவையில் பேசக்கூடிய ஒருவரைத் தான் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும். எங்கள் கட்சியின் வேட்பாளர் சட்டப்பேரவையில் உங்களுக்காக பேசுவார்.

எடப்பாடி பழனிசாமி உண்மையான எதிர்க்கட்சித் தலைவராக போராடவில்லை. உண்மையான எதிர்க்கட்சித் தலைவராக நாம் தமிழர் கட்சி தான் போராடி வருகிறது. காங்கிரஸ், பா.ஜ.க. ஆகியவை இந்த நிலத்துக்காகவும், மொழிக்காகவும் போராடி இருக்கிறதா?

ஈழப்பிரச்னை, அணுஉலை பிரச்னை, காவிரி நதிநீர் பிரச்னை என எதற்காகவும் போராடியதில்லை. காவிரியிலோ, முல்லைபெரியார் நதிநீர் பிரச்னைகளுக்காக மற்ற மாநிலங்களுக்காகத் தான் இந்த இருபெரும் தேசிய கட்சிகளும் துணை போகின்றன.

வேட்பாளருடன் சீமான்

ஈழத்தில் நடந்ததெல்லாம் இங்கும் நடக்கும். ஈழத்தில் நம் மக்களை அடித்து விரட்டினான். அதேபோல இங்கும் வட இந்தியர்களால் நம் இனத்துக்கும் அந்த நிலை ஏற்படும். நான் சொன்னதெல்லாம் நடந்து வருகிறது. அதற்கு ஒரே தீர்வு எனக்கு ஓட்டு போடுங்கள். ஒகி புயலில் கன்னியாகுமரியில் எத்தனையோ மீனவர்கள் உயிரிழந்தார்கள். அவர்கள் அனைவரும் பா.ஜ.க-வுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று கூறி, ஒரேநாளில் 40,000 வாக்காளர்களின் பெயர்களையும் பட்டியலில் இருந்து நீக்கி விட்டார்கள். அதேபோல நான் ஆட்சிக்கு வந்தால் வட இந்தியர்களுக்கு இங்கு வாக்குரிமை அளிக்க அனுமதிக்க மாட்டேன்.

நம் இனத்தை கொன்று குவித்தவர்கள் காங்கிரஸார். அவர்களுக்கு துணை நின்றது தி.மு.க.வினர். அவர்களுக்கு வாக்கு செலுத்தினால் என்னவாகும் என்பதை எண்ணிப் பாருங்கள்.
பிரதமர் மோடிக்கு திடீரென தமிழ்பாசம் வந்து விட்டது. தமிழின் தொன்மையால் நான் பெருமையடைகிறேன் என்று மோடி கூறுகிறார். அதை பார்த்து ஏமாந்து விடக்கூடாது. நாம் வேளாண்மையை விட்டு வெளியேறி விட்டோம். இதனால் உணவுப்பஞ்சம் ஏற்படும் வாய்ப்புள்ளது என்பதை தமிழினம் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.



from Latest News https://ift.tt/vXHRqAL

Post a Comment

0 Comments