ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பணிமனை திறப்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.
ஈரோடு கிழக்கு தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மகளிர் பாசறையின் துணைச் செயலாளர் மேனகாவை சீமான் அறிமுகம் செய்து வைத்தார். பி.எஸ்சி., ஆடை வடிவமைப்பு பிரிவு பட்டதாரியான மேனகாவின் கணவர் நவநீதனும் இதே கட்சியில் செய்தி தொடர்பாளராக உள்ளார். இவர் வரும் 2-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில், ``ஈரோடு கிழக்கு தொகுதியில் மாற்றத்தை எதிர்நோக்கும் மக்களுக்காகவே நாங்கள் போட்டியிடுகிறோம். மற்ற கட்சிகளுடன் ஒப்பிடும்போது எங்களிடம் தத்துவ நிலைபாடு மட்டுமே உள்ளது. அவர்கள் கோடியை கொட்டுவார்கள், நாங்கள் கொள்கையை முன்வைப்போம். ஏன் வாக்குக்கு பணம் வாங்குகிறீர்கள் என்று மக்களைக் கேட்டால், வெற்றி பெற்று வருபவர்கள் எதையும் செய்வதில்லை. எங்களுக்காக இதையாவது அவர்கள் கொடுக்கட்டும் என்கிறார்கள். வாக்குக்கு கையேந்தும் நிலையில் தான் மக்களை வைத்திருக்கிறார்கள்.
மின்சாரம் இல்லாத இடத்தில் தான் மெழுகுவர்த்தியை தேடுவார்கள் என்று கூறுவார்கள். அநீதியும், அக்கிரமும் பெருகும்போது மக்கள் எங்களைத் தேடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
மக்களிடம் ஒரு தேடல் தேவைப்படுகிறது. 5 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தலில் நமக்கு நல்ல தலைவன் தேவை என்ற தேடுதல் மக்கள் மத்தியில் வர வேண்டும். இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிதான் வெல்லும் என்ற மாயையை ஏற்படுத்தியுள்ளனர். அதிகாரத்தில் உள்ளவர்களின் கட்டுப்பாட்டில் அதிகாரிகளும், அதிகார பலமும் இருப்பதாக கருதுவதால் தான் இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் மக்கள் மாற்றத்தை விரும்பி விட்டால் ஆளுங்கட்சியாவது, எதிர்க்கட்சியாவது. எல்லாேரையும் தூக்கி போட்டு விடுவார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.
நாங்கள் மக்களை நேரில் பார்த்து பிரசாரம் செய்து வெற்றியை பெற வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் மற்ற கட்சிகள் வீதிகளில் அமர்ந்து பணம் கொடுத்து வாக்குகளை சேகரிக்க முயல்கிறார்கள். நாங்கள் பிரசாரத்தை அதிகப்படுத்தும்போது மக்களுக்கு வழங்கும் வாக்குகளுக்கான தொகை ஆயிரத்தில் இருந்து படிப்படியாக அதிகரித்து விடும்.
மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, பண மதிப்பிழப்பு ஆகிய இரு நிகழ்வுகளால் ஏற்கெனவே மக்களின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து விட்டது. ஆனால் மத்திய அரசு அதை ஒப்புக்கொள்ளவதே இல்லை. கேரளாவில், அரசே மோடி குறித்த ஆவணப்படத்தை வெளியிடுகிறது. ஆனால் இங்கு அலைபேசி மூலம் காணொலியில் பார்த்தாலே வழக்கு போடுகிறார்கள். அதானி போன்றவர்கள் உலக அளவில் பெரும் பணக்காரர்களாக உள்ளனர். ஆனால் அவர்கள் அரசுக்கு கடன்காரர்களாக உள்ளனர். அவர்களால் ரூ. 2.50 லட்சம் கோடி அளவுக்கு அரசுக்கு கடன் ஏற்பட்டுள்ளது.
கடந்த முறை 234 தொகுதிகளில் ஒன்றாகத் தான் இந்தத் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டோம். ஆனால் இம்முறை 12 நாள்களுக்கு மேல் தங்கியிருந்து தொடர் பிரசாரம் மேற்கொள்வேன். மத்திய அரசு கொடுத்த அழுத்தம் காரணமாகத் தான் மின்கட்டணத்தை உயர்த்தியதாக செந்தில் பாலாஜி கூறுகிறார். சொத்துவரி உயர்வால் வீடுகளின் வாடகைக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எரிவாயு உருளையின் விலை ரூ. 1,100 முதல் 1,200 வரை உள்ளது. அரிசி, பருப்புக்கு 5% வரை ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் மக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்.
நம்மிடையே உள்ளதில் மிகப்பெரும் குறை மது. இங்கு கம்பி கட்டும் வேலை முதல் விவசாய பணிகள் வரை வேலை செய்ய நம் மக்கள் முன்வருவதில்லை. இந்தப் பணிகளை வட இந்திய மக்கள் தான் செய்கின்றனர். புலம்பெயர்ந்த மக்கள் இங்கேயே 30 ஆயிரம், 40 ஆயிரம் என ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. அவர்கள் நம் நிலத்தையும், அரசியலையும் நிர்ணயிக்கும் சக்தியாக மாறி வருகிறார்கள். இவர்கள் யாரும் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளுக்கு வாக்களிக்கப் போவதில்லை. வட இந்தியர்கள் பா.ஜ.கவுக்கு தான் வாக்களிப்பார்கள். எனவே, நம் அரசியலையும், பொருளாதாரத்தையும் நிர்ணயிக்கும் சக்தியாக அவர்கள் மாறிக் கொண்டிருக்கிறார்கள்
பான் மசாலா, குட்காவுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அதை நீதிமன்றம் என்று சொல்லக்கூடாது. அது, தீர்ப்பு மன்றம். மதுக்கடைகளை மூடுமாறு பொது நல வழக்கு தொடரப்படுகிறது. அந்த நீதிமன்றம், அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்கிறது. அதேசமயம், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்குமாறு அரசு கொள்கை முடிவெடுத்து அறிவிக்கும்போது அதே நீதிமன்றம் தலையிட்டு நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று கூறுகிறது. நம்முடைய நீதிமன்றங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதற்கு இது ஒரு உதாரணம்.
இப்போதும் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கக் கோரும் மசோதாவுக்கு ஆளுநர் கையெழுத்து போடாமல் இருக்க காரணம் அதை நடத்துபவர்களே ஆளுநர் சார்ந்த முதலாளிகள் தான்.
இடைத்தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்று கூற முடியாது.
நாங்கள் யாருடைய வாக்குகளையும் பிரிக்க வேண்டும், சிதைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இல்லை. நாங்கள் வெல்ல வேண்டும். மக்களுக்கு நல்லாட்சி தர வேண்டும். காமராஜர், கக்கன் போன்ற நல்லவர்களின் ஆட்சியை எங்களால் தர முடியும் என்ற நோக்கத்தில் தான் மக்களை சந்திக்கிறோம். டெல்லியில் கெஜ்ரிவால் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும்போது எங்களால் முடியாதா, எங்களது பயணம் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதை நோக்கி தான் இருக்கும். மக்களை வீதி, வீதியாகச் சென்று சந்தித்து வாக்குகளைச் சேகரிப்போம். பணம் இருப்பவர்கள் தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலையை உருவாக்கியுள்ளதற்காக நாம் வெட்கி தலை குனிய வேண்டும்.
பணம் இருப்பவர்களால் மட்டுமே அரசியல் செய்ய முடியும் என்றால் முதலாளிகளால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். மக்களாட்சியை அமைக்க முடியாது. தேர்தல் ஆணையம் வாக்குக்கு பணம் கொடுப்பவர்களை தடுப்பதில்லை. சாலையில் செல்வோரையும், வியாபாரத்துக்காக செல்வோர் எடுத்துச் செல்லும் பணத்தை தான் கைப்பற்றும். அவர்களுக்கு யார் பணம் பட்டுவாடா செய்கிறார்கள் என்று நன்றாகத் தெரியும். ஆனால் அவர்களை எதுவும் செய்யாது. வாக்களிப்போருக்கு பணம் கொடுப்பது குற்றம் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. அவ்வாறு பணம் கொடுப்பவர்களை தேர்தல் ஆணையம் கைது செய்துள்ளதா, அதனால் தான் தேர்தல் ஆணையத்தை நாங்கள் நாடகக் கம்பெனி என்று கூறுகிறோம்.
இந்தத் தொகுதியில் நாங்கள் வென்றால் மாற்றத்துக்கான விதை இங்கிருந்து தொடங்குவதாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். நாங்கள் வந்தால் கல்வியை உலகத் தரத்துக்கு தருவோம். மருத்துவத்தை உயர்தரத்தில் தருவோம். பறக்கவே வானூர்தி ஒன்று, இரண்டு தான் உள்ளது. அப்படியிருக்கும்போது பரனூரில் எதற்காக மீண்டும் நிலங்களை கையகப்படுத்த வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதாகக் கூறி 10 ஆண்டுக்கும் மேலாகி இன்னும் எந்த பணியையும் தொடங்கவில்லை. இதுதான் இந்த ஆட்சியின் லட்சணமாக உள்ளது” என்றார்.
இதைத்தொடர்ந்து மரப்பாலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சீமான் பேசும்போது, ``இந்தத் தேர்தலில் நீங்கள் செலுத்தும் வாக்குகளால் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றால், காங்கிரஸுன் எம்.எல்.ஏ எண்ணிக்கையில் ஒன்று கூடும். அ.தி.மு.க வென்றால் அவர்களின் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரிக்கும். நாங்கள் வென்றால் புரட்சிக்கான விதை இங்கிருந்து தொடங்குவதாக இருக்கும். அந்த மாற்றத்துக்காக நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார்.
from Latest News https://ift.tt/pgIDT7b
0 Comments