https://gumlet.vikatan.com/vikatan/2023-02/bdf384b3-cda1-4e78-88cc-36263776ee84/1677438936806.jpgதிருவரங்கம்: வெள்ளி கருட வாகனத்தில் வந்த நம்பெருமாள்; பரவசத்தில் ஆழ்ந்த பக்தர்கள்!

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் வெகு சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் ஸ்ரீநம்பெருமாள் திருப்பள்ளியோடம் எனும் தெப்பத்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

இந்தாண்டு தெப்பத்திருவிழா பிப்ரவரி 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் உற்சவர் நம்பெருமாளுக்குக் காலை, மாலை இருவேளை புறப்பாடுகளும், மண்டகப்படிகளும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நம்பெருமாள் கற்பக விருட்ச வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்வான வெள்ளி கருட சேவை நேற்று மாலை நடைபெற்றது.

வெள்ளி கருட வாகனத்தில் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் வருடத்தில் நான்கு முறை நம்பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளிப்பார். இதில் சித்திரைத்தேர் திருவிழா, தைத்தேர் திருவிழா மற்றும் பங்குனி கோரதத் திருவிழாக்களில் நம்பெருமாள் தங்க கருடவாகனத்தில் எழுந்தருளுவார். ஒரேயொரு முறை மட்டும் அதாவது மாசித் தெப்பத்திருவிழாவின் போது மட்டும் நம்பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் எழுந்தருளுவார். மாசி வெள்ளி கருடவாகனத்தில் நம்பெருமாளை தரிசனம் செய்தால் காசிக்குச் சென்று வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதிகம்.

வெள்ளி கருட வாகனத்தில் நம்பெருமாள்

நேற்று காலை 6.30 மணியளவில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு, உள்திருவீதி வலம் வந்து வழிநடை உபயங்கள் கண்டருளி காசுக்கடை செட்டியார் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார். மாலை 6 மணியளவில் காசுக்கடை செட்டியார் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து வெள்ளி கருட வானகத்தில் பூதேவி, ஸ்ரீதேவி, ஆண்டாள் ஆகிய நாச்சியார்களுடன் நம்பெருமாள் புறப்பட்டு உலா வந்து பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தினார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை சேவித்தனர். உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா மார்ச் 2-ம் தேதி நடைபெற இருக்கிறது.



from Latest News https://ift.tt/CprwuqP

Post a Comment

0 Comments