https://gumlet.vikatan.com/vikatan/2023-02/3b821572-7bc1-47f8-aa96-7fc5aae3ef4a/IMG_20230224_WA0005.jpgவிருதுநகர்; மருத்துவமனையில் பிரசவத்தின்போது தாய், குழந்தை உயிரிழப்பு - போலீஸார் தீவிர விசாரணை!

விருதுநகர் மாவட்டம், பாரதி நகரைச் சார்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 40). இவர் சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி முத்துமாரி (30). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த முத்துமாரி பிரசவத்திற்காக, விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை காலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மருத்துவமனையில், அவருக்கு இயற்கையாக 'பிரசவ வலி' வரவேண்டி தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாக தெரிகிறது. இருப்பினும் வலி ஏற்படாததால், நேற்று அதிகாலை முத்துமாரிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் அவருக்கு, இறந்த நிலையில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

இந்தத் தகவல் முத்துமாரியின் கணவர் பன்னீர்செல்வம், அவரின் உறவினர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டதும், இறந்த குழந்தையின் உடலை பெற்றுச்சென்ற உறவினர்கள் குழந்தைக்கு செய்யவேண்டிய இறுதிச்சடங்குகளை செய்துமுடித்திருக்கின்றனர்.

பேச்சுவார்த்தை

ஆனால் குழந்தை பிரசவித்த நேரத்திலிருந்து தாய் முத்துமாரியை பார்ப்பதற்கு அவரின் உறவினர்கள் யாரையும் மருத்துவமனை ஊழியர்கள் அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து உறவினர்கள் யாரையும் மருத்துவமனை ஊழியர்கள் அனுமதிக்காத நிலையில், அவரின் குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கியிருக்கின்றனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி முத்துமாரி இறந்துவிட்டார்‌ என மருத்துவர்கள் கூறியதாக கூறப்படுகிறது.

எனவே, ஒரே நாளில் தாய், சேய் என இரண்டுபேரையும் இழந்த துக்கம்தாங்காமல், ஆத்திரமடைந்த முத்துமாரியின் உறவினர்கள் மருத்துவமனையில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முத்துமாரியின் சாவுக்கு உண்மையான காரணம் தெரியும்வரை அவரின் உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி மருத்துவமனை முன்பாக விருதுநகர்-மல்லாங்கிணறு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

முத்துமாரி

இதனால் அப்பகுதி பரபரப்பானது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த விருதுநகர் சரக துணைக்காவல் கண்காணிப்பாளர் அர்ச்சனா, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடற்கூராய்வு அறிக்கையின்படி தவறு செய்தவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, விருதுநகர் கிழக்கு காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸார்‌ விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், விருதுநகர் மேற்கு காவல் நிலையத்துக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபுவை நேரில் சந்தித்த, முத்துமாரியின் உறவினர்கள் சந்தேக மரணம் தொடர்பான புகார் மனுவை வழங்கி முறையிட்டனர்.



from Latest News https://ift.tt/cjl83Nh

Post a Comment

0 Comments