ஹரியானா மாநிலம், குருகிராம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிகாந்த் லட்சுமணராவ் ஜராங். இவர் ‘Eco Global Private Limited’ என்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகிலிருக்கும் செதுக்கரை கிராமத்தைச் சேர்ந்த சீதாராம் என்பவர், ‘வர்த்தக ஏஜெண்ட்’ எனக்கூறி அறிமுகமாகி யிருக்கிறார். இதையடுத்து, அந்த வர்த்தக நிறுவனத்தில் ரூ.70 லட்சத்துக்கு வியாபாரம் முடித்து, அதற்குரிய பணத்தையும் செலுத்தியிருக்கிறார் சீதாராம். நம்பிக்கை ஏற்பட்டதையடுத்து, அந்நிறுவனம் ரூ.1.80 கோடி வியாபாரத்தை சீதாராமிடம் கொடுத்தது.

ஆனால், வியாபாரம் முடிந்தப் பின்னரும் அந்தத் தொகையை நிறுவனத்தில் செலுத்தாமல் காலம் தாழ்த்தியிருக்கிறார் சீதாராம். நிறுவனம் தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்படவே, சில லட்சங்களை மட்டும் செலுத்தியிருக்கிறார். சுமார் 1,46,08,000 ரூபாயை மோசடியாக கையாடல் செய்திருக்கிறார். கையாடல் செய்யப்பட்ட தொகையை செலுத்திவிட்டதாக வங்கி ரசீதுகள் மற்றும் பணப்பரிவர்த்தனை விபரங்களையும் போலியாக தயாரித்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
தணிக்கையின்போது, இந்த மோசடியை கண்டறிந்த சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர், இதுபற்றி வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் புகாரளித்தனர். எஸ்.பி ராஜேஸ்கண்ணன் உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சீதாராமை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், கையாடல் செய்த ரூ.1.46 கோடி பணத்தை ஆடம்பரமாக செலவழித்தது தெரியவந்தது.

சொகுசு கார், வேன் வாங்கியதுடன், மனை வாங்கி புது வீட்டையும் கட்டி முடித்திருக்கிறார். அதோடு, பெங்களூருவில் இருந்து பெண்களை வரவழைத்து பத்தாயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை பணத்தை அள்ளி இரைத்திருப்பதாகவும் விவரிக்கிறார்கள் போலீஸார். இதையடுத்து, சீதாராமை கைது செய்த போலீஸார், அவரின் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த சதீஷ்குமார், சரவணன் ஆகியோரையும் கைது செய்தனர். மேலும், சீதாராமின் மனைவி விஜிதா மற்றும் வசந்த்குமார், எஸ்.ஆர்.டிரேடர்ஸ் உரிமையாளர் சரண்ராஜ் என மேலும் மூன்று பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
from Latest News https://ift.tt/H97nWyr
0 Comments