https://gumlet.vikatan.com/vikatan/2023-02/669f267c-632d-42d6-a64b-c2beefc93ebb/IMG_20230228_021827.jpgசிவகாசி: அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்றதாக பெண் திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க ஆலோசனை!

சிவகாசி மாநகராட்சியில் கடந்த 2022 நவம்பர் 29-ந் தேதி கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சிவகாசி மாநகராட்சி 5-வது வார்டு தி.மு.க. பெண் கவுன்சிலர் இந்திராதேவி, ``மாநகராட்சி வருவாய்பிரிவு அதிகாரிகள் சொத்துவரி தீர்வை மாற்றத்திற்கு லஞ்சம்கேட்டு எனது வார்டை சேர்ந்த பொதுமக்கள் அளித்த முறையீட்டு மனுவை பல மாதங்களாக கிடப்பில் போட்டுள்ளனர். மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக பொதுமக்களிடம், அதிகாரிகள் கேட்ட லஞ்சப்பணத்தை மொத்தமாக நானே தந்துவிடுகிறேன்” எனக்கூறி தான் வைத்திருந்த பையிலிருந்து ரூ.1 லட்சத்து 10ஆயிரத்தை எடுத்து அதிகாரிகளை நோக்கி நீட்டினார்.

இந்திராதேவி

இந்தச்சம்பவம் குறித்து 43-வது வார்டை சேர்ந்த காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் ரவிசங்கர், நகராட்சிகள் நிர்வாக இயக்குனர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர், தலைமை செயலர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் உள்ளிட்ட 7 அரசு உயர் அமைப்புகளுக்கு புகார் மனு அளித்துள்ளார்.

அந்தப்புகாரில், "மாநகராட்சி கூட்டத்தில் 5வது வார்டு கவுன்சிலர் இந்திராதேவி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது, பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டபோது செய்த சத்தியப்பிரமாண உறுதிமொழி மற்றும் மாமன்ற மரபை மீறி செயல்பட்டதாகும். எனவே, கவுன்சிலர் இந்திராதேவி, மரபுகளை மீறி செயல்பட்டதால் அவரின் கவுன்சிலர் பதவியினை ரத்து செய்யவேண்டும்" என குறிப்பிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென நகராட்சி நிர்வாக இயக்குனரகம் உள்ளிட்ட அலுவலகங்களில் இருந்து சிவகாசி மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் வரப்பெற்றதாக மாநகராட்சி தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநகராட்சி

அதன்பேரில், கவுன்சிலர் இந்திராதேவி மீது நடவடிக்கை எடுப்பதற்கு சட்டரீதியான ஆலோசனை வழங்குமாறு உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் மற்றும் மாநகராட்சி அரசு வழக்கறிஞருக்கு ஆணையர் கிருஷ்ணமூர்த்தி கடிதம் எழுதியுள்ளார். சிவகாசி மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலரின் பதவியை ரத்து செய்யக்கோரிய புகார் மனு மீது நடவடிக்கை எடுப்பதற்கு சட்டரீதியான ஆலோசனைகளை வழங்கக்கோரி மாநகராட்சி ஆணையர், வழக்கறிஞர்களிடம் கேட்டுள்ளது கவுன்சிலர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



from Latest News https://ift.tt/1mrXyH9

Post a Comment

0 Comments