நெல்லை, தூத்துக்குடி, தனாசி மாவட்டங்களில் செயல்படும் கனிம குவாரிகளிலிருந்து பாறைகள், கல், ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச் செல்வதுடன், அனுமதி இல்லாமலும் கனிமக் கடத்தல் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.

இந்த நிலையில், கனிமக் கடத்தலைத் தடுக்கக் கோரி முன்னாள் எம்.எல்.ஏ-வான ரவி அருணன் தலைமையில் இயற்கை வள பாதுகாப்பு அமைப்பு சார்பாக நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், போக்குவரத்து இடையூறு ஏற்படும் என்றும், சமூக விரோதிகள் ஊடுருவி சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படக் கூடும் என்பதாலும் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.
போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், கனிமவளங்களை தமிழகத்திலிருந்து கேரளாவுக்குக் கடத்திச் செல்வதைத் தடுக்கக் கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு முன்னாள் எம்.எல்.ஏ-வான ரவி அருணன் மனு அனுப்பியிருக்கிறார். அதில், ”கோவை மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு நாள்தோறும் 300 லாரிகளில் கனிம வளம் கடத்தப்படுவதைத் தடுக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

அதற்குப் பதிலளித்த தமிழக அரசு, கேரளாவுக்குக் கடத்தப்படவில்லை எனத் தெரிவித்ததுடன், இருந்தாலும் கடத்தலைத் தடுக்கக் குழு அமைக்கப்படும் என நீதிமன்றத்தில் அறிவித்தது. ஆனால், உண்மையிலேயே எல்லைப் புறங்களின் வழியாக கேரளாவுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகளில் கனிமங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
சில மாதங்களுக்கு முன்புகூட நெல்லை மாவட்டத்தில் கனிமவள குவாரிகளை ஆய்வு செய்து 300 கோடி ரூபாய் அளவுக்கு அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் அரசுக்கு அறிக்கை அனுப்பினார். ஆனால் அந்த அறிக்கை தொடர்பாக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தென்காசி மாவட்ட குவாரிகளை ஆய்வு செய்யுமாறு நாங்கள் முன்வைத்த கோரிக்கைகூட ஏற்கப்படவில்லை. அதனால் அரசு குழு அமைப்போம் என்று நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது கனிமக் கடத்தலைத் தடுக்க உதவாது.

எல்லைப் பகுதிகளில் இருக்கும் சோதனைச் சாவடிகளில் வருவாய்த்துறை, கனிமவளத்துறை, காவல்துறை, போக்குவரத்துறை என பல்வேறு துறைகளின் அதிகாரிகள் இருந்தும் கனிமக் கடத்தல் தடுக்கப்படவில்லை. விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமான பாரங்களை ஏற்றியபடி கனரக வாகனங்கள் செல்கின்றன. ஆகவே, கனிமக் கடத்தல் நடக்காமல் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
from Latest News https://ift.tt/f7m9W1z
0 Comments