பாகிஸ்தானின் முதல் திருநங்கை செய்தி தொகுப்பாளர், 26 வயதான மர்வியா மாலிக். இவர் பாகிஸ்தானில் சக திருநங்கைகளின் உரிமைகளுக்காகத் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார். தங்கள் சமூகத்தின் முன்னேற்றத்திற்காகக் குரல் கொடுத்து வருகிறார். இதனால், அவருக்குத் தொடர்ந்து பல விதத்தில் கொலை மிரட்டல்கள் வந்து கொண்டே இருந்தன.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை தனது வீட்டுக்கு வெளியே அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுடப்பட்டார் மர்வியா. பாகிஸ்தானின் லாகூரில் உள்ள மருந்தகத்தில் இருந்து வீடு திரும்பிய போது அவர் மீது அந்த மர்ம நபர்கள் கொலைவெறியில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கடும் காயமடைந்த அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். தன் சமூக மக்களுக்காக தான் போராடுவதே, இந்த கொலை முயற்சிக்கு முக்கியக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ஃபேஷன் டிசைன் கவுன்சில் ஆண்டுதோறும் நடத்தும் முக்கிய ஃபேஷன் ஷோவில், முதல் திருநங்கை மாடலாக தேர்வானார் மர்வியா. அடுத்து சில நாள்களில் பாகிஸ்தானின் கோஹனூர் டிவியில் மர்வியா மாலிக் அறிமுகமானார்.
மர்வியா மாலிக் 21 வயதில் நாட்டின் முதல் திருநங்கை தொலைக்காட்சி தொகுப்பாளராக ஆனார். அதன் பிறகு 2018 -ல் தலைப்புச் செய்திகளை வாசிக்க ஆரம்பித்தார். இதற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது.

10 -ம் வகுப்புக்குப் பிறகு படிப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட மர்வியா, ஓர் அழகு நிலையத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அதில் கிடைத்த வருமானம் மூலம் கல்லூரி வரை படித்தார். அதற்காக அவர் பட்ட கஷ்டங்கள் அதிகம். பல நேர்காணல்களில், அவர் தனது சொந்த சமூகம் உட்பட அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குவேன் என்று கூறிவந்தார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு இவர் கேட்வாக் மாடலிங் செய்தபோது ஃபேஷன் துறையுடன் தொடர்புடையவர்களிடம் இருந்து இவருக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன.
சமீபத்தில் தான் இவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டு, லாகூர் திரும்பியுள்ளார். இந்த நிலையில் இவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
from Latest News https://ift.tt/xJYObaZ
0 Comments