https://ift.tt/LkRyefD "லோகேஷ் கனகராஜ் ஒரு பெரும் வீரன்; விஜய் பண்பானவர், அன்பானவர்!" - மிஷ்கின் நெகிழ்ச்சி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் 'லியோ'. மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன், த்ரிஷா, சஞ்சய் துத், அர்ஜுன் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இதன் முதல் புரொமோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதையடுத்து கடந்த மாதம் காஷ்மீரில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கி ஒருமாத காலமாக நடைபெற்று வருகிறது. விரைவில் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துவிட்டுப் படக்குழுவினர் திரும்பவுள்ளனர். இதற்கிடையில் நேற்று இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனின் பிறந்த நாளை காஷ்மீரிலேயே கேக் வெட்டி கொண்டாடியது படக்குழு. இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள இயக்குநர் மிஷ்கின் தனது ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துப் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

மிஷ்கின் ட்விட்டர் பதிவு

"இன்று காஷ்மீரிலிருந்து சென்னை திரும்புகிறேன். மைனஸ் 12 டிகிரியில் 500 பேர் கொண்ட 'Leo' படக்குழு கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தது. ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பறிவு மிகச்சிறப்பாக ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கினார்கள். துணை இயக்குநர்களின் ஓயாத உழைப்பும் என்மேல் அவர்கள் செலுத்திய அன்பும் என்னை ஆச்சரியப்பட வைத்தது. படத்தின் தயாரிப்பாளர் லலித் அந்த குளிரிலும் ஒரு சக தொழிலாளியாக உழைத்துக்கொண்டிருந்தார். என் லோகேஷ் கனகராஜ், ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குநராக அன்பாகவும் கண்டிப்பாகவும், ஒத்த சிந்தனையுடனும் ஒரு பெரும் வீரனைப்போல் களத்தில் இயங்கிக்கொண்டிருந்தான். என் கடைசி காட்சி முடிந்தவுடன் என்னை ஆரத்தழுவினான், அவன் நெற்றியில் நான் முத்தமிட்டேன்.

என் அருமை தம்பி விஜய்யுடன் ஒரு நடிகனாக இந்தப் படத்தில் பணியாற்றியதை நினைத்து சந்தோஷம் அடைகிறேன். அவர் என்னுடன் பண்பாக நடந்துகொண்ட விதத்தையும் அவர் அன்பையும் நான் என்றும் மறவேன். 'Leo' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும்" என்று கூறியுள்ளார்.



from Latest News https://ift.tt/3VAlF1g

Post a Comment

0 Comments