https://gumlet.vikatan.com/vikatan/2023-05/c1db19ba-b013-41c6-b068-e045997cd0b5/WhatsApp_Image_2023_05_29_at_4_48_52_PM.jpegகால்நடை பண்ணை அமைக்க போறீங்களா? வழிகாட்டும் கள்ளக்குறிச்சி வேளாண் அறிவியல் மையம்!

தமிழ்நாட்டில் 38 மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போதிருந்தே இந்த மாவட்டத்திற்கு தனி ஆட்சியர் அலுவலகம், காவல் தலைமை அலுவலகம் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பம், பயிர் சாகுபடி ஆலோசனைகள் வழங்க வேளாண் அறிவியல் நிலையமும் (Krishi Vigyan Kendra-KVK) தொடங்கப்பட்டது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கக்கூடிய கள்ளக்குறிச்சி வேளாண் அறிவியல் நிலையம், சின்னசேலம் தாலுக்கா காளசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ளது.

சிறுதானிய பொருள்கள் குறித்த விளக்கம்

வேளாண் அறிவியல் நிலையத்துக்காக வி.கூட்டு ரோடு பகுதியில் 50 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட உள்ளது. இங்கு புதிதாக அலுவலக கட்டடங்கள், மாதிரி திடல்கள் அமைக்கப்பட உள்ளன. தற்காலிகமாக காளசமுத்திர ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் இயங்கி வருகிறது. இந்த வேளாண் அறிவியல் நிலையத்துக்கு புதிதாக முனைவர் விமலாராணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரோடு உழவியல் துறைக்கு முனைவர் முருகனும், கால்நடை அறிவியலுக்கு முனைவர் முரளியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் முனைவர் விமலாராணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு பேசினோம். அவர் கூறுகையில், ``விவசாயிகள், கிராமபுற இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு செயல்முறை கல்வி சார்ந்த பயிற்சிகளை அளித்து, உற்பத்தியை பெருக்குதல் மற்றும் சுயவேலைவாய்ப்பை உருவாக்குதல் மாவட்டத்தின் விவசாயம் மற்றும் சார்பு துறைகளின் அறிவு சார் மையமாக விளங்குதல், உயர்தர விதைகள் மற்றும் இடுபொருட்கள் உற்பத்தி செய்து விநியோகம் செய்தல் உள்ளிட்ட பணிகளை இந்த வேளாண் அறிவியல் நிலையம் செய்து வருகிறது.

தொழில்நுட்பம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம், தோட்டக்கலை, கால்நடை மற்றும் மீன்வளத் துறை சார்ந்த தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்குக் சொல்லிக் கொடுப்போம். புதிய தொழில்நுட்பங்களை செயல்விளக்கங்கள் மூலம் சொல்லிக் கொடுப்போம். விவசாயத்துக்கு தேவையான இடுபொருட்களை உற்பத்திச் செய்தல், அவற்றை விற்பனை செய்வதும் இங்கு நடைபெற்று வருகிறது. பயிர்களில் பூச்சி மற்றும் நோய் தாக்கப்பட்ட பயிர்களை கொண்டு வந்தால் அவற்றை பரிசோதனை செய்து ஆலோசனை வழங்குவோம்.

கள்ளக்குறிச்சி வேளாண் அறிவியல் நிலையம்

விவசாய வருமானத்தில் கால்நடைகளின் பங்கு இன்றியமையாதது. புதிய கால்நடை பண்ணை தொடங்குவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்படும். பண்ணை பார்வையிடல் மற்றும் ஆலோசனையும் நடைபெறும். இந்த நிலையத்துக்குச் சொந்தமான பண்ணையில் பயிர்கள், பண்ணை மாதிரிகள் மற்றும் தொழில்நுட்ப மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதைப் பார்வையிடுவதற்கும் உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

உழவியல், கால்நடை விரிவாக்கம், தோட்டக்கலை, மண்ணியல், உணவியல், பயிர் பாதுகாப்பு மற்றும் கால்நடை அறிவியல் போன்ற துறை சார்ந்த தொழில் நுட்ப வல்லுநர்கள் தங்கள் துறைகள் சார்ந்த பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி வருகிறார்கள். இந்த நிலையத்தில் மாதந்தோறும் கட்டணமில்லா பயிற்சிகளும் கட்டண பயிற்சிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும், விவசாயிகளின் தேவைகளுக்கு ஏற்ப வயல்வெளியிலும் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.

தற்போது பயிர் மற்றும் தீவனப்புல் விதைகள், விதைக்கரனைகள், காய்கறி விதைகள் மற்றும் நாற்றுகள், உயிர் இடுபொருள்கள், இனக்கவர்ச்சி பொறிகள், கோழிக் குஞ்சுகள், அசோலா மற்றும் மண்புழு உரம், உயிர் உரங்கள், கால்நடை இடுப்பொருட்கள், கால்நடை வளர்ப்பு சம்பந்தமான புத்தகங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

விமலாராணி | பேராசிரியர் மற்றும் தலைவர், கள்ளக்குறிச்சி வேளாண்மை அறிவியல் நிலையம்.

தேவைப்படும் விவசாயிகள் நிலையத்தை அணுகலாம். அசோலா வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு, வீட்டுத்தோட்டம், மூலிகைகள், தென்னை நாற்றங்கால், மரவள்ளி ஒட்டுண்ணி, தேனீ வளர்ப்பு, குழித்தட்டு நாற்றங்கால், பண்ணைக் கழிவுகளை உரமாக்கும் அமைப்பு, பண்ணைக்குட்டையில் மீன் வளர்ப்பு என்று பலவற்றுக்கும் மாதிரி திடல்களை அமைத்திருக்கிறோம். இவற்றைப் பார்வையிட்டு கற்றுக் கொள்ளலாம்.

இந்த கேவிகே, சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வீ. கூட்டு ரோட்டில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் விருதாச்சலம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் இந்நிலையத்தைப் பயன்படுத்தி நல்ல மகசூல் எடுக்கவும், விவசாயத்தில் லாபம் எடுக்கவும் இந்த வேளாண் அறிவியல் நிலையத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று அழைப்புவிடுத்தார்.

தொடர்புக்கு,

வேளாண் அறிவியல் நிலையம்,

காளசமுத்திரம், சின்ன சேலம் தாலுக்கா,

கள்ளக்குறிச்சி மாவட்டம்.

தொடர்பு எண் - 99942 83960.



from Latest news https://ift.tt/3MX85G0

Post a Comment

0 Comments