சாத்தூர் அருகே திருமணம் மீறிய உறவால் பெண்ணை, கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸாரிடம் பேசுகையில், "விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரின் மனைவி மகேஸ்வரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது, வயது40). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இந்தநிலையில் மகேஸ்வரிக்கும், சங்கரநத்தம் பகுதியை சேர்ந்த பரமசிவம்(50) என்பவருக்கும் இடையே திருமணம் மீறிய உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த முத்துப்பாண்டி, மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும், திருமணம் மீறிய தொடர்பு நீடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் பெரிதாகவும், கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மகேஸ்வரியும், முத்துப்பாண்டியும் பிரிந்து வாழ்வதென முடிவெடுத்து சிலகாலம் இருவரும் தனித்தனியே வாழ்ந்து வந்துள்ளனர். இந்தநிலையில் எதிர்கால நலன்கருதி கணவன், மனைவி இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்வதென முடிவெடுத்துள்ளனர். இதற்காக சமாதான பேச்சுவார்த்தை நடத்திய உறவினர்கள் இருவரையும் சமாதானம் செய்து சேர்த்து வைத்துள்ளனர். கணவருடன் சமாதானம் ஏற்பட்டதை தொடர்ந்து, தான் வசித்து வந்த வாடகை வீட்டை காலி செய்வதற்காக சென்றுள்ளார் மகேஸ்வரி. ஆனால் அதன்பின் அவர், கணவரின் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் மகேஸ்வரி வசித்து வந்த வாடகை வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்த தகவல் ஏழாயிரம்பண்ணை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கபபட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மகேஸ்வரி உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்துகையில், மகேஸ்வரியுடன் திருமணம் மீறிய உறவில் இருந்த பரமசிவத்திற்கும், அவருக்கும் இடையே சமீபத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும் மகேஸ்வரி, கணவருடன் சமாதானமாகி செல்வதை அறிந்து, மகேஸ்வரி வசித்துவந்த வாடகைவீட்டுக்கு வந்த பரமசிவம், அவருடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், மகேஸ்வரியை கழுத்து அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று தலைமறைவாகியது தெரியவந்தது. இதுதொடர்பாக கணவர் முத்துப்பாண்டியிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை நடந்த இடத்தை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசபெருமாள் நேரில் ஆய்வு செய்தார். மேலும் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. கொலை சம்பவம் தொடர்பான புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான பரமசிவத்தை தேடிவருகின்றனர்" என்றனர்.
from Latest news https://ift.tt/1Nr2fl6
0 Comments