வருமான வரியில் ஆரம்பித்து, சொத்து வரி, சுங்க வரி, ஜி.எஸ்.டி வரி என எதுவாக இருந்தாலும் `வரி கட்டுங்கள்' என்றால், `வரிக்கு மேல வரியைப் போட்டு சாவடிக்கிறாங்கப்பா... எத்தனை வரியைத்தான் கட்டுறது' என மக்களுக்கு கோபம்தான் வருகிறது. வரி செலுத்துவதில் இருந்து விலகித்தான் போகிறார்களே தவிர, அவர்களாக முன்வந்து எந்த வரியையும் செலுத்துவதே இல்லை. அரசுக்கு வரி செலுத்துவதில் மக்களுக்கு இருக்கும் பிரச்னைகள் என்ன, அவர்களின் மனநிலை என்ன என்கிற பல கேள்விகளுடன் ஆடிட்டர் எஸ்.சதீஷ்குமாரை சந்தித்து பேசினோம்.
வரி செலுத்துவோரின் மனநிலை!

``பத்திரிகையாளர், ஆடிட்டர், அரசியல்வாதி என்கிற கோணத்தில் யோசிப்பதை விட்டுவிட்டு, இந்த விஷயத்தை ஒரு சராசரி நபராக அணுக வேண்டும். நான் ஒரு தொழிலாளி. நாள் முழுக்க வேலை செய்து சம்பாதிக்கிறேன், நாள் முழுக்க படித்து, ஒரு நல்ல வேலையில் அமர்ந்து தினமும் உழைத்து சம்பாதிக்கிறேன். சம்பாதிப்பது என்னவோ நான், ஆனால் அதில் வரி என்ற பெயரில் அரசாங்கம் குறிப்பிட்ட தொகையை கேட்கிறதே. இது எந்த விதத்தில் நியாயம்" என்கிற கேள்வி இயல்பாக எழும். வரி என்கிற வார்த்தையைக் கேட்டாலே `ஏன் வரி, எதற்கு வரி...' என்கிற வீரபாண்டிய கட்டபொம்மனின் வசனம்தான் மக்களுக்கு ஞாபகத்துக்கு வரும்.
அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. பிசினஸ் செய்து கோடி கோடியாக அரசுக்கு வரி செலுத்திய ஒரு நபர், பிசினஸில் ஏற்பட்ட நஷ்டத்தால் நிதி நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார். இந்த நிலையில், அவருடைய மருத்துவச் செலவுக்குப் பணம் தேவைப்படுகிறது. ஆனால், பணம் இல்லை என்கிற காரணத்தால், அரசு மருத்துவமனைக்குப் போகிறார் என்று வைத்துக்கொள்வோம். அங்கு அவருக்குச் சரியான மருத்துவ சிகிச்சை கிடைக்கிறதா எனில், இல்லை என்பதே பதில். அதே போல, இன்றைய அரசுப் பள்ளிகளின் நிலையும் இருக்கிறது.
அரசு வழங்கக்கூடிய மிக முக்கியமான நலத்திட்டங்கள் இவை இரண்டும். இந்த இரண்டு சேவைகளை வழங்குவதில் அரசு மிகவும் பின்தங்கியிருக்கிறது. அரசு தரும் மருத்துவ வசதிகளைப் பொறுத்தவரை, இந்தியா மற்ற நாடுகளைவிட பின்தங்கிதான் இருக்கிறது. ஆனால், மற்ற நாடுகளிலும் இந்தியாவிலும் ஒரே மாதிரியான வரிமுறை. இது என்ன நியாயம்? சிறப்பான சேவைகளைக் கொடுத்துவிட்டு, வரி செலுத்துங்கள் என்று கேட்டால் மக்கள் கட்டாமல் இருப்பார்களா? நிச்சயம் கட்டவே செய்வார்கள்.

அவ்வளவு ஏன், இங்கிருக்கும் அமைச்சர்கள் எத்தனை பேர் அரசு மருத்துவமனைக்குப் போகிறார்கள். அதே போல, அரசுப் பணியில் இருக்கும் எத்தனை பேருடைய பிள்ளைகள் இங்கு அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள்? எல்லோரும் அரசு மருத்துவமனைக்குதான் போக வேண்டும், அரசுப் பணிகளில் இருப்பவர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்ற நிலைமை வந்தால்தான் இங்கு எல்லாம் மாறும்.
அரசு நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்...
அரசு வரி வசூலிக்கலாம்; அதில் எந்தத் தவறும் இல்லை. அந்த வரிப்பணத்தைக் கொண்டும் மக்களுக்கு சேவைகளும் செய்ய வேண்டும். இவ்வளவு சம்பளம் எனில், அதில் இவ்வளவு வரி கட்ட வேண்டும் என்று மக்களிடமிருந்து எதிர்பார்ப்பது போல, மக்களுக்கு எவ்வளவு செலவு செய்கிறோம் என்கிற வெளிப்படைத் தன்மையோடு அரசும் நடந்துகொள்ள வேண்டும். அப்படி செய்யாவிட்டால், வரியை மட்டும் வாங்கிக்கொள்ளும் அரசு, மக்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தருவதில்லை என்கிற கேள்வி பாமரனனின் மனதில் எழுவது இயல்புதானே?

வரி செலுத்தாமல் தவிர்ப்பதற்கான மக்களின் மனநிலையை மற்றும் ஓர் உதாரணத்தின் மூலமாகவும் புரிந்துகொள்ளலாம். சாலை வசதிகள் சரியாக இருப்பதில்லை. குண்டும் குழியுமாக தான் இந்தியாவின் பல சாலைகளைப் பார்க்கிறோம். அந்தச் சாலைகளில் பயணிக்கும் வண்டியால் ஒரு விபத்து நடக்கிறது எனில், அந்த விபத்துக்குக் காரணம் அந்தச் சாலையும்தான்.
ஆனால், `ஹெல்மெட் போடல, சீட்பெல்ட் போடல அதனால்தான் விபத்து நடந்துச்சு' என்று மக்களின் கவனக்குறைவை மட்டுமே அரசாங்கம் சுட்டிக்காட்டி, அதற்கு அபராதம் விதித்து அதன் மூலமும் ஒரு குறிப்பிட்ட தொகையை வருமானமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
வருமான வரியை உரிய நேரத்தில் செலுத்தாமல் போனாலும் அதற்கு அபராதம், அபராதத்துக்கு மேல் அபராதம் என அரசு நடந்துகொள்வது நியாயமில்லை.
வரி செலுத்துபவர்கள் ஒரு நாட்டின் தூண்கள். அவர்களை பயமுறுத்தி, அவர்களிடம் இருந்து அடித்துப் பிடித்து அரசு வருமானத்தைச் சேர்ப்பது முறையல்ல.
எத்தனை வரிதான் கட்டுவது?
அது மட்டுமல்லாமல், நாம் ஒரு வரி மட்டும் கட்டுவதில்லை, நிறைய வரிகளை அன்றாட வாழ்க்கையில் கட்டிக்கொண்டே இருக்கிறோம். நாம் வாங்குகிற சட்டை, செருப்பு, சாப்பிடும் உணவு என்று எல்லாவற்றுக்கும் வரி செலுத்துகிறோம். இங்கே ஒரு நாடு ஒரே வரி என்கிற முறையே இல்லை. ஜி.எஸ்.டி வரி, வருமான வரி, கலால் வரி, சொத்து வரி, தண்ணீர் வரி என நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

மத்திய அரசுதான் இப்படி நடந்துகொள்கிறது, மாநில அரசாவது மக்களின் நலனைக் காக்கிறதா என்றால் அவர்களும் அவர்களுடைய வருமானத்தை உயர்த்திக் கொள்கிற வேலையைத்தான் செய்கிறார்கள்.
ஒரு சம்பளதாரரின் வருமானத்தில் இருந்து வரிக்கு மட்டுமே குறைந்தபட்சம் 25 சதவிகிதத்தில் இருந்து அதிகபட்சம் 50% வரை செலுத்திவிட்டால் மீதமிருக்கும் பணத்தில்தான், அந்த நபர் அவருடைய வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வது எப்படி சாத்தியம்?
ஆக, அரசு முதன்மையாகச் செய்ய வேண்டியது மக்களின் வரிச்சுமையைக் குறைப்பது மட்டுமே" என்றார் ஆடிட்டர் சதீஷ்குமார்.
அவர் கேட்கும் கேள்விகள் நியாயமானவைதானே!
from Latest news https://ift.tt/4jGJHZD
0 Comments