https://ift.tt/rDSZ8ao Vikatan: மைதாவில் தயாரிக்கப்படும் பிரெட்டை நோயாளிகளுக்குப் பரிந்துரைப்பது ஏன்?

Doctor Vikatan: மைதாவில் செய்யப்படுவதால் பிரெட் ஆரோக்கியமற்ற உணவு என்று சொல்கிறார்கள். அதே நேரம் உடல்நலம் சரியில்லாதவர்களுக்கு அதைப் பரிந்துரைப்பது ஏன்? இதை எப்படிப் புரிந்துகொள்வது? குழந்தைகளுக்கு சாண்ட்விச், பிரெட் ஜாம் கொடுப்பது சரியானதா?

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

மைதா என்பது சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து. அது ரசாயனங்கள் சேர்த்து ப்ளீச் செய்யப்படுகிறது. எனவே மைதா ஆரோக்கியமற்றது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

உடல்நலம் சரியில்லாதவர்களுக்கு பிரெட் எளிதில் செரிமானமாகும் என்பதால்தான் அதைக் கொடுக்கச் சொல்வார்கள். இப்போது பெரும்பாலும் பிரெட் பரிந்துரைக்கப்படுவதில்லை. அதற்கு பதில் இட்லி அல்லது இடியாப்பம் கொடுக்கச் சொல்கிறார்கள். ஆவியில் வேகவைத்த அவை எளிதில் செரிமானமாகும்.

நம்மில் பலரும் காய்கறிகள், பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்வதில்லை. இவற்றில்தான் நார்ச்சத்தும், வைட்டமின்கள், தாதுச்சத்துகளும் அதிகம் இருக்கும். இப்போது துரித உணவுகள் சாப்பிடும் பழக்கம் பலரிடமும் அதிகரித்திருக்கிறது. அந்த உணவுகளில் பெரும்பாலும் மைதா உணவுகள் இடம் பெறுகின்றன. சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்தை அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் குழந்தைகளுக்குக் கூட மலச்சிக்கல் பிரச்னை சகஜமாகி விட்டது.

சமீபத்திய விளம்பரங்களில் மலச்சிக்கலுக்கான மருந்துகள் அதிகம் இடம்பெறுவதுகூட இதன் பிரதிபலிப்புதான். நார்ச்சத்து குறைவாகவும் மாவுச்சத்து, கொழுப்பு, சர்க்கரை, உப்பு போன்றவற்றை அதிகமாகவும் எடுத்துக்கொள்வதுதான் இந்தப் பிரச்னையைத் தீவிரப்படுத்தும்.

ஜாம் என்பதும் ஆரோக்கிய உணவல்ல. அதில் அளவுக்கு அதிகமான சர்க்கரை, கெமிக்கல்கள், நிறமிகள், சுவையூட்டிகள் சேர்க்கப்படுவதால் தொடர்ந்து அதைச் சாப்பிடும்போது குழந்தைகளுக்கு குடல் தொடர்பான பிரச்னைகள் வரலாம். செரிமானம் பாதிக்கப்படும். பிரெட், பட்டர், ஜாம், சீஸ், கெட்ச்சப் போன்றவற்றைக் கூடியவரை தவிர்ப்பதே ஆரோக்கியமானது.

ஐஸ்க்ரீம் கேக் சாண்ட்விச்

அந்த வகையில் குழந்தைகளுக்கு பிரெட், ஜாம் அல்லது சாண்ட்விச் கொடுப்பது சரியானதல்ல. என்னதான் சிறுதானிய பிரெட் என்று சொன்னாலும் அதில் நார்ச்சத்து இருக்காது. எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி பிரெட், பிஸ்கட் கொடுப்பதைத் தவிர்ப்பதே நல்லது. எப்போதாவது கொடுக்கலாம். குறிப்பாக மலச்சிக்கல் பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு இவற்றைத் தவிர்ப்பதுதான் சிறந்தது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest news https://ift.tt/ByhHA0o

Post a Comment

0 Comments