``நன்றி மீண்டும் வராதீர்கள்” எனக் கூறி பா.ஜ.க-வைத் தன் கூட்டணியிலிருந்து வெளியேற்றிவிட்டது அ.தி.மு.க. இந்த நிலையில் ஏற்கெனவே அ.தி.மு.க கூட்டணியிலிருக்கும் கட்சிகள் என்ன செய்யப்போகின்றன என்பது ஒரு பக்கம் பரபரப்பைக் கிளப்பினாலும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என்ன செய்யப்போகிறார் என்பதும் தமிழக அரசியலில் ஹாட் டாப்பிக்காக ஓடிக்கொண்டிருந்தது.
பன்னீரின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடுவெடுக்க, சென்னை ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள தனியார் விடுதியில் ஆலோசனைக் கூட்டம் நடந்திருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், புகழேந்தி, மருது அழகுராஜ், வெல்லமண்டி நடராஜன், சுப்புரத்தினம் உள்ளிட்டோர் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் நடந்தவை குறித்து விசாரித்தோம்.
நம்மிடம் பேசிய விவரமறிந்த சிலர், ``அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி முறிவென்பது ஏதோ ஒரு வழியில் பன்னீரின் அடுத்தகட்ட அரசியலுக்கு வழிவகுத்திருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆலோசனைக் கூட்டங்களுக்கும் நம்மை அழைக்கவில்லை, நாடாளுமன்றத் தேர்தலில் நாம் என்ன செய்வது எனக் கையைப் பிசைந்துகொண்டிருந்த பன்னீர் ஆதரவாளர்களுக்கு அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி முறிவு என்ற செய்தி சற்று ஆறுதலைத் தந்திருக்கிறது.
அதைக் கச்சிதமாகப் பயன்படுத்தி, நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்திட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது பன்னீர் அண்ட் கோ” என்றனர்
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பன்னீரின் ஆதரவாளர்கள் சிலர், ``நாங்கள் பா.ஜ.க-வுடன் இணைந்து செயல்படத் தயாராக இருக்கிறோம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அதற்கு செயல்ச்வடிவம் கொடுப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. அ.தி.மு.க கூட்டணியே முறிந்துவிட்டாலும், பா.ஜ.க இதுவரை வாய் திறக்கவில்லை. இந்தச் சமயத்தில் `பா.ஜ.க-வுடன் நாங்கள் நிற்கிறோம்’ என நாம் எப்படிச் சொல்வது?
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்துக்குக்கூட எங்களை பா.ஜ.க அழைக்கவில்லை. ஆகவே, கூட்டணி முறிந்தவிட்டதென நாங்களே சென்று பா.ஜ.க-வுக்கு துணை நிற்கிறோம் என அறிவிப்பது மரியாதையாக இருக்காது. அவர்கள்தான் எங்களை அழைக்க வேண்டும். ஆலோசனைக் கூட்டத்தில் `பா.ஜ.க-வுடன் இணைந்து செயல்படுவோம். ஆனால் கொஞ்ச நாள்கள் போகட்டும். பார்த்துக்கொள்வோம்’ என்றே முடிவெடுக்கப்பட்டது. பா.ஜ.க தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்திவிட்டால், நாங்களும் எங்கள் முடிவை அறிவித்துவிடுவோம்.
எங்கள் பார்வையில் கூட்டணியின் முறிவுக்குக் காரணம் அண்ணாமலையோ, அவரது கருத்துகளோ இல்லை. செப்டம்பர் 15-ம் தேதி டெல்லியில் அமித் ஷா - எடப்பாடி சந்திப்பின்போது அதிமுக கூட்டணிக்குள் பன்னீர், டிடிவி-யைக் கொண்டுவர வேண்டும் என அமித் ஷா தெரிவித்த கருத்துகள்தான். தற்போது அதற்கு வாய்ப்பில்லாத சூழல் ஏற்பட்டுவிட்ட நிலையில், அநேகமாக பா.ஜ.க - பன்னீர் - டிடிவி உள்ளிட்ட மேலும் சில கட்சிகள் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வோம் என்றே கருதுகிறோம்” என்றார்கள் வெளிப்படையாக.
நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள் சிலர் ``பன்னீர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின் மூலம் `உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் தயார்’ என பா.ஜ.க-வுக்கு விடுக்கப்பட்ட தூதாகத்தான் இதைப் பார்க்க வேண்டும். இனி முடிவெடுக்கவேண்டியது பா.ஜ.க-தான். அ.தி.மு.க-வுடன் முறிந்த உறவை மீண்டும் இணைக்கும் வேலைகளைச் செய்ய பா.ஜ.க முற்படும். அதிலும் தோல்வியடையும் பட்சத்தில் பா.ஜ.க-வின் சாய்ஸ் பன்னீராகத்தான் இருக்கும்.
ஆனால், பன்னீர் வசமுள்ள பிரச்னையே..அவர் வசம் தற்போது கட்சியே இல்லை. புதிய கட்சி தொடங்கினாலும், வேறு கட்சியில் இணைந்தாலும் அ.தி.மு.க-வை உரிமை கோரும் தகுதியை இழந்துவிடுவார். எப்படிச் சமாளிக்கப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்கிறார்கள்.
பன்னீர் பா.ஜ.க-வோடு கைகோக்கத் தயாராக இருப்பதைப் போட்டுடைத்துவிட்டார். இனி எல்லாம் பா.ஜ.க-வின் கையில்தான். என்ன செய்யப்போகிறது பா.ஜ.க?!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from Latest news https://ift.tt/fF2lBtL
0 Comments