`மேடை நாடகங்கள், சினிமா, சீரியல் என கலைத்துறையில் தங்களுக்கென ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்டவர்கள் தான் ராஜசேகர் - திலகம். கணவன் - மனைவியாக அத்தனை காதலுடன் முதுமையை கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சமீபத்தில், இவர்களுடைய சதாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அந்த நிகழ்வில் பல சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு அவர்களுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுச் சென்றனர். அவர்களுடன் பேசினோம்.
"நான் எதார்த்தமாகத்தான் சினிமாவுக்குள்ள வந்தேன். 1962-ல் எலக்ட்ரிசிட்டி போர்டுல எனக்கு வேலை கிடைச்சது. அந்த வேலைக்காகத்தான் சென்னைக்கு வந்தேன். என் கூட ஒர்க் பண்ணின ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் `நீ அழகா தானே இருக்க.. நடிக்கலாமே'னு சொன்னாங்க. அவங்க சொல்லி, சொல்லி தான் நடிக்கணும்னு ஆர்வமே வந்துச்சு. எஸ் ஏ அசோகன் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட். அவருடைய டிராமா ட்ரூப்ல தான் முதன்முதலில் சேர்ந்தேன். அதுக்குப் பிறகு சேஷாத்ரி டிராமா ட்ரூப்ல இருந்தேன். நான் நடிச்ச பெரும்பாலான டிராமாக்கள் படமாச்சு. டிராமாவில் பல விருதுகள் வாங்கினேன். அப்புறமா ஸ்டேஜ் பிளேயில் இருந்து சினிமாவுக்கு வந்தேன். வேலை பார்த்துட்டே நடிச்சிட்டும் இருந்ததால கன்டின்யூவாக படங்கள் பண்ண முடியல. 80 படங்கள், 300க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடிச்சிருக்கேன். நடிப்புல திலகம் என்னை விட சீனியர்!" எனத் தன் காதல் மனைவியை நம்மிடம் அறிமுகப்படுத்தினார்.
" என்னுடைய 15, 16 வயசிலேயே குடும்ப சூழ்நிலை காரணமா நடிக்க வந்துட்டேன். டிராமாவில் நடிச்சிட்டே படங்களில் டான்ஸ் பண்ணிட்டு இருந்தேன். அப்புறம் கொஞ்ச, கொஞ்சமா கேரக்டர் ரோலுக்கான வாய்ப்புகள் வந்தது. ரெண்டு, மூணு படங்களில் ஹீரோயினாக நடிச்சேன். ஆனா, அந்தப் படங்கள் எல்லாம் பெருசா போகல. அதனால, நமக்கு தொழில் வேணும்னு என் 20 வயசிலேயே அம்மா கேரக்டர் பண்ண வந்துட்டேன். எம்ஜிஆர், சிவாஜினு எல்லா நடிகர்கள் கூடவும் நடிச்சிட்டேன். நம்மள விட வயசில பெரியவங்களுக்கு அம்மாவாக நடிக்கிறோமேன்னுலாம் நான் எப்பவும் யோசிச்சது இல்ல.. அது ஒரு தொழில் அவ்வளவுதான்!" என்றதும் ராஜசேகர் தொடர்ந்து பேசினார்.
எனக்கு எம்ஜிஆர் அறிமுகமானதே பெரிய கதை. என் ஃப்ரெண்ட் அசோகன் மூலமா எம்ஜிஆரை சந்திக்கப் போயிருந்தேன். அவர் என் பெயர் என்னன்னு கேட்கவும், சேகர்னு சொன்னேன். என்னது, ராஜசேகரா?னு கேட்டார். அந்தப் பெயர் தான் இன்னைக்கு வரைக்கும் தொடருது. அவர் என் கூட ரொம்ப க்ளோஸ் ஆக பழகினார்!" என்றவரிடம் அவருடைய காதல் கதை குறித்துக் கேட்டோம்.
"எங்களுடையது காதல் திருமணம். அசோகன் ட்ரூப்ல தான் நாங்க சந்திச்சோம். ரெண்டு பேருக்கும் ஒருத்தரையொருத்தர் பிடிச்சிருந்தது. அவ தான் விரும்புறேன்னு சொன்னா நானும் ஓகே சொல்லிட்டேன். என்னோட குடும்ப ரொம்ப பெருசு. ஆனா, அவளுக்குன்னு சில கமிட்மென்ட்ஸ் இருந்தது. அவளுடைய அம்மா, சித்தி எல்லாரையும் அவ தான் பார்த்துட்டு இருந்தா. அதனால, எங்களுக்கு தாமதமாகத்தான் திருமணம் ஆச்சு. 20 வருஷம் காதலர்களாகத்தான் இருந்தோம். எனக்கு 45, இவளுக்கு 43 அப்ப தான் நாங்க திருமணம் பண்ணிக்கிட்டோம்!" என்றதும் திலகம் தொடர்ந்தார்.
" எங்களுக்குள்ள நல்லதொரு புரிதல் இருந்தது. அதுதான் இப்ப எங்களுடைய 80-வது கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்திருக்கு. எங்களுக்கு குழந்தைகள் கிடையாது. அதுக்காக நாங்க வருத்தப்பட்டதும் இல்ல. எனக்கு நீ குழந்தை ; உனக்கு நான் குழந்தைன்னு தான் இப்பவும் ஒருத்தரையொருத்தர் பார்த்துக்கிறோம். எங்க போனாலும் அவ்வளவு அக்கறையா என்னை கவனிச்சிப்பாரு. நடந்தா கூட பார்த்து பார்த்துன்னு சொல்லுவார். இன்டஸ்ட்ரியில் எல்லாரும் எங்களை அப்பா, அம்மான்னு தான் கூப்பிடுவாங்க. எங்களுக்கு நிறைய பொண்ணுங்க, பசங்க இருக்காங்க.. நடிப்புக்கு ஓய்வே கிடையாது. இப்பவும் நல்ல கதாபாத்திரம் கிடைச்சா ரெண்டு பேருமே நடிக்கத் தயார்!" என ஒருசேர தலையசைத்து புன்னகைக்க அவர்களிடம் இருந்து விடைபெற்றோம்.
from Latest news https://ift.tt/BygRv1J
0 Comments