வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
"ஆஹா. ஆஹா.. பிரமாதம்"... என "ராதா" என்று அழைக்கப்படும் ராதாகிருஷ்ணன் சந்தோஷத்தில் கூச்சலிடுவதை கேட்டு, விறகடுப்பை ஊதாங்கோலால் ஊதிஊதி களைத்திருந்த சுசீலா, "என்னாச்சிங்க"ன்னு புழக்கடையிலிருந்து குரல்கொடுத்தாள்.
" மெட்ராஸில இருக்குற.. எங்க ஒண்ணுவிட்ட சித்தப்பா, "கபாலி செட்டியாரோட" பையன் குமாரின் கல்யாண பத்திரிக்கையை தபால்ல அனுப்ச்சிருக்காரு, இங்க வந்து அதை பாரேன்" என கூப்பிட்டான். அவளும் ஓடோடி வந்து, அந்தகால சம்பிரதாயப்படி வெளியில் ரோஸ் கலரிலும், உள்ளே மஞ்சள் கலரிலும் இருந்த அந்த பத்திரிக்கையில், மணமகன் "குமார்" மற்றும் மணமகள் "மோகனா" இருவரும் ஒன்றாக இருப்பதுபோல் "ஒட்டி டெவலப்" செய்யப்பட்ட மார்பளவு பிளாக் அண்ட் வைட் ஃபோட்டோவை பார்த்து பிரம்மித்தாள்.
"அது எப்டிங்க இப்பவே ஒண்ணா இருக்காங்களே தப்பில்ல" என வியப்புடன் கேட்க " போடி பைத்தியம் அது ஸ்டுடியோகாரன் செய்த ட்ரிக்ஸ் மாரி தோணுதுடி" என்றான்.
"ஆத்தி! பொண்ணு சிவப்பா அழகாகிதே! அய்.! நெத்திசுட்டி, கல்நெக்லஸ் எல்லாம் பளிச்சினு தெரியுதே " என சுசீலா பிரம்மித்து நிற்க. "எங்க சித்தப்பாவுக்கு என்ன கொறச்சல். மெட்ராஸ்லயே ரெண்டு ஊடிருக்கு. ரேஷன் கடைல அக்கவுண்டண்ட் வேல இருக்கு, நல்ல வசதியானவரு.
வேலூர்ல, பொண்ணு வீடு பெரிய எடமாம். நூறு சவரன் போடுறதா கேள்விபட்டேன். சரிசரி கல்யாணப் பத்திரிகைய படிக்கறேன் கேளு" என்றபடி "எல்லாம் வல்ல முருகப்பெருமான் திருவருள் துணை கொண்டு, ஆவணி மாதம் 18 ஆம் தேதி 29-8-68 வியாழன் அன்று காலை 4.30மணிக்கு மேல் 6 மணிக்குள்ளாக, ரிஷப லக்னத்தில் நடைபெற உள்ள விவாஹ சுப முகூர்த்தத்திற்கு..." என ஆரம்பித்து, முற்றும் வரை முழுதுமாக உறக்க படித்து காட்டினான்.
அவள் சந்தோஷம் பொங்க"ஏங்க ,அன்னிய ராத்திரிக்கு சதுர் கச்சேரி வேற இருக்குதாமில்ல.... கல்யாணத்துக்கு நானும் வரேங்க" என ஆசையாக விண்ணப்பிக்க, அவர்களின் பத்து வயதான ஒரே மகள் பொன்னி"அப்பா. அப்பா.. என்னியும் இட்டுக்குணு போங்கப்பா, நான் இதுவரிக்கும் மெட்ராஸ பாத்ததே இல்லப்பா" என கெஞ்சி கூத்தாடினாள்...
செங்கல்பட்டு அருகில் உள்ள "அருங்கோணம்" கிராமத்தை சேர்ந்த பட்டிக்காட்டு பாமரர்களாகிய இவர்களுக்கு, அந்த திருமணத்தை கண்டுகளித்து விருந்துண்ண பேராவல் ஏற்பட்டது. ஏழை விவசாயி ராதாவின்,கையில் காசு இல்லாததால் விதைநெல்லை விற்று, பணம் திரட்டி, நாலேகால் ரூபாய்க்கு சிறிய வெள்ளி குங்கும சிமிழை பரிசா வாங்கி கொண்டு, மெட்ராஸ் செல்ல ஆயத்தமானர்.
அக்கால கல்யாணங்கள் மூன்று நாட்கள் உற்றார் உறவினர் புடைசூழ, கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதுவும் மெட்ராஸில் நடைபெறும் திருமணங்கள் பெரும்பாலும், மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டு, முதல் நாள் பந்தக்கால் நடும் வைபவம், அடுத்த நாள் மாப்பிள்ளை-பெண் அழைப்பு ஊர்வலம், மூன்றாம் நாள் கல்யாணம் என தொடர்ந்து மூன்று நாட்கள் தடபுடலாக நடக்கும்.
பெரும் பணக்காரர்களாக இருப்பின், திருமண நாளன்று மாலையில் சதிர்(நடன) கச்சேரி வேறு விமரிசையாக நடைபெறும். சதிர் கச்சேரி நடைபறும் கல்யாணமாக இருந்தால் உள்ளூர் வெளியூர், தூரத்து சொந்தம்... என கூட்டத்துக்கு பஞ்சமே இருக்காது.
ராதா- சுசீலா ஜோடி மெட்ராஸ் பூக்கடை பஸ் நிலையத்தில் வந்து இறங்கியதும், வண்ண வண்ண மின்சார விளக்குகள் மிளிரும் பெரிய பெரிய கடை கண்ணிகளை கண்டு பொன்னி வியப்பில் வாய்பிளந்து வேடிக்கை பார்த்தாள். ஒரு பெரிய பிரசித்தி பெற்ற ஸ்வீட் ஸ்டாலை அலங்கரித்த பற்பல இனிப்பு வகைகளை கண்டு "அப்பா அப்பா! இதெல்லாம் எனுக்கு வாங்கி குடுப்பா. துண்ணு பாக்க ஆசையாகிதுப்பா" என கெஞ்சி கூத்தாடி அடம் பிடிக்க, "கொஞ்சம் பொறுத்துக்க பாப்பா, கல்யாணவிருந்துல இதுமாரி நெறய பலகாரங்க கெடைக்கும் " என்று சமாதானம் சொல்லி, ஒருவழியா கால்நடையாக சென்று, மீர்சாப்பேட்டையில் உள்ள சித்தப்பாவின் வீட்டை அடைந்தனர்.
வீடே கல்யாண களைகட்டி மகிழ்வுடன் காட்சியளித்தது. ஆனால் இவர்களுக்கு, அப்படி ஒன்றும் பெருசாக வரவேற்பில்லை.
சித்தப்பா மட்டும் "வாடா ராதா, ஊர்ல எல்லாரும் சௌக்யமா?" என்று சம்பிரதாயமாக விசாரித்ததோடு சரி.
பெருசுகள், பெண்டு பிள்ளைகள்,குட்டிசுட்டிகள் தாவணி குமரிகள் என வீடு ஒரே கலகலப்பாக இருந்தது.
ராதா என்றால் , கபாலி செட்டியாருக்கு மிகவும் பிடிக்கும் . ராதாவும் அவர்கள் வீட்டு பிள்ளையபோல மாங்கு மாங்குனு, எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுண்டு செய்வான். ராதா, கடைக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கிவருதல், வந்தவங்க போனவங்களை கவனித்தல் போன்ற வேலைகளில் மிகவும் உதவியாக இருந்தான். சுசீலாவும், சமையலில் உதவி செய்தல், அறைகளை சுத்தம் செய்தல் போன்ற வீட்டு வேலைகளில் சுறுசுறுப்பாக இயங்கினாள்.
திருமண வைபவம் மைலாப்பூர் ராஜேஸ்வரி பாடசாலையில், பந்தகால் நட்டு, விமரிசையாக தொடங்கியது. பெண் வீட்டார் இரண்டு தனி பஸ்களில் வந்து இறங்க, அவர்கள் தங்குவதற்கு தனி ஜாகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாப்பிள்ளை குமாரின் அம்மா "மோகனாம்பாள்", சம்மந்தி வீட்டு பெண்டுகளுக்கு வேண்டிய உதவிகளை செய்யும் பொருட்டு, சுசீலாவை அவர்களுடன் தங்கி கவனித்து கொள்ள ஏற்பாடு செய்திருந்தாள். சுசீலாவும் நிற்க நேரமின்றி பம்பரம் போல் சுழன்று கொண்டே இருந்தாள். அம்மாவுக்கு உதவியாக குட்டிபொண்ணு பொன்னியும் குஷியாக அங்கு மிங்கும் ஓடிக்கொண்டிருந்தாள்.
ஒருவழியாக அன்றிரவு மாப்பிள்ளை அழைப்பு வைபவம் கோலாகலமாக ஆரம்பித்தது. ராஜா வேஷம் தரித்து, வெள்ளை குதிரையில் அமர்ந்துவந்தார் மாப்பிள்ளை குமார். "டாப்" இல்லா திறந்த காரில் வாண்டுகள் புடைசூழ அவனை பின்தொடர்ந்தார் மணப்பெண். போலீஸ் பேண்டு செட், தாரை தப்பட்டை, கிளார்நெட் நாதஸ்வரம் முன் செல்ல, மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை என பெருங்கூட்டத்தோடு, மீர்சாப்பேட்டையே, வேட்டுகளால் அதிர, திரளான ஜனங்களுடன் மயிலாப்பூர் நோக்கி வெகுஜோராக ஊர்வலம் நடைபெற்று ஓய்ந்தது. ராதாவும் சுசீலாவும் நிற்க நேரமின்றி இயங்கினர். அவர்களுக்கு சரியாக சாப்பிட கூட நேரமில்லை. குழந்தை பொன்னி மட்டும் அடிக்கடி அப்பாவிடம் வந்து, "அப்பா கேசரி, பொங்கல், வடை சாப்டம்ப்பா, காப்பிதண்ணி குடிச்சேம்ப்பா, ரொம்ப ருசியா இருந்துச்சிப்பா.. எப்பப்பா டேன்ஸ் கச்சேரி நடக்கும். அத பாக்கறதுக்கு எனக்கு ரொம்ப ஆசையா இருக்குப்பா" என்று ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்துக் கொண்டிருந்தாள்.
சிறப்பான 51 பதார்த்தங்களுடன், நடந்த மாப்பிள்ளை அழைப்பு விருந்து முடியும் தருவாயில், கடைசி பந்தியில் அமர்ந்து சாப்பிட தயாராக இருந்த ராதா-சுசீலா தம்பதிக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது.
மோப்பு வச்ச செயினும் அட்டிகையுமாய் படாடோபமாக மின்னிய, பெண்ணின் அத்தைக்காரி, அதிகார தோரணையில் "சுசீலா இங்கவா" என கோபத்துடன் கத்த, "என்னாச்சுமா எதனா வேணுமாமா" என பாதி விருந்திலிருந்து கையைக்கூட அலம்பாமல் ஓடிவந்தனர் ராதாவும் சுசீலாவும்.
அத்தைக்காரியோ "பொண்ணுக்கு நலங்கு வைக்கும்போது, என் இடுப்பில இருந்து நழுவி விழுந்த "பட்டு சுருக்குப்பைய்ய" , செத்த நேரம் பத்திரமா பாத்துக்க சொல்லி உன் கையில குடுத்தேன், இல்லியா.? அத ஏன் எங்கிட்ட இன்னும் நீ திருப்பி குடுக்கல, அதல நானூறு ரூபாய்க்குமேல (அந்த காலக்கட்டத்தில் ஒரு சவரனின் விலை 50 ரூபாய்) பணம் வச்சிருக்கேன், உடனே அத திருப்பிக் குடுன்னு" அதட்ட , வந்திருந்த ஜனங்கள் ஒருவருக்கு ஒருவர் தங்களுக்குள் குசுகுசுனு பேசிக்கொண்டனர்.
சுசீலாவோ " அம்மா, அந்த சுருக்குபைய்ய, ஒடனே கொஞ்ச நேரத்துலேயே ஒங்ககிட்ட திருப்பி குடுத்துட்டனேம்மா. நல்லா ஞாபக படுத்தி பாருங்கம்மா" என பதில் சொல்ல, "அடிப்பாவி, நான் எங்கடி அத திருப்பி வாங்கினேன். வரிச தட்ட தூக்க கூப்டதால , ஊர்வலத்தில கலந்துக்கற அவசரத்துல உடனே போய்ட்டனே. இப்பதான் ஞாபகம் வந்திச்சி" என கூறினாள்.
"அம்மா சத்திமா, அந்த சுருக்குப்பைய்ய நான் உங்ககிட்ட அப்பவே திருப்பி குட்துட்டம்மா. நான் பொய் சொல்ல மாட்டம்மா. நீங்க சரியா தேடி பாருங்கம்மா" என சொல்லி கேவிக்கேவி அழத்தொடங்க, "ஏய். திருட்டு நாயே யார்கிட்ட பொய் சொல்ற. மரியாதையா அத குடுத்துடு. இல்லாங்காட்டி போலீஸ்ல புட்ச்சி குடுத்துடுவேன்" என ஆக்ரோஷமா மிரட்ட.."நான் பொய் சொல்லலம்மா. நான் உங்ககிட்ட அத அப்பவே திருப்பி குடுத்துட்டம்மா" என்று மறுபடியும் மறுபடியும் கூறி பயத்துல ஓவென அழுவதை பார்த்து, அனைவரும் கும்பல் கூடி சிலாகிக்க, கல்யாண வீடு ஒரே களேபர பூமியாக மாறிவிட்டது.
உடனே கபாலி ஓடிவந்து "அம்மா! அவங்க என் தாய்வழி பேரன் உறவுமுறைங்க. ரொம்ப நாணயமானவங்க. அவங்க திருடியிருக்க மாட்டாங்கம்மா. நீங்க கொஞ்ச நிதானமா தேடிபாருங்கம்மா. எங்கனா மறந்து வச்சிருப்பீங்க" என்று பணிவுடன் சமாதானம் சொல்ல.. அந்த அத்தைகாரியோ வெகுண்டெழுந்து" அப்ப நாங்க கெட்டவங்களா? நாங்க என்ன பொய் சொல்றவங்களா, நாணயமில்லாதவங்களா?" என கோபத்துடன் கேட்க, சண்டை மேலும் வலுக்க ஆரம்பிக்கிறது.
நிலைமை ரசபாசமாக மாறிவிடாமல் தடுக்க பெண்ணின் அப்பா சீத்தாராம் , தன் தங்கையை சமாதானம் செய்ய முற்பட, அந்தம்மாவோ "நீ இன்னா அண்ணாத்த இப்பிடி பேசர. கூடப்பொறந்த என்ன நீ நம்பமாட்டியா? அவங்க சொல்றதத்தான் நம்புவியா?" என அவரிடமும் மல்லு கட்டினாள்.
இறுதியில், சம்பந்திகள் இருவரும் கலந்து பேசி.. கல்யாணம் சுமூகமாக நடக்க இத பெருசு படுத்த வேணாம்னும், கபாலி தானே அந்த பணத்த அந்த அத்தையம்மாவுக்கு திருப்பி கொடுக்க பொறுப்பேற்பதாகவும் வாக்கு கொடுத்து, அத்தைகாரியை சமாதானம் செய்தனர்.
ஆனாலும் அந்த அம்மா விட்டுகொடுக்காம "அந்த திருட்டு பொம்பள இன்னும் எத எத திருடப்போறாளோ தெரியல. அவள மொதல்ல வெளியே வெரட்டுங்க, இல்லன்னா நாங்க எல்லாரும் ஊருக்கு இப்பவே கிளம்பறோம் " என கூச்சலிட, கபாலி செட்டியார் என்ன செய்வது என்று தெரியாமல் தர்ம சங்கடத்தில் நின்றார்.
ராதா-சுசீலா ஜோடியோ மகளுடன், தங்கள் மூட்டை முடிச்சுகளை சுமந்தபடி மெல்ல மண்டபத்தை விட்டு வெளியேறுவதை கண்டு, அவர் செய்வதறியாது கண்களில் நீர்பெருக சிலைபோல் நின்றார்.
அவர் மனைவி மோகனாம்பாளோ"ஏங்க ,அந்த அத்தையம்மா ஏன் பொய் சொல்லப் போறாங்க. சுசீலா ஒருக்கால் அதை எடுத்து கூட இருக்கலாமில்லியா? அது அந்த கடவுளுக்குதான் தெரியும். நீங்க வெசனப்படாதீங்க. வாங்க உள்ள போலாம்" என சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றாள்.
அந்த இரவு நேரத்தில் எப்படி ஊர் திரும்புவது என்று கலங்கியபடியே, கனத்த சோகத்துடன் நடந்து செல்லும் ராதாவின் கையை பற்றியிருந்த, ஏதுமறியாத குழந்தை பொன்னியோ "அப்பா, ஏம்ப்பா களம்பிட்டோம். நான் பலகாரமெல்லாம் சரியாவே துண்லப்பா. நாளக்கி நாட்டிய கச்சேரிய பாக்க முடியாதாப்பா. விருந்து சாப்ட முடியாதாப்பா" என விவரமறியாமல், ஏக்கத்துடன் கேட்டிட... என்ன பதில் கூறுவது என புரியாமல், மௌனமாய், ஏதும் சொல்லாமல், அழுதுகொண்டே அவளை தோளில் ஏற்றி சுமந்தபடி, பூக்கடை பஸ் நிலையம் நோக்கி சுசீலாவுடன் சோர்வு மேலிட மெல்ல நடந்தான் ராதா.
(பி கு )..இரவு படுக்கும் முன்...
அந்த அத்தைக்காரி, தான் கட்டியிருந்த எட்டுமுழம் பட்டுபுடவையை மாற்ற முற்பட்ட போது, ஏதோ ஒரு பொருள் தொப்பென்று தரையில் விழ, அது தன் பட்டு சுருக்குப்பை யென அறிந்து துணுக்குறுகிறாள். "ஐயோ பாவம் அந்த அப்பாவி பொண்ணுமேல அபாண்டமா பழி சுமத்தி அவள அவமானப்படுத்திட்டோமே" என தன் மனசாட்சி ஒரு நிமிடம் வினா எழுப்ப, அடுத்த நொடியே தன் சுயமரியாதையை விட்டுக்கொடுக்க, மிருகமனம் இடம் தராததால், அதை அப்படியே யாரிடமும் சொல்லாமல் மறைத்து விடுகிறாள். ஆனால் பணத்தை மட்டும் ஒருமுறைக்கு இருமுறை, எண்ணி சரிபார்க்க தவறவில்லை. இமைக்கும் நொடிகளில் அந்த "பட்டு சுருக்குப்பை" சாலையோர குப்பைத்தொட்டியில் யாருக்கும் தெரியாமல் வீசப்பட்டது.
ராதா-சுசீலா ஜோடியின் கப்பலேறிய தன்மானத்துடனும் சேர்த்துத்தான்.
(முற்றும்)
-மரு உடலியங்கியல் பாலா.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
from Latest news https://ift.tt/eWLrO0S
0 Comments