“தேசியக் கட்சியான காங்கிரஸ், தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்ட முடியாததற்கு என்ன காரணம்?”
“தமிழகத்தில் நாங்கள் ஆளுங்கட்சியும் இல்லை. எதிர்க்கட்சியும் இல்லை. ஆனால், நாங்கள் கூட்டணியில் இருக்கும் கட்சிதான் ஆட்சி அமைக்கிறது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருப்பது அரசியலில் கடினமான நிலை. எனவே, எங்களின் வளர்ச்சியும் ‘லிமிட்’டாகவே இருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க-போல் தனிப்பட்ட தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் உருவாகவும் இல்லை. அதனாலேயே மக்கள் எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. தலைவர்களை யாரும் உருவாக்க முடியாது; இயற்கையாக உருவாக வேண்டும். அப்படியான ‘நேச்சுரல் லீடர்’ காங்கிரஸில் இன்னும் வரவில்லை!”
“இதற்கு வாரிசு அரசியலும் ஒரு காரணமா?”
“இது காங்கிரஸ் கட்சி-மீது மட்டும் வைக்கப்படும் விமர்சனம் அல்ல. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் இருக்கும் பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் வாரிசுகள்தான். இதுதான் எதார்த்த உண்மை!”
“வரவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸுக்கு எத்தனை சீட்டுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?”
“கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க கூட்டணியில் 9 இடங்களில் நின்றோம். இந்த எண்ணிக்கைக்குக் குறையாமல் நிற்க வேண்டும் என்பதுதான் கட்சியின் விருப்பம்!”
“இந்த முறை தி.மு.க ஆளுங்கட்சியாக இருப்பதால், காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள்தான் ஒதுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின்றனவே...?”
“அது எனக்குத் தெரியாது. தேர்தல் அறிவிப்பு வந்த பிறகுதான் பேச்சுவார்த்தை நடக்கும். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி யாரை நியமிக்கிறதோ, அவர்கள் தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். ஆனால், 9 தொகுதிகளுக்குக் குறையாமல் போட்டியிட வேண்டும்!”
“இந்த முறை சிவகங்கை தொகுதி உங்களுக்குக் கிடைக்குமா?”
“மீண்டும் போட்டியிட விரும்புகிறேன். அமோகமாக வெற்றி பெறுவேன் என நம்புகிறேன். ஆனால், கட்சி யாருக்கு வாய்ப்பு கொடுக்கிறதோ, அவர்களே போட்டியிடுவார்கள்.”
“திருச்சி, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட சில தொகுதிகளை தி.மு.க-வே இந்த முறை எடுத்துக்கொள்வதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறதே?”
“என்னுடைய விருப்பம் காங்கிரஸ் கட்சி கடந்த முறை போட்டியிட்ட 9 எண்ணிக்கைக்குக் குறையாமல் போட்டியிட வேண்டும் என்பது. மற்றபடி இந்தத் தொகுதிகளில்தான் போட்டியிட வேண்டும் என்பது என்னுடைய வற்புறுத்தல் அல்ல.”
“காவிரி விவகாரத்தைச் சுட்டிக்காட்டி, ‘I.N.D.I.A கூட்டணியில் முரண் இருப்பதாக’ பா.ஜ.க சொல்கிறதே?”
‘‘மாநிலங்களுக்கு இடையே இருக்கும் பிரச்னைகளை தீர்ப்பதற்காக I.N.D.I.A கூட்டணி அமைக்கப்படவில்லை... அதற்குத்தான் காவிரி மேலாண்மை வாரியமும், உச்ச நீதிமன்றமும் இருக்கிறதே. கர்நாடகாவில், 9 மாதங்களுக்கு முன்புவரை பா.ஜ.க ஆட்சியும், 2 ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியும்தான் இருந்தது. அப்போது அவர்கள் பிரதமரை தலைகாவேரிக்கு வரவழைத்து சமரசம் பேசியிருக்க வேண்டியதுதானே... எனவே இதை அரசியலாக்க முடியாது. கூட்டணியில் பிளவும் ஏற்படாது.”
“அப்படியென்றால், I.N.D.I.A கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுவில், மார்க்சிஸ்ட் கட்சிக்கு இடம் கொடுக்கப்படவில்லையே... ஏன்?”
“அது குறித்து எனக்குத் தெரியாது. தமிழகத்தில் கூட்டணிக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை. 4 பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களிடம் இருக்கிறார்கள். கேரளாவில் கம்யூனிஸ்ட்டுகளுடன் எங்களால் கூட்டணி வைத்துக்கொள்ள முடியாது. இதேபோல் ஒவ்வோர் இடத்திலும் ஓர் இலக்கணம் இருக்கும். அதன்படி நாங்கள் நடந்துகொள்வோம்.”
“தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக கே.எஸ்.அழகிரி இருந்துவரும் சூழலில், புதிய தலைவருக்கான பெயர்ப் பட்டியலில் உங்கள் பெயரும் அடிபடுகிறதே...?’’
“கே.எஸ்.அழகிரி ஓர் அதிர்ஷ்டமான, ராசியான தலைவர். கடந்த தேர்தல்களில் காங்கிரஸ் நல்ல வெற்றி பெற்றது. எப்போதும் மூன்று ஆண்டுகளுக்குத்தான் தலைவர் பதவி வழங்கப்படும். தேர்தல் வந்தால் நீட்டிக்கப்படும். எனவே இது இயல்புதான். தலைவர் ரேஸில் நான் இருப்பதான செய்திகளை ஊடகங்கள்தான் உருவாக்குகின்றன.”
“ ‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி கொடுத்தால் சிறப்பாகப் பணியாற்றுவேன்’ என நீங்களே பலமுறை கூறியிருக்கிறீர்களே?’’
“தலைவராக வருவதற்கு எனக்கு விருப்பம் இருக்கிறது. அந்த வாய்ப்பைக் கொடுத்தால் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்பதை அகில இந்திய தலைமையிடம் தெரிவித்தும் இருக்கிறேன். இது நியமன பதவி. என்னை நியமிக்கும் அதிகாரம், கார்கேவிடம்தான் இருக்கிறது. அவர்தான் என்னை நியமனம் செய்ய வேண்டுமா அல்லது தற்போது இருப்பவரே தொடர வேண்டுமா என்பதையெல்லாம் முடிவு செய்வார்!’’
“இக்கட்டான தருணங்களில்கூட துணிச்சலாக நீங்கள் தெரிவிக்கும் கருத்துகள், பல சமயங்களில் சர்ச்சையாகிவிடுகிறதே?”
“நக்கல், நையாண்டி, நகைச்சுவை இல்லாமல் அரசியலில் இருக்க முடியாது. தன்னையே கிண்டல் செய்துகொள்ளும் நிலை என்பது வரவேற்கப்பட வேண்டிய நகைச்சுவை... அது கலைஞருக்குப் புரியும். ஆனால், பலருக்கு அது புரியவில்லை என்பது வியப்பாக இருக்கிறது. சொந்தக் கட்சியை விமர்சனம் செய்வதில் என்ன தவறு இருக்கிறது... கிரிக்கெட்டில் இந்தியா தோல்வி அடையும் நிலைக்குச் சென்றால், டி.வி-யை நிறுத்திவிட்டு சென்றுவிடுவார்கள். அவர்கள் அனைவரும் என்ன தேசவிரோதிகளா?”
“ ‘சாதிவாரி கணக்கெடுப்பு கோருவதன் மூலமாக மக்களைப் பிரித்தாள நினைக்கிறது காங்கிரஸ்’ என்ற பா.ஜ.க-வின் குற்றச்சாட்டுக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்?’’
“டேட்டா சேகரிப்பது எப்படி தவறாகும்... அதை எப்படி பயன்படுத்தப் போகிறோம் என்றுதான் பார்க்க வேண்டும். பிரிவினையைக் கொண்டுவருவதாக கூறுவது தவறு. அவர்களின் இந்துத்துவ பார்வை என்பது, ‘வட இந்திய சம்ஸ்கிருத மேல்தட்டு வெஜிடேரியன்’ என்பதுதான். அவர்கள் சொல்லும் கோட்பாடுகளுக்கு மாறுபட்ட சமுதாயம் இன்னும் இருக்கிறது என்ற உண்மை வெளியில் வந்தவுடன், அவர்களின் போலி இந்துத்துவாவுக்கு ஆட்டம் கண்டுவிட்டது. அதனால் அஞ்சுகிறார்கள்.”
“அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி உடைந்துவிட்ட சூழலில், இந்த முறை சிறுபான்மையினர் வாக்குகளைப் பெறுவதில் போட்டி பலமாக இருக்குமே...?”
“அ.தி.மு.க - பா.ஜ.க ஒன்றாக இருக்கும்போதே எங்களுக்குக் கடும் போட்டியைக் கொடுக்க முடியவில்லை. பிரிந்து நின்று எப்படி கடும் போட்டியைக் கொடுக்க முடியும்?”
“சிறுபான்மை மக்களின் நம்பிக்கையைப் பெறுவதில், அ.தி.மு.க காட்டிவரும் ஆர்வம் சிறுபான்மையினரின் வாக்குகளைச் சிதறச்செய்யும்தானே?”
“காங்கிரஸ் எந்த கூட்டணியில் இருக்கிறதோ, அதுதான் நம்பகத்தன்மையான கூட்டணி. இது சிறுபான்மை மக்களுக்கும் தெரியும். எனவே காங்கிரஸ் கூட்டணிக்குத்தான் சிறுபான்மை மக்கள் வாக்களிப்பார்கள். நேற்றுவரை பா.ஜ.க-வுடன் இருந்த அ.தி.மு.க-மீது எந்த நம்பிக்கையும் வராது. தேர்தல் முடிந்ததும் இருவரும் இணைய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்?”
“சிவகங்கையில் ஏற்கெனவே மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி மாற்றப்பட்டு உங்களின் ஆதரவாளர் சஞ்சய் காந்தியை கொண்டு வந்திருக்கிறீர்களே?”
“அதில் ஒரு சர்ச்சையும் இல்லை. மாவட்டத் தலைவரை நியமிக்கும் அதிகாரம் அகில இந்திய தலைமைக்கு தான் இருக்கிறது. அவர்கள்தான் நியமித்திருக்கிறார்கள். எனவே அவருக்கு சந்தேகம் இருந்தால் தலைமையிடம்தான் கேட்க வேண்டும்”
“ஆனால், தான் ராமசாமிக்கு ஆதரவாக இருந்ததால்தான் நீங்கள் மாற்றிவிட்டதாக, அவர் கூறுகிறாரே?”
“என் தொகுதி, மாவட்டத்தில் இருக்கும் அனைத்து காங்கிரஸாரும் எனது ஆதரவாளர்கள் தான். நான் தான் மாற்ற வேண்டும் என பரிந்துரை செய்தேன். வெகு காலமாக அவர் இருக்கிறார். இளைஞர் வர வேண்டும் என்பதற்காக செய்தேன். குறிப்பாக மானாமதுரை தொகுதியில் இருந்து ஒரு மாவட்டத் தலைவர் வந்து நீண்ட காலம் ஆகிவிட்டது. எனவே அந்த பகுதிக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தேன். 10 ஆண்டுகளுக்கு மேல் மாவட்டத் தலைவராக சத்தியமூர்த்தி இருந்துவிட்டார்”
“உடல்நலக் குறைவில் இருக்கும் ஹெச்.ராஜாவை நலம் விசாரித்தீர்களா?”
“எனக்கு தெரியாது. பூரண குணமடைய வேண்டும் என்பதற்கு நல்வாழ்த்துகள்.”
"பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் செயல்பாட்டை எப்படி பார்க்கிறீர்கள்?
"அவர் பா.ஜ.க கருத்தியல் சார்ந்தவர் இல்லை. போலீஸ் சர்வீசில் இருந்து வெளியில் வந்ததும் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரா என ஏக்கத்தில் இருந்தார். அது நடக்காததால், ஆட்டைத் தூக்கிக்கொண்டு இரண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். வேறு எங்கும் சேர முடியாததால் பா.ஜ.க-வில் சேர்ந்துவிட்டார். அவர் ஒன்றும் காலம் காலமாக காக்கி டவுசர் போட்டு கொண்டு, ஆர்.எஸ்.எஸ்-க்கு சென்று கம்பு சுற்றி எல்லாம் பதவிக்கு வரவில்லை."
"ஒரே நாடு ஒரே தேர்தலை பா.ஜ.க முன்னெடுக்கிறதே?"
"அது இந்தியாவுக்கு தேவையும் இல்லை, அவசியமும் இல்லை. சாத்தியமும் இல்லை. இந்திய அரசியல் சாசனத்தை மாற்றினால்தான் சாத்தியம். அதற்கு அவர்களுக்கு மாநிலங்களில் ஆதரவு இருக்கிறதா என தெரியாது. என்னை பொறுத்தவரை அடிக்கடி தேர்தல் வருவதுதான் நல்லது. அப்போதுதான் அரசுக்கு எதிராகவோ, ஆதரவாகவோ தங்களின் மனவோட்டத்தை, மக்கள் காட்ட முடியும்."
"தி.மு.க, பா.ஜ.க ஆட்சியில் உங்களை கவர்ந்த திட்டங்கள் என்ன?"
"மாணவிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் திட்டம், பெண்களுக்கு ரூ.1,000 கொடுக்கும் திட்டத்தை நான் வரவேற்கிறேன். மோடியை பொறுத்தவரை வெளிநாட்டு தலைவர்களை டெல்லியில் வைத்து மட்டும் சந்திக்காமல், பிற இடங்களிலும் சந்திக்கிறார். குறிப்பாக சீன அதிபரை மாமல்லபுரத்திற்கு அழைத்து வந்தது போன்ற விஷயங்களை நான் பாராட்டுகிறேன்."
"இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்னையை எப்படி பார்க்கிறீர்கள்?"
"அப்பாவி மக்கள் இறந்து போவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இரண்டும் தனி நாடாக இருக்க வேண்டும். மீடியாக்கள் பாலஸ்தீனர்களுக்கு எதிராக நடக்கும் அநீதியை 'ஹைலைட்' செய்யாதது வருந்தத்தக்கது. உடனடியாக போர் நிறுத்தப்பட்டு, பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்."
from Latest news https://ift.tt/ek9C3cL
0 Comments