https://gumlet.vikatan.com/vikatan/2022-10/b367b72c-f69b-4ec5-9e72-f74b16f0fe58/salary_account_image.png?w=280நிறைய வங்கியில் உங்களுக்கு சேமிப்பு கணக்கு இருக்கா..? இந்த விஷயங்களை கவனிங்க...!

வங்கிகளுக்கு சென்று பல மணி நேரம் காத்திருந்து வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்ற நிலை மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது. இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில், ஆன்லைன் உதவியோடு எளிமையான முறையில் பேங்க் அக்கவுண்ட் ஆரம்பித்துக் கொள்ளலாம். இந்த செளகர்யத்தின் காரணமாக, பலர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்கை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். இதனால் என்ன நன்மை, என்ன தீமை என்பதை விளக்குகிறார் முதலீட்டு ஆலோசகர் சுந்தரி ஜெகதீசன்.

மினிமம் பேலன்ஸ் பிரச்னை!

சுந்தரி ஜெகதீசன்

"மினிமம் பேலன்ஸ் என்பது ஒரு வங்கிக் கணக்கில் வாடிக்கையாளர் இருப்பு வைத்திருக்க வேண்டிய குறைந்தபட்ச தொகையாகும். இந்த தொகையை விட குறைவாக இருந்தால், வங்கி அபராதம் விதிக்கும். மினிமம் பேலன்ஸ் என்பது வங்கியின் வகையைப் பொறுத்து மாறுபடும். சம்பளக் கணக்குக்கு மினிமம் பேலன்ஸ் இல்லை என்றாலும், சேமிப்பு கணக்கு மற்றும் நடப்புக் கணக்குகள் போன்றவற்றுக்கு மினிமம் பேலன்ஸ் அதிகமாக இருக்கும். நிறைய வங்கிகளில் சேமிப்பு கணக்கு அல்லது நடப்புக் கணக்கு வைத்திருந்தால், அனைத்து வங்கி கணக்குகளிலும் மினிமம் பேலன்ஸ் மெயின்டேயின் செய்ய வேண்டும். இதனால் தேவையில்லாமல் அதிக தொகை வங்கிக்கணக்கில் முடங்க வேண்டியிருக்கும்.

பணம் எடுப்பதற்கான லிமிட்!

வங்கி கணக்குகளில் இணைக்கப்பட்டிருக்கும் டெபிட் கார்டுகள் மூலம் ஒரு நாளுக்கு குறிப்பிட்ட தொகை மட்டுமே எடுக்க முடியும். நிறைய வங்கிக் கணக்குகள் இருக்கும்பட்சத்தில் அவசர தேவைகளுக்கு அதிக பணம் தேவைப்படும் போது, வெவ்வேறு அக்கவுண்டில் இருந்து டெபிட் கார்டு மூலம் பணத்தை எடுத்து பயன்படுத்த உதவியாக இருக்கும் என்றாலும், வங்கி கணக்குகளை குறிப்பிட்ட காலம் பயன்படுத்தாமல் போனால் அந்த வங்கிக் கணக்கு செயலற்ற வங்கிக் கணக்காக மாறவும், வங்கிகள் தேவையற்ற கட்டணங்கள் விதிப்பதன் மூலம் மினிமம் அக்கவுண்ட் பேலன்ஸ் குறைய காரணமாகிவிடும்.

ATM

வங்கி கட்டணங்கள்!

வங்கிகள் மக்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்குகின்றன. இதற்காக, வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கின்றன. சில வாடிக்கையார்கள் வங்கி கட்டணங்கள் குறித்து அறிந்திருக்ககூட மாட்டார்கள். இதனாலும் பணம் விரையம் ஆகலாம்.

மக்கள் பல்வேறு காரணங்களுக்காக தங்கள் ஊரில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் போது ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த வங்கி கணக்கை மூடாமல் புதிதாக வங்கி கணக்குகளை தொடங்குகிறார்கள். இதனால், மூடப்படாத வங்கி கணக்கில் எஸ்.எம்.எஸ் சார்ஜ், டெபிட் கார்டு சார்ஜ் போன்று பல கட்டணங்கள் போன்றவை பிடித்தம் செய்யப்படும். இப்படி தொடர்ந்து பிடித்தம் செய்யப்படுவதால் குறைந்தபட்ச வைப்புத்தொகை இல்லாமல் போய்விடும் எனவே, இதற்கென தனியே கட்டணமும் வசூலிக்கப்படும். இதன் காரணமாகவே அரசாங்கத்திலிருந்து வங்கிகளில் செலுத்தப்பட்ட பலரது மகளிர் உரிமை தொகை பிடித்தம் செய்யப்பட்டது. இதை தவிர்க்க வங்கி கணக்கை மூட வேண்டும் அல்லது அக்கவுண்டை டிரான்ஸ்ஃபர் செய்ய வேண்டும்.

அரசாங்கத்தால் செயல்படுத்த கூடிய பொதுத்துறை வங்கிகளில் வட்டி விகிதம் குறைவாக இருப்பதால் அங்கே ஒரு வங்கி கணக்கை தொடங்கலாம். வணிக ரீதியாக வெளிநாடுகளில் பணப்பரிமாற்றம் செய்ய விரும்புவோர் அதற்கு ஏற்ற வங்கிகளில் அக்கவுண்ட்டை வைத்துக் கொள்ளலாம். மூத்த குடிமக்கள் அதிக வட்டி பெற விரும்பினால் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் போன்றவற்றில் டெபாசிட் செய்து அதிக வட்டியை பெற்றுக் கொள்ளலாம். அக்கவுண்ட் வைத்திருக்கக்கூடிய வங்கி திவால் ஆனால் அதிகபட்சமாக 5 லட்சம் வரை மட்டுமே அரசாங்கத்தால் திருப்பித் தரப்படும். இதையும் வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வங்கி(Bank)

பல கணக்குகள் தொடங்கி அவற்றை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாதவர்களுக்கு தற்போது அரசாங்கம் udgam.rbi.org.in என்ற போர்டல் மூலம் பெயர் மற்றும் பான் கார்டு நம்பர் கொடுத்தால் தான் வைத்திருக்கும் அனைத்து வங்கி கணக்குகளையும் அறிந்து கொள்ள முடியும். இதில் தேவையற்ற கணக்குகளை வங்கிகளுக்கு சென்று மூடி விடலாம். வருமான வரித்துறை அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று வங்கிக் கணக்குகளை வைத்துக் கொள்ளும்படி சொல்கிறார்கள். அதனால், பொதுத்துறை வங்கிகளில் ஒன்று, தனியார் வங்கிகளில் ஒன்று என இரண்டு வங்கிக் கணக்குகள் வைத்திருப்பது நல்லது. கூடுதலாக வேண்டுமானால் இன்னொரு வங்கிக் கணக்கை வைத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் வேண்டாம்" என்றார் தெளிவாக.



from Latest news https://ift.tt/96S0H7F

Post a Comment

0 Comments