சில பெண்களுக்குத் திருமணமான புதிதில் உறவு கொள்ள முயலும்போதெல்லாம் உறவுப் பாதை இறுக்கமாகி விடும். விளைவு, தாம்பத்ய வாழ்க்கையை ஆரம்பிக்கவே முடியாது. அல்லது வலியுடனே இரவுகளைக் கடத்திக்கொண்டிருப்பார்கள். இந்தப் பிரச்னையின் பெயர் வஜைனிஸ்மஸ் (Vaginismus). தனக்கிருப்பது உடலும் மனமும் சேர்ந்த ஒரு பிரச்னை என்பதே தெரியாமல், ‘போகப் போக வலி சரியாயிடும்’ என்ற ஆறுதலை மட்டுமே நம்பிக் கொண்டிருப்பார்கள் .

உறவுப்பாதையில் இறுக்கம் வந்தால், சம்பந்தப்பட்ட பெண்ணின் உடலும் மனமும், ‘இந்த உறவு என் பழைய காயத்தை நினைவூட்டுகிறது’, ‘நான் இதற்குத் தயாராகவில்லை’, ‘என்னிடம் போதுமான வழுவழுப்புத்தன்மை இல்லை’, ‘உறவுகொள்ள விரும்பும் நபரின்மேல் எனக்கு நம்பிக்கையில்லை அல்லது அவரை எனக்குப் பிடிக்கவில்லை’ எனச் சொல்லாமல் சொல்கின்றன என்று அர்த்தம் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். இந்தப் பிரச்னைக்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் குறித்து பாலியல் மருத்துவர் கார்த்திக் குணசேகரனிடம் பேசினோம்.
‘`தாம்பத்ய வாழ்க்கைக்குத் தகுதியானவர்களாக இருந்தாலும், உறவுப்பாதையின் இறுக்கமும் வலியும் பாதிக்கப்பட்ட பெண்களை உறவில் ஈடுபட விடாது. இந்தியப் பெண்கள் பெரும்பாலும் இதைக் கணவரிடம் வெளிப்படுத்துவ தில்லை என்பதால், இரவு வந்தாலே பயப்பட ஆரம்பிப்பார்கள். ஒருசில பெண்கள் தொடர்ந்து ‘வலிக்குது’ என்று அலறும்போது, பதற்றத்தில் ஆணுக்கு விறைப்புத்தன்மையே வராமல் போகலாம்.

இந்தப் பிரச்னை புதிதாக திருமணமானவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தை பெற்ற பெண்ணுக்கும் வரலாம். திருமணமான புதிதில் உறவுப்பாதை இறுக்கம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட பெண் சிறுவயதில் பாலியல் தொல்லையைச் சந்தித்திருக்கலாம். முதல் உறவின்போது வலி ஏற்பட்டிருந்தால், அந்த பயத்திலேயே பெண்ணுறுப்புத் தசைகள் இறுக்கமாகி விடலாம். விருப்பமில்லாத திருமணமும், மனதுக்குப் பிடிக்காத கணவனும்கூட பெண்ணுக்கு வஜைனிஸ்மஸை ஏற்படுத்தலாம். `ஃபிரெண்டுக்கு ரொம்ப வலிச்சதுன்னு சொன்னாளே... நமக்கும் வலிக்குமோ' என்ற எண்ணமும் இந்தப் பிரச்னையை ஏற்படுத்தலாம்.
குழந்தை பெற்ற பெண்ணுக்குப் பிறப்புறுப் பில் அடிபட்டிருந்தாலோ, பிரசவத்தின்போது தையல் போடப்பட்டிருந்தாலோ உறவின் போது வலியும், இறுக்கமும் ஏற்படலாம். மெனோபாஸ் காலத்தில் பெண்ணுறுப்பு வறட்சி அடைவதாலும் இறுக்கம் ஏற்படலாம். உளவியல் பிரச்னைகளுக்கான மாத்திரைகள் எடுத்துக்கொண்டாலும் இந்தப் பிரச்னை வரலாம். அரிதாக சில பெண்களுக்கு, காரணமே இல்லாமலும் வஜைனிஸ்மஸ் வரும்’’ என்றவர், தீர்வுகளை வரிசைப்படுத்த ஆரம்பித்தார்.

* ’’ஒரு வாரமோ பத்து நாள்களோ உறவுகொள்ள முடியாதபடிக்கு இறுக்கமும் வலியும் இருந்தால், அதை சகித்துக்கொண்டு செல்லாமல் உடனடியாக மகப்பேறு மருத்துவரையோ, உளவியல் ஆலோசகரையோ பாலியல் மருத்துவரையோ சந்தித்து ஆலோசனை பெறலாம்.
* சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் தொல்லை காரணமாக இந்த இறுக்கம் வருகிறதென்றால், பழைய நினைவுகளைக் கடக்க உளவியல் ஆலோசனையும் செக்ஸுவல் தெரபியும் தேவைப்படும்.
* வலி பயத்தினால் இறுக்கம் வந்தால், மகப்பேறு மருத்துவரின் உதவியுடன் மென்மையான `சிலிகான் டயலேட்டர்'களை பயன்படுத்திச் சரி செய்யலாம்.
* காரணமே இல்லாமல் இறுக்கம் வருகிறதென்றால், உறவுக்கு முந்தைய விளையாட்டுகள் உதவும்.
* திருமணத்திலோ அல்லது கணவர் மீதோ விருப்பமில்லையென்றால், அடுத்து என்ன செய்ய வேண்டுமென்பதை சம்பந்தப்பட்ட பெண்கள்தான் தீர்மானிக்க முடியும்.

* பிறப்புறுப்பில் அடிபட்டிருப்பது, தையல் போடப்பட்டது ஆகியவை சரியானதும் இறுக்கமும் தானாகவே சரியாகி விடும்.
* பெண்ணுறுப்பு வறட்சிக்கு அதற்கான ஜெல் பயன்படுத்தித் தீர்வு பெறலாம்.
* கர்ப்பிணிகளுக்கு வஜைனிஸ்மிஸ் பிரச்னை - சிலருக்கு கருத்தரித்த பிறகும் தொடரலாம். உடல் அவர்களை அறியாமலே சுகப்பிரசவத்துக்கு ஒத்துழைக்காது. ’உறவுப்பாதை இறுக்கத்துடன் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு, கூடுதல் கவனமெடுத்து பிரசவம் பார்க்க வேண்டும்’ என்கிறது, அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனத்தின் தேசிய மருத்துவ நூலகம்.
பெண் உடலின் பிரச்னைகளை வெளிப்படையாகப் பேசி தீர்வு பெறுங்கள்’’ என்கிறார் டாக்டர் கார்த்திக் குணசேகரன்.
from Vikatan Latest news https://ift.tt/y8uRoVj
0 Comments