https://gumlet.vikatan.com/vikatan/2022-12/17ee7d24-8293-4d21-80ac-7180f2ae3973/WhatsApp_Image_2022_12_01_at_1_52_06_PM.jpeg?w=280`பிரதமர் எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது'- அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டையை அடுத்த பூசத்துறையில் தெற்கு வெள்ளாறு பகுதியில் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்துக்கு, 25 லட்சம் ரூபாய் மதிப்பில் தூர்வாரும் பணியினை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கிவைத்தார். அதன் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ``பூசத்துறை தெற்கு வெள்ளாற்று பகுதியில் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த தூர்வாரும்பணி பெயரளவுக்கு இல்லாமல் உண்மையான தூர்வாரும் பணியாக இருக்கும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வந்த ஏழு பேரையும் நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாடு அரசு விடுவித்து விட்டது. அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. விடுவிக்கப்பட்டவர்களில் சிலர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தால் அவர்களிடம் பாஸ்போர்ட் போன்றவை இல்லை. பாஸ்போர்ட் இல்லாததால் நம்முடைய முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதைத்தவிர, வேறு காரணங்கள் எதுவும் இல்லை. அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை என்ற பேச்சு எழவில்லை. ஆனால், அவர்களுக்கு அந்த நாட்டிலிருந்து அனுமதிச்சீட்டு கிடைக்கவில்லை. அதற்கான முயற்சிகளை ஒன்றிய அரசின் மூலம் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. தமிழ்நாடு அரசு அதனை நேரடியாக எடுக்க முடியாது.

பிரதமர் மோடி

ஒன்றிய அரசின் மூலமாக எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவிற்கு முயற்சி மேற்கொண்டு வருகின்றோம். சாந்தனின் உடலை எடுத்து செல்வதற்கு ஒன்றிய அரசு மூலம் அந்த நாட்டின் அனுமதி பெற்றுத்தான் கொண்டு செல்ல முடியும். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் விடுதலை செய்து விட்டோம். பிரதமர் மோடியிடம் நாகரிகமான அரசியலை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதனால் கவலைப்பட போவதில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிரதமர் மோடிக்கு தெரியும்.. எத்தனை முறை, எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் காலூன்ற முடியாது என்பது நன்றாக தெரியும்.

அமைச்சர் ரகுபதி

தமிழ்நாட்டில் இன்றும் அவர் பெயர் சொல்லக் கூடிய திட்டங்கள் தந்திருப்பவர் கலைஞர் தான். இது மோடிக்கு தெரியாமல் போயிருக்கலாம். இல்லையென்றால் வேண்டுமென்றே அவருக்கு ஞாபக மறதி ஏற்பட்டிருக்கலாம். ஒன்றிய அரசின் திட்டங்களை மாநில அரசு புறக்கணிக்கவில்லை. எந்த பேரில் ஒன்றிய அரசு திட்டத்தை தருகிறதோ, அதே பேரில் திட்டத்தை நடத்தி வருகின்றோம். ஆனால், அதில் ஒன்றிய அரசின் பங்களிப்பு குறைவு. மாநில அரசின் பங்களிப்பு அதிகம். ஆனால், எங்களது பெயரை அதில் புகுத்தவில்லை. ஒன்றிய அரசு என்ன திட்டம் தருகிறதோ, அதை நடத்திக் கொண்டிருக்கின்றோம். ஒன்றிய அரசு எதை வேண்டுமானாலும் பேசிக் கொண்டே போகலாம். நாங்கள் செய்வதை தான் சொல்லிக் கொண்டு உள்ளோம். அவர்கள் எந்த மோடி மஸ்தான் வேலை வேண்டும் என்றாலும் செய்யலாம். அதற்கு நாங்கள் பொறுப்பு கிடையாது. மோடி எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும், குட்டிக்கரணம் அடித்தாலும் எந்த ஒரு தாக்கத்தையும் தமிழ்நாட்டு அரசியலிலோ, தமிழ்நாடு மக்களிடத்திலோ ஏற்படுத்த முடியாது. மோடி, எம்.ஜி.ஆரை புகழ்ந்தாலும், ஜெயலலிதாவை புகழ்ந்தாலும் என்ன செய்தாலும் அது ஓட்டு வங்கியாக தமிழ்நாட்டில் மாறாது. பா.ஜ.க-வை பொறுத்தவரை எந்த ஓட்டு வங்கியும் இங்கு கிடையாது. யாரைப் புகழ்ந்தாலும், யாரை இழுத்தாலும், யாரை கொண்டு சென்றாலும் நிச்சயம் தி.மு.க கூட்டணி 40-க்கு 40 என்ற வெற்றி இலக்கை அடைவதை இந்த தேர்தலில் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது" என்றார்.



from Vikatan Latest news https://ift.tt/jBprbYM

Post a Comment

0 Comments