கல்வி, பொருளாதார நிலைகளில் மிகவும் பின்தங்கிய மாவட்டம் நாகை. இங்கு இருக்கக்கூடிய கல்வி நிலையங்களின் உட்கட்டமைப்பு வசதிகள், அதன் தரம் குறித்தான கேள்விகள் அதிகம் இருக்கின்றன. அதில் ஒன்றை உதாரணமாகச் சொல்லலாம். நாகை மாவட்டத்திற்குட்பட்ட திட்டச்சேரி பேரூராட்சியில் 'அரசினர் மேல்நிலைப் பள்ளி' இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்புகள் வரை சுமார் 680-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளி விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்குவதால் மிகவும் பிரபலம். அதற்காகவே, அருகில் இருக்கக்கூடிய பல மாவட்டங்களிலிருந்தும் மாணவர்கள் வருகிறார்கள். இந்த நிலையில், இந்தப் பள்ளியில் ஏற்கெனவே 4 வகுப்பறை கட்டடங்கள் காரைகள் பெயர்ந்து சேதமடைந்ததால், கடந்த ஆண்டு இடிக்கப்பட்டது. அதனால் போதிய வகுப்பறை வசதி இல்லை. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகும் சுமார் 300 -க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், பள்ளி மைதானத்தில் இருக்கும் மரத்தின் நிழலில் அமர்ந்து படிக்கின்றனர்.
பாடங்களும் மரநிழலிலே ஆசிரியர்களால் எடுக்கப்படுகிறது. கணிதம், கணக்குப்பதிவியல் முதலான வகுப்புகள் மட்டும் சுழற்சி முறையில் சில வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டு நடத்தப்படுகிறது. தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு, காலை முதல் மாலை வரை மண் தரையே வகுப்பறையாகவும், மர நிழலே மேற்கூரையாகவும் மாறியிருக்கிறது. இதற்கிடையில், பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு வழங்கும் இலவச மிதிவண்டி திட்டத்துக்காக, ஐந்துக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கான வாகன உதிரிப் பாகங்கள் மொத்தமாக இந்தப் பள்ளிக்குத்தான் கொண்டுவரப்பட்டு, பிறகு ஒருங்கிணைக்கப்பட்டு அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அதற்காக ஐந்துக்கும் மேற்பட்ட வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டு, அந்தப் பணிகள் நடைபெற்றன. தற்போது அந்த சைக்கிள்கள் விநியோகம் செய்யப்பட்டிருந்தாலும், விநியோகம் செய்யப்படாத 30-க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் ஒரு வகுப்பறையை முழுவதுமாக ஆக்கிரமித்திருக்கிறது. அதனால், அந்த வகுப்பறை பயன்பாடின்றி பூட்டி கிடக்கின்றது. சென்ற ஆண்டு நவம்பர், டிசம்பர் போன்ற மழைக்காலங்களில் மாணவர்களுக்கு வகுப்பறைகளுக்கு வெளியேயும், சில வகுப்பு மாணவர்களுடன் வகுப்பறையை பகிர்ந்தும், வகுப்பறைக்கு வெளியே வராண்டாக்களிலும், அறிவியல் ஆய்வகங்களிலும் வகுப்புகள் நடத்தப்பட்டிருக்கிறது.
இது குறித்து பள்ளி தலைமையாசிரியரிடம் பேசியபோது, ``நான் இந்தப் பள்ளியில் சமீபத்தில்தான் பணியில் சேர்ந்தேன். போதிய வகுப்பறைகள் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி, வகுப்பறையை கட்டித்தர பள்ளியின் சார்பில் பலமுறை முறையிட்டிருக்கிறோம். சி.எஸ்.ஆர் ஃப்ண்டின் மூலமும் வகுப்பறை கட்டுவது குறித்தும் பேசியிருக்கிறோம். நபார்டு பில்டிங் வேண்டும் என பள்ளியின் சார்பில் 2 வருடங்களாக முயற்சி செய்துவருகிறோம். அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெறுவதற்கு காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது. எங்கள் பள்ளிக்கு வகுப்பறை வேண்டும் என எம்.எல்.ஏ முதல் மாவட்ட ஆட்சியர் வரை பலரும் முயன்று கொண்டுதான் இருக்கிறார்கள்.
இருந்தாலும், எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. ஆனால், பள்ளிக்கட்டடம் தேவையே இல்லாத, எங்கள் அருகில் இருக்கும் மற்ற பள்ளிகளுக்கு கட்டடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது எங்களுடைய மேலதிகாரிகள் எல்லாருக்குமே தெரியும். சமீபத்தில் சி.இ.ஓ-விடமும் வகுப்பறைக் கட்டடம் குறித்தும் பேசினோம். பி.டி.ஏ உறுப்பினரும் இரண்டு வகுப்பறைகள் கட்டித் தருவதாகவும், இரண்டு மாதங்கள் காத்திருக்குமாறும் கூறியிருக்கிறார்கள். எம்.எல்.ஏ நிதியிலிருந்து நான்கு வகுப்பறை கட்டடங்கள் கட்ட நிதி ஒதுக்கியிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். மாணவர்களின் நிலையைப் பார்த்து மிகவும் வருத்தமாக இருக்கிறது.
அதற்காகவே, எல்லா விதமான நடவடிக்கையும் எடுத்துவருகிறோம்" எனத் தெரிவித்தார். மேலும்,``விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் இந்தப் பள்ளிக்கு விளையாட்டுத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பல மாவட்டங்களிலிருந்தும் மாணவர்கள் விரும்பி வருகிறார்கள். எனவே, அவர்களுக்காக ஒரு மினி ஸ்டேடியம் அமைத்துக் கொடுத்தால், இன்னும் உதவியாக இருக்கும்" என பள்ளியின் நலவிரும்பிகள் தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கிறார்கள்.
கல்வி கற்க வகுப்பறைகள்கூட இல்லாமல், மாணவ, மாணவிகள் அல்லல்படுகிறார்கள். உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய முக்கியப் பிரச்னை இது... பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இந்த திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியின் நிலை உணர்ந்து செயல்படுவார்களா?!
from Vikatan Latest news https://ift.tt/tKfNhck
0 Comments