https://gumlet.vikatan.com/vikatan/2024-05/0cd49fcb-a629-4b73-9971-1801d0992196/GridArt_20240529_184704667.jpg?w=280`மகாத்மா காந்தி குறித்த மோடியின் கருத்து... வெடித்தெழுந்த காங்கிரஸ் தலைவர்கள்!' - என்ன நடந்தது?

2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் தொடங்கியதுதான் தாமதம், இதுவரையில் மோடி தமக்குள்ளாக அடக்கி வைத்திருந்த அபார பேச்சுகளையெல்லாம் கட்டுக்கடங்காமல் ரிலீஸ் செய்துவருகிறார். இஸ்லாமியர்கள் தொடங்கி, தமிழர்கள், காங்கிரஸ்காரர்கள், இந்தியா கூட்டணி, இந்து மதம், ராம் ராம், கடவுளின் தூதன் என ஒட்டுமொத்த கருத்துகளையும் ஒரே தேர்தலில் பொழிந்துவிட்டார். அந்த வகையில் தற்போது காந்தியைப் பற்றியும் சில கருத்துக்களைக் கூறி விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

காந்தியின் செல்வாக்கு குறித்து பேசிய மோடி

முக்கியமாக, தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, ``மகாத்மா காந்தி ஒரு மிகப்பெரிய ஆன்மா. நம் தேசம் விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில், அவரைப் பற்றி உலகத்துக்கே தெரிவித்திருக்க வேண்டியது நமது கடமை அல்லவா...? நான் வருந்துகிறேன். மகாத்மா காந்தியைப் பற்றி உலகினர் யாருக்கும் தெரியாது. `காந்தி' என்ற வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திற்குப் பிறகே அவரைப் பற்றிய ஆர்வம் உலக அளவில் அதிகரித்தது. அந்தப் படத்தைக்கூட நாம் எடுக்கவில்லை. மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்களை உலகம் அறிந்து வைத்திருக்கிறது. அவர்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவரல்ல காந்திஜி! இதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். உலகம் முழுக்க பயணம் செய்த முறையில் இதைச் சொல்கிறேன். காந்திக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும்!" எனப் பேசியிருக்கிறார்.

1982-ம் ஆண்டு பிரிட்டிஷ் இயக்குநர் ரிச்சர்ட் அட்டன்பரோ(Richard Attenborough), காந்தியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்கினார். இந்த `காந்தி' திரைப்படத்தை இயக்கியதன்மூலம் பல்வேறு விருதுகளையும் வாங்கிக்குவித்தார். இந்த நிலையில், `காந்தி' திரைப்படத்தின் மூலம்தான் உலக அளவில் காந்தியை அறிந்துகொண்டார்கள் என பிரதமர் மோடி பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இயக்குநர் ரிச்சர்ட் அட்டன்பரோ(Richard Attenborough) - காந்தி திரைப்படம்

இதற்கு எதிர்வினையாற்றியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ``காந்தி திரைப்படம் வெளியான 1982-ம் ஆண்டுக்கு முன்பு மகாத்மா காந்தியைப் பற்றி உலகத்துக்கு தெரியாது என பிரதமர் மோடி கூறியிருக்கிறார். இந்த பேச்சின் மூலம் மகாத்மா காந்தியின் புகழுக்கு களங்கம் விளைவித்திருக்கிறார் மோடி. வாரணாசி, டெல்லி, அகமதாபாத் ஆகிய இடங்களில் இருந்த காந்திய அமைப்புகளை அழித்தது பிரதமர் மோடியின் தலைமையிலான பா.ஜ.க அரசுதான். காந்தியின் தேசியவாதத்தை ஆர்.எஸ்.எஸ்காரர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதைத்தான் இந்த பேச்சு உணர்த்துகிறது. இவர்களுடைய சித்தாந்தம் உருவாக்கிய சூழ்நிலைதான் நாதுராம் கோட்சே மூலம் காந்தியை படுகொலை செய்ய வழிவகுத்தது!" எனக் காட்டமாக பதிலடி கொடுத்திருக்கிறார்.

அதேபோல மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவரான பவன் கேரா, ``மோடி பிரதமராவதற்கு முன்பு, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மகாத்மா காந்தியின் சிலைகள் நிறுவப்பட்டன!" எனத் தெரிவித்திருக்கிறார்.

ஜெய்ராம் ரமேஷ்

அதைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியும் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் கல்வித் தகுதியைக் குறிப்பிட்டு விமர்சனம் செய்திருக்கிறார். அதாவது ராகுல்காந்தி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், ``Entire Political Science படிக்கும் மாணவர்தான் மகாத்மா காந்தியை திரைப்படம் பார்த்து தெரிந்து கொள்வார்!" என பிரதமர் மோடியை விமர்சித்திருக்கிறார். பிரதமர் மோடி தனது வேட்புமனுவில் Entire Political Science என்ற முதுகலைப் பட்டப் படிப்பை கல்வி தகுதியாக குறிப்பிட்டிருப்பது சர்ச்சையாகியிருந்த நிலையில், அதைவைத்தே மோடியின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் ராகுல்காந்தி.

இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``உலக நாடுகளில் இந்தியா என்று சொன்னாலே மகாத்மா காந்தியின் நினைவு தான் அனைவருக்கும் வரும். உலக நாடுகளுக்கெல்லாம் வழிகாட்டியாக வாழ்ந்து காட்டியவர். மனிதர்களை அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்தும் அடக்குமுறைக்கு எதிராக மனித சமுதாயத்தின் சுயமரியாதைக்காக அகிம்சை முறையில் போராடி தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராக நீதியை நிலைநாட்டியவர் காந்தியடிகள்.உலகமே வன்முறை தான் வாழ்க்கை, வன்முறை தான் கடைசி ஆயுதம் என்று எண்ணிக் கொண்டிருந்த போது, அதற்கு எதிராக அகிம்சை போராட்டத்தை நடத்தி உலகத்தின் கவனத்தை ஈர்த்தவர் காந்தியடிகள்.

ராகுல் காந்தி

நாட்டு மக்களிடம் அன்பை மட்டுமே காட்டிய அவரை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினாலும், இந்து மகாசபையை சேர்ந்த சாவர்க்கரினாலும் மூளை சலவை செய்யப்பட்டு மதவெறி தூண்டப்பட்டு வெறுப்பினால் நாதுராம் கோட்சே மகாத்மா காந்தியை படுகொலை செய்தார். படுகொலை செய்தவர் நாதுராம் கோட்சே. ஆனால், அவரது கொலை முயற்சிக்கு பின்னால் ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபை சித்தாந்தம் அடங்கியிருப்பதை எவரும் மறுக்க முடியாது.

2008-ல் மலேகான் பயங்கர குண்டு வெடிப்பில் 12 பேர் படுகொலைக்கு காரணமானவர் பிரக்யாசிங் தாகூர் என்று தேசிய புலனாய்வு முகமை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது. அவரை சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வரவைத்து அவரை மத்திய பிரதேச மாநிலம், போபால் மக்களவை தொகுதியில் போட்டியிட வைத்து ஒரு பயங்கரவாதியை நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கியவர் நரேந்திர மோடி. வெற்றி பெற்றதற்கு பின்னாலே காந்தியடிகளை கொன்ற கோட்சேவை ஒரு தியாகி என்று புகழ்ந்து பேசிய பிரக்யாசிங் தாகூரை ஒரு வார்த்தை கூட கண்டிக்காமல் மவுனமாக இருந்தவர் தான் பிரதமர் நரேந்திர மோடி.

செல்வப் பெருந்தகை

மகாத்மா காந்தியின் புகழ் என்பது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., வகுப்புவாத சக்திகளின் வரம்பு எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. தேசத்தின் தந்தை என்று இந்திய மக்கள் மட்டுமல்லாமல் உலக நாடுகளின் தலைவர்களாலும், மக்களாலும் போற்றி பாராட்டப்பட்டவர். அதனால், காந்தியடிகள் பிறந்த அக்டோபர் 2 ஆம் நாளை ஐ.நா. சபை அகிம்சை தினமாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. இத்தகைய புகழுக்கு உரியவரான காந்தியடிகளைத் தான் அட்டன்பரோ சினிமாவாக எடுக்க வேண்டும் என்று நினைத்தாரேயொழிய அவர் சினிமாவாக எடுத்ததால் தான் உலக மக்களால் காந்தியடிகள் அறியப்பட்டார் என்பது நரேந்திர மோடியின் நீண்டகால அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாகும். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்திற்கு அருகில் அவரது படுகொலையின் குற்றவாளியாக கருதப்பட்ட சாவர்க்கரின் படத்தையும் பா.ஜ.க. அரசு திறந்து வைத்தது. அத்தகைய கொடிய பாவத்தை செய்த பா.ஜ.க.வையும், காந்தியடிகளை சிறுமைப்படுத்துகிற நரேந்திர மோடியையும் இந்திய நாட்டு மக்கள் என்றைக்குமே மன்னிக்க மாட்டார்கள். அதற்கு உரிய தண்டனையை வருகிற நாடாளுமன்றத் தேர்தல் முடிவின் மூலம் மக்கள் வழங்கப் போவது உறுதி!" எனக்கூறி கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from Vikatan Latest news https://ift.tt/qQJ5c6L

Post a Comment

0 Comments