சென்னை எம்.ஜி.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்த மூதாட்டியை, 2 சவரன் நகை மற்றும் பணத்திற்காக உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்து அடையாறு ஆற்றில் வீசிய தம்பதியை விருதுநகரில் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "சென்னை எம்.ஜி.ஆர். நகர் மயிலை சிவமூர்த்தி தெருவை சேர்ந்தவர் விஜயா (வயது 78). கட்டட தொழிலாளியான விஜயா, பகுதிநேரமாக ஹோட்டல்களிலும் வேலை செய்து வந்துள்ளார். விஜயாவுக்கு லோகநாயகி எனும் மகள் உள்ளார்.
லோகநாயகிக்கு திருமணமாகி, தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 18-ம்தேதி லோகநாயகியின் பிள்ளைகள், தனது பாட்டி விஜயாவை பார்ப்பதற்காக அவரின் வீட்டிற்கு வந்துள்ளனர். ஆனால் வெகுநேரமாகியும் விஜயா வீட்டிற்கு வராததால், பேரப்பிள்ளைகள் இதுகுறித்து தனது தாய் லோகநாயகிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்த லோகநாயகி, தனது அம்மா வேலை செய்து வரும் ஹோட்டல்களுக்கு நேரில் சென்று விசாரித்துள்ளார். ஆனால் விஜயாவை பற்றி எந்த ஒரு உறுதியான தகவல்களும் கிடைக்கவில்லை. இதையடுத்து 19-ம் தேதி, தாய் மாயமானது குறித்து, எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில் லோகநாயகி புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீஸின் விசாரணையின்போது விஜயாவுக்கு பக்கத்து வீட்டில் வசித்து வந்த பார்த்திபன் எனும் நபரும் தன்னார்வத்துடன் வந்து விசாரணைக்கு உதவியிருக்கிறார். இதனால் பார்த்திபன் மீதும் போலீஸாருக்கு லேசான சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் மூதாட்டி மாயமானது தொடர்பாக சி.சி.டி.வி.கண்காணிப்பு கேமராவினை போலீஸார் ஆய்வு செய்து பார்த்தனர். இதில், இரவு நேரத்தில் பார்த்திபன் விஜயாவின் வீட்டுக்குள் புகுந்து மூட்டை ஒன்றை கட்டி எடுத்துக்கொண்டு தனது டூவீலரின் முன்பக்கத்தில் வைத்துக் கொண்டு புறப்பட்டு செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதைபார்த்த போலீஸாருக்கு சந்தேகம் வலுத்தது. எனவே பக்கத்து வீட்டுக்காரரான பார்த்திபனை விசாரணைக்கு அழைக்க அவரின் வீட்டுக்கு நேரில் சென்று பார்த்தனர். அப்போது அவரின் வீடு பூட்டப்பட்டிருந்தது.
எனவே, மூதாட்டி விஜயாவை, பார்த்திபன் கொன்றிருக்கலாம் என்ற சந்தேகக்கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தினர். தொடர்ந்து பார்த்திபனின் செல்போன் சிக்னல்களை போலீஸார் ஆய்வு செய்து பார்த்ததில் அவர் விருதுநகரில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. உடனே, பார்த்திபன் தொடர்பான தகவல்களை விருதுநகர் மாவட்ட காவல்துறைக்கு தெரிவித்த எம்.ஜி.ஆர்.நகர் போலீஸார் அவரை கண்காணிப்பில் வைக்கும்படி கேட்டுக்கொண்டனர். அதன்பேரில், விருதுநகர் சவுண்டி தெருவில் தனது சகோதரியின் வீட்டில் அடைக்கலம் புகுந்திருந்த பார்த்திபன் மற்றும் அவரின் மனைவி சங்கீதாவை சுற்றிவளர்த்த போலீஸார் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இதைத்தொடர்ந்து விருதுநகர் வந்த சென்னை தனிப்படை போலீஸார் பாரத்திபனிடம் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின.
மூதாட்டி விஜயாவை நகை மற்றும் பணத்திற்காக உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்ததோடு அவரின் உடலை அடையாறு ஆற்றில் வீசியதாக பார்த்திபன் கூறியது போலீஸை அதிர்ச்சியடைய செய்தது. இதுதொடர்பாக பார்த்திபனிடம், போலீஸார் தொடர் விசாரணை நடத்தியதில், 'கூலி தொழிலாளியான மூதாட்டி விஜயாவிடம், பார்த்திபன் அடிக்கடி வீட்டுச் செலவுக்கு பணம் கேட்டுப் பெறுவதை வழக்கமாக கொண்டுள்ளார். கழுத்து மற்றும் காதுகளில் இரண்டு சவரனுக்கும் குறையாமல் தங்க நகை அணிந்திருக்கும் விஜயா, தனது சுருக்குப்பையில் 20 ஆயிரத்திற்கும் குறையாமல் பணம் வைத்திருப்பாராம். விடுமுறைக்காக வீட்டிற்கு வரும் அவரின் பேரக்குழந்தைகளுக்கு, விஜயா ஆயிரக்கணக்கில் செலவு செய்வதை பார்த்திபன் கவனித்திருக்கிறார். அதேசமயம் குடும்பம் நடத்தவே சிரமப்பட்டு வந்த பார்த்திபன், மிகுந்த பணக்கஷ்டத்தில் தவித்திருக்கிறார்.
எனவே மூதாட்டி விஜயாவிடமிருந்து குடும்ப செலவுக்கு பெரிய அளவில் பணத்தை வாங்கிவிட வேண்டும் என தீர்மானித்துள்ளார். இதற்காக, 18-ம் தேதி காலையில் விஜயா வேலைக்கு செல்வதற்கு முன்பாக அவரின் வீட்டுக்குள் புகுந்த பார்த்திபனும், சங்கீதாவும் வீட்டு செலவுக்கு பணம் கேட்டுள்ளார். ஆனால் பணம் கொடுக்க விருப்பமில்லாத விஜயா, தற்போது தன்னிடம் பணம் எதுவும் இல்லை. ஆகவே, ஏற்கனவே நான் கடனாக கொடுத்த பணத்தை திருப்பித்தந்துவிடுங்கள்' என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தம்பதியினர் விஜயாவின் சுருக்கு பையில் இருக்கும் பணத்தைக் கேட்டு மிரட்டி உள்ளனர். ஒருக்கட்டத்தில் விஜயாவுக்கும், பார்த்திபன்-சங்கீதா தம்பதிக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் விஜயாவின் சுருக்கு பையை பிடுங்கி அதிலிருந்து பணத்தை பார்த்திபன் பறித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்து விஜயா சத்தம் போடவும், சங்கீதா அவரின் வாயை பொத்தியுள்ளார். இதற்கிடையில் வீட்டுக்குள் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து விஜயாவின் தலையில் பார்த்திபன் ஓங்கி அடித்துள்ளார். இதில்நிலைகுலைந்து சம்பவ இடத்திலேயே விஜயா மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து விஜயாவின் காது மற்றும் மூக்கில் கிடந்த 2 சவரன் தங்க நகைகளையும், சுருக்குப் பையில் இருந்த 30,000 ரூபாய் பணத்தையும் எடுத்துக்கொண்ட பார்த்திபன்-சங்கீதா தம்பதியினர், உயிரிழந்த விஜயாவின் உடலை சாக்குப் பையில் போட்டு மூட்டையாகக்கட்டி வீட்டின் ஒரு மூலையில் வைத்துவிட்டு எதுவும் நடக்காதது போல வெளிவந்துள்ளனர்.
தொடர்ந்து விஜயாவை காணவில்லை என்ற தகவலை அறிந்து அவரின் உறவினர்களும், போலீஸாரும் தேட ஆரம்பிக்கும் நிலையில், போலீஸ் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக மனைவி சங்கீதாவுடன் விருதுநகரில் உள்ள தனது உறவினருக்கு வீட்டுக்கு செல்ல முடிவெடுத்துள்ளார். அந்த திட்டத்தின்படி, நள்ளிரவில் விஜயாவின் வீட்டுக்குள் புகுந்த பார்த்திபன், தான் மூட்டையில் கட்டி வைத்திருந்த விஜயாவின் பிணத்தை எடுத்து துண்டு,துண்டாக வெட்டி சாக்கில் போட்டு மூடி டூவீலரில் முன்பக்கம் எடுத்துக்கொண்டு விருதுநகர் நோக்கி டூவீலரில் புறப்பட்டுள்ளார். செல்லும் வழியில் அடையாறு ஆற்றில் விஜயாவின் உடலை வீசிவிட்டு, அவர்களின் திட்டப்படி விருதுநகருக்கு டூவீலரிலேயே வந்துள்ளனர். இந்தநிலையில் தான், இருவரும் போலீஸிடம் சிக்கிக் கொண்டனர்.
தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்த தனிப்படையினர், பார்த்திபன் - சங்கீதாவை நேற்று காலை சென்னை அழைத்துவந்தனர். இதையடுத்து அடையாறில் விஜயாவின் உடல் வீசப்பட்ட இடத்தை பார்த்திபன் அடையாளம் காட்டியதை தொடர்ந்து, தீயணைப்பு மீட்பு வீரர்கள் மூலம் விஜயாவின் உடலை தேடும் பணி நடைபெற்றது. மாயமாகி கிட்டத்தட்ட 9 நாட்கள் கழிந்தநிலையில் அடையாறு ஆற்றிலிருந்து அவரின் உடல் அழுகியநிலையில் பிணமாக மீட்கப்பட்டது. தொடர்ந்து அவரின் உடல், அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட பார்த்திபன்-சங்கீதா தம்பதியிடம் போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகிறனர்" எனக் கூறினர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from Vikatan Latest news https://ift.tt/pvg4bte
0 Comments