மண்டலகால மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் திருநடை நவம்பர் 15-ம் தேதி திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பம்பா, சபரிமலை சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரியும் போலீசார் குறிப்பிட்ட நாள்கள் பணி செய்த பின்னர் ஓய்வு கொடுப்பதற்காக அடுத்த போலீஸ் டீம் பணியமர்த்தப்படுவது வழக்கம். பதினெட்டாம் படியில் பக்தர்களை ஏற்றி விடுவது மற்றும் சன்னிதான பாதுகாப்பு பணிக்காக ஈடுபட்டுள்ள போலீசார் ஷிப்ட் முறையில் மாற்றப்படுவார்கள். இந்த நிலையில் முதல் பேட்ச் போலீசார் கடந்த சில நாள்களுக்கு முன்பு பணியை நிறைவு செய்துவிட்டு சபரிமலையில் இருந்து கீழே இறங்கிச் செல்லும் நிகழ்வு நடைபெற்றது.
அதற்கு பதிலாக புதிய போலீஸ் டீம் பாதுகாப்புக்காக சன்னிதானத்தில் நியமிக்கப்பட்டனர். ஏற்கெனவே பணி செய்த போலீஸ் அதிகாரிகள் சுமார் 28 பேர் 18 படியில் ஏறி நின்று, சன்னிதானம் கருவறைக்கு பின்பக்கம் காட்டியவாறு திரும்பி நின்று போட்டோ எடுத்துக் கொண்டனர். அந்த போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதற்கு இந்து அமைப்புகள் மற்றும் பக்தர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
சபரிமலை செல்லும் பக்தர்கள் ஐயப்ப சுவாமி கோவிலைப் போன்று பம்பாநதி, பதினெட்டாம் படி போன்றவற்றையும் புனிதமாக கருதுகின்றனர். பம்பையில் புனித நீராடினால் பாவங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதுபோன்று பதினெட்டாம் படியை தொட்டு வணங்கி அதில் ஏறிச்சென்றால் வாழ்வு உயரும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. சபரிமலை கோயில் தந்திரி, மேல்சாந்தி ஆகியோர் ஐயப்பன் கோயில் நடையை சார்த்திவிட்டு கீழிறங்கி வரும்போதுகூட சுவாமி கோயிலை பார்த்தபடி பின்புறமாக படி இறங்குவார்கள். ஆனால் போலீஸார் ஐயப்ப சுவாமி கருவறைக்கு பின்புறம் காட்டியவாறு நின்றது ஆச்சாரத்துக்கு புறம்பானது என கண்டனம் எழுந்தது.
சபரிமலையில் பணிபுரியும் போலீசார் ஆச்சார அனுஷ்டானங்களை கடைபிடிக்க வேண்டும் என்று ஏற்கெனவே டி.ஜி.பி அறிவுறுத்தி இருந்தார். இந்த நிலையில் சபரிமலையில் புனிதத்தை கழங்கப்படுத்தும் விதமாக சன்னிதானத்திற்கு பின்புறத்தை காட்டியவாறு பதினெட்டாம் படியில் ஒவ்வொரு படியிலும் அதிகாரிகள் நின்றபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தது கடும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிகழ்வு சரியானது அல்ல என கேரளா ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுகுறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும் படி தேவசம்போர்டு மற்றும் சபரிமலை எக்ஸிகியூட்டிவ் ஆபீஸருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி-யும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
from Vikatan Latest news https://ift.tt/yUbCPes
0 Comments