https://gumlet.vikatan.com/vikatan/2026-03-22/q6uoteiu/Screenshot-2026-03-22-074402.jpg?w=280செங்கல்பட்டு, காட்டூர் உத்தர வைத்திய லிங்கேஸ்வரர்: ஆரோக்கியம் பெருகும்; கடன் தொல்லை தீரும்!

ஈசனின் திருக்கல்யாணத்தை முன்னிட்டு பிரபஞ்ச உயிர்கள் அனைத்தும் கயிலாயத்தில் திரள வடதிசை உயர்ந்து தென் திசை தாழ்ந்தது. அதை சமன் செய்ய ஈசன் அகத்திய மாமுனியை தென் திசை அனுப்பினார். அதற்காகப் பொதிகை மலை வந்த அகத்தியர், ஈசனின் திருமணக் காட்சியைக் கண்டபின் தென் திசைத் தலங்கள் ஒவ்வொன்றாக தரிசித்து அங்கே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அப்படி அவர் வழிபட்ட தலங்கள் அனைத்தும் மிகவும் மகிமை நிறைந்தவை. அப்படி ஒரு தலம் தான் காட்டூர் ஸ்ரீ உத்தர வைத்தியலிங்கேஸ்வரர்.

திருப்போரூரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது காட்டூா். இங்கு இறைவன், ஸ்ரீதையல்நாயகி சமேத ஸ்ரீஉத்தர வைத்தியலிங்கேஸ்வரராக அருள்பாலிக்கிறார். இத்தலத்துக்கு சென்னை தாம்பரம், கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது.

காட்டூர் உத்தர வைத்திய லிங்கேஸ்வரர் கோயில்
காட்டூர் உத்தர வைத்திய லிங்கேஸ்வரர் கோயில்

வைத்தீஸ்வரன்கோவில் புகழ்பெற்ற தலம். அந்தத் தலத்துக்கு இணையானது என்பதால் இதற்கு உத்தர வைத்தீஸ்வரம் என்று பெயர் உண்டானது.

இத்தலத்தில் அகத்தியருக்கு இறைவன் திருமணக்கோலத்தைக் காட்டியருளிய தலம் என்பதால் காட்டூர் எனப்பட்டது. முற்காலத்தில் இந்தத் தலத்தில் நான்மறைகளையும் ஓதும் அந்தணர்கள் இருந்து ஓதியதால் மறைஊா் என்று பெயர் பெற்றது என்கிறார்கள்.

திருப்போரூா் முருகனின் பரிபூரண அருளைப் பெற்றவரும் ‘திருப்போரூா் சந்நிதி முறை’ என்ற நூலின் ஆசிரியருமான ஸ்ரீசிதம்பரம் சுவாமிகளும் இந்தத் திருக்கோயிலுக்கு வருகை தந்து ஈசனை தரிசித்து மகிழ்ந்துள்ளார்.

இங்கு எழுந்தருளியிருக்கும் ஈசனின் திருமேனி காசியில் இருந்து கொண்டுவரப்பட்டது. எனவே மிகவும் சாந்நித்தியம் நிறைந்தது என்கிறார்கள். இந்த ஈசனை சித்த புருஷர்கள் அரூபமாக தரிசனம் செய்து பூஜித்துவருவதாகவும் அவர்கள் ஓதும் பிரணம மந்திர ஒலி இங்கே இரவில் கேட்பதாகவும் சொல்கிறார்கள் பக்தர்கள்.

காட்டூர் உத்தர வைத்திய லிங்கேஸ்வரர் கோயில்

இங்கு அன்னை தையல்நாயகி மிக எழிலுடன் திகழ்கிறாள். அன்னையின் திருமுக தரிசனம் காணக் கண்கோடி வேண்டும். கருவுற்றிருக்கும் பெண்கள், மூன்று வெள்ளிக் கிழமைகள் இங்கு வந்து, அம்பிகையை தரிசனம் செய்து நெய்தீபம் ஏற்றி வணங்கினால் சுகப்பிரசவம் நடக்கும் என்கிறார்கள் ஊர் மக்கள். மேலும், கர்ப்பப்பை தொடா்பான பிணிகளால் அவதியுறும் பெண்கள், தங்களால் இயன்றபோது இந்தத் தலத்துக்கு வந்து நெய்தீ்பம் ஏற்றிவைத்து அம்பிகையை வழிபட்டால், பிணி நீங்கி ஆரோக்கியம் பெறுவார்கள் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

இத்தலத்தின் தல விருட்சம் பனையும் வேம்பும் ஆகும். இத்தலத்தின் தீர்த்தங்களாக சித்தாமிர்தத் தீா்த்தமும் சிவகங்கைத் தீா்த்தமும் திகழ்கின்றன. இவற்றில் சித்தாம்ருதத் தீர்த்தம் துளசித் தீா்த்தச் சுவையுடன் திகழ்வது, சிறப்பம்சமாகும்.

இதில் நீராடி ஈசனை தரிசிப்பதால், எல்லா விதமான நோய்களும் பாவங்களும் நீங்கப் பெற்று வாழ்வில் வளம் பெறலாம். உடல் நலிவுற்றவா்களுக்காக அவா்களின் உறவினா்கள் மனமுருகி வேண்டிக்கொண்டு, இந்தத் தீா்த்த நீரை எடுத்துச்சென்று நோயாளிகளை அருந்தச் செய்தால், விரைவில் நோய் நீங்கி நலம் பெறுவார்கள் என்கிறார்கள் பலன் கண்ட பக்தர்கள்.

வைத்தீஸ்வரன்கோவிலைப்போலவே இங்கும் அங்காரகனுக்குத் தனிச்சந்நிதி அமைந்திருக்கிறது. அங்காரகனை முறைப்படி வழிபட்டால் பூமி, செல்வம், செல்வாக்கு ஆகியவற்றை நியாயமான வழியில் அபரிமிதமாகப் பெறலாம். மேலும் கடன் தொல்லைகளிலிருந்து விடுபடலாம் என்கின்றன ஜோதிட நூல்கள். எனவே, அங்காரக தோஷம் உள்ளவா்கள் இங்கு வந்து வழிபாடு செய்தால், எல்லா நலன்களையும் பெறலாம்.

காட்டூர் உத்தர வைத்திய லிங்கேஸ்வரர் கோயில்

அதேபோல், ஜாதகத்தில் அங்காரக (செவ்வாய்) தோஷம் காரணமாக திருமணத்தடை உள்ள அன்பா்கள், இங்கு வந்து தையல்நாயகி சமேத உத்தர வைத்தியலிங்கேஸ்வரப் பெருமானை வழிபாடு செய்தால், தோஷம் நீங்கி மனதுக்கினிய வாழ்க்கைத்துணை அமையப் பெறுவா் என்பது ஐதிகம்.

வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை உத்தர வைத்தீஸ்வரன்கோவில் எனப்படும் காட்டூருக்குச் சென்று ஸ்ரீவைத்தியலிங்கேஸ்வரரை வழிபட்டு வாருங்கள். வாழ்வில் ஆரோக்கியம் மிகுந்து நன்மைகள் அதிகரிக்கும்.



from Vikatan Latest news https://ift.tt/OClGZ8m

Post a Comment

0 Comments