ஈசன் வைத்தீஸ்வரர் என்கிற திருநாமத்தோடு அருள்பாலிக்கும் தலங்கள் அநேகம். அந்தத் தலங்களில் வழிபட்டால் நோய்கள் விலகி ஆரோக்கியம் மேம்படுவதோடு வாழ்வில் நன்மைகளும் நடந்தேறும். அப்படிப்பட்ட ஒரு தலமாகத் திகழ்கிறது விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அருகே அமைந்திருக்கிறது சிந்தாமணிநல்லூர். விழுப்புரம் - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரத்திலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவு பயணித்தால் இந்த அழகிய ஊரை அடையலாம்.
இங்குள்ள வைத்தீஸ்வரர் கோயில், சுமார் 900 வருடங்கள் பழைமையானது. அம்பாளின் திருப்பெயர் தையல்நாயகி. விக்கிரமச்சோழன் காலத்துக் கோயில் இது. அந்தக் காலத்தில் `ஸ்ரீகயிலாச குலோத்துங்க சோழீஸ்வரமுடைய மகாதேவர்’ என்ற திருப்பெயரில் வணங்கப்பட்டுள்ளார் இந்த இறைவன். விக்கிரமச் சோழனின் தந்தை, குலோத்துங்கனின் பெயரால் இந்தத் தலத்தை விக்கிரமச் சோழன் நிர்மாணித்துள்ளான் என்பதை அறிய முடிகிறது.
அதேபோல், மன்னரின் தாயார் மதுராந்தகி (எ) தினசிந்தாமணியின் நினைவாக, இந்த ஊருக்கு ‘தினசிந்தாமணி நல்லூர்’ எனும் திருப்பெயரைச் சூட்டியிருக்கிறான் விக்கிரம சோழன். காலப்போக்கில் அதுவே, 'சிந்தாமணிநல்லூர்' என்றாகிவிட்டது.
கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இந்தக் கோயில். ராஜகோபுரம் இல்லை என்றாலும், கருங்கல் கட்டுமானமும் தெய்வச் சிற்பங்களும் நம் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. பிட்சாடனர், நர்த்தன விநாயகர், ஊர்த்துவ தாண்டவர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் அற்புதத் திருமேனிகளாக அருள்பாலிக்கின்றன.
பிரம்மன், மணக்கோல சிவ பார்வதியர், துர்கை, கால பைரவர், பிரசன்ன பக்த ஆஞ்சநேயர் ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம். வெகு அபூர்வமாக இந்தக் கோயிலில் சித்திர - விசித்திரகுப்தர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. பெளர்ணமி நாள்களில் இவர்களுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. குடும்பத்துடன் வந்து இந்த வைபவத்தில் கலந்துகொண்டு சித்திர-விசித்திரகுப்தரை தரிசித்து வழிபட்டால், எம பயம் நீங்கும்; மரண உபாதைகள் விலகும். உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஆயுள் பலம் பெருகும்!
இந்த ஆலயம் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ளது. ஒரு கால பூஜை திட்டத்தில் உள்ளது. தைப்பூசம், பிரதோஷம், பௌர்ணமி, துர்கை பூஜை, தேய்பிறை அஷ்டமி, குரு பூஜை, முருகனுக்குக் கிருத்திகை வழிபாடு, நவகிரக வழிபாடு, ஆருத்ரா வழிபாடு, ஆஞ்சநேயர் ஜயந்தி, மாசி மகா சிவராத்திரி ஆகியவை இங்கே சிறப்புற நடைபெறுகின்றன.
தல விருட்சமாக மகிழ மரம் உள்ளது. கருவறையில் லிங்கத் திருமேனியராக ஈசன் எழில் கோலம் காட்டுகிறார் அருள்மிகு வைத்தீஸ்வரர். அம்பாள் தையல் நாயகியும் தனிச் சந்நிதியில் அருள்கிறாள். `இருவருமே வேண்டும் வரம் தரும் வரப்பிரசாதியர்’ என்கிறார்கள் பக்தர்கள்.
சிதம்பரம் அருகிலுள்ள வைத்தீஸ்வரன்கோவிலுக்குச் செல்ல இயலாதவர்கள், இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டு வரம் பெறலாம் என்பது நம்பிக்கை. கடும் காய்ச்சல், தீராத வயிற்றுவலி முதல் சாதாரண மருந்துகளுக்கு எளிதில் கட்டுப்படாத எவ்வித பெரும்பிணிகளாக இருந்தாலும் இந்தச் சிந்தாமணிநல்லூருக்கு வந்து, மூலவரான வைத்தீஸ்வரரை தரிசித்து, மனமுருகி வழிபட்டுச் சென்றால், அனைத்து வகையான பிணிகளும் தீரும் என்பது நம்பிக்கை.
மாதம்தோறும் பௌர்ணமி, அமாவாசை ஆகிய நாள்களில் இந்த ஆலயத்தில் தங்கியிருந்து வழிபட்டுச் சென்றால், காரியத் தடைகளும் சிரமங்களும் அகன்று, மனதில் நினைத்த காரியங்கள் விரைவில் நிறைவேறும் என்கிறார்கள்.
பொதுவாக சிவாலயங்களில் ஐப்பசிப் பெளர்ணமியில் ஈஸ்வரனுக்கு அன்னாபிஷேகம் நிகழும். இந்தக்கோயிலில் மகாளய அமாவாசை அன்று தையல்நாயகிக்கு அன்னாபிஷேகம் நடைபெறுமாம். அன்றைய தினம் பெண்கள் இந்தக் கோயிலுக்கு வந்து அம்பாளை தரிசித்து வழிபட்டால், குடும்பத்தில் சகல சௌபாக்கியமும் உண்டாகும். திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் கல்யாணம் தகையும்; மனதுக்கினிய மணவாளன் அமைவார் என்பது நம்பிக்கை.
கல்யாண வரம் வேண்டி வரும் பக்தர்கள், இங்குள்ள நர்த்தன விநாயகரையும் வேண்டி வழிபட்டுச் செல்கிறார்கள். இவரை வேண்டிக்கொண்டால் கல்யாண தோஷங்கள் விலகும் என்பது ஐதிகம். மட்டுமன்றி, நாக தோஷப் பரிகாரத் தலமாகவும் இந்தக் கோயில் திகழ்கிறது.
பிள்ளை வரம் வேண்டி வரும் தம்பதியர் இந்தக் கோயிலில் உள்ள வில்வ மரத்தில் தொட்டில் கட்டி, ஆலயத்தை முறைப்படி வலம் வந்து அம்பாளையும் மூலவரையும் வழிபட வேண்டும். இதன் மூலம் கிரகதோஷங்கள் மற்றும் பாதிப்புகள் நீங்கும்; விரைவில் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
தைப்பூசத்துக்கு மறுநாள் இங்கே நடைபெறும் இடும்பன் பூஜை பிரசித்திபெற்றது. இந்தப் பூஜையில் படைக்கப்படும் உணவை குழந்தை வரம் அருளும் மாமருந்தாகக் கருதுகிறார்கள் பக்தர்கள். கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு, மண்டியிட்டு இந்தப் பிரசாதத்தைச் சாப்பிட்டால், குழந்தை வரம் நிச்சயம் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
தை மாதம் முதல் வாரம் ஏதேனும் இரண்டு நாள்களில் காலை 6 முதல் 7 மணிக்குள் சூரியன் தன் கிரணங்களால் இறைவனை பூஜிப்பது வழக்கமாம். ஆனால், தற்போது ஆலயத்தின் எதிரே மரம் வளர்ந்து கிளை விரித்து நிற்பதால், சூரியக் கதிர்கள் இறைவனை தரிசிப்பத்தைக் காண முடியவில்லை என்கிறார்கள்.
from Vikatan Latest news https://ift.tt/KjwW4tc
0 Comments